Home | About Me | E-Mail |

அன்றைக்கும் பொழுது விடிந்தது. சூரியனின் கதிர்கள் அழுத்தமாய் என்னைத் தீண்டித்தான் சென்றது. வெய்யில் சுளீரென நெற்றியில் உரைத்தது. கண்களை திறக்கலாமா வேண்டாமா என்று மனது பட்டி மன்றம் நடத்தியது. "எழுந்து போயேன்" மூளை என்னைக் கெஞ்சியது.

சரி.எழுந்து?........

மனது யோசித்துச் சொன்னது. முதலில் குளி. நேற்றைப் போலவே இன்றும் ஏதாவது குழம்பு வை. துவைத்துக் காயப் போட்ட உனது புடவைகளை மடித்து வை. எச்சில் பருக்கைகள் நிறைந்து கிடக்கும் தட்டுக்களை கழுவி வை. வேலைக்குப் போன உனது தந்தையும், பக்கத்து வீட்டுப் பெண்ணின் விசேஷத்திற்குப் பட்டுப் புடவை சரசரக்கச் சென்ற அம்மாவும் திரும்பி வரும் வரை, டீவி பார். வாரமலர் நடுப்பக்க கிசுகிசுக்களைப் படி. பொழுது போகும். இல்லைன்னா மல்லிகா பத்ரிநாத் "மிளகு இட்லி செய்வது எப்படி?" ன்னு பெண்கள் மலரில் எதாவது டிப்ஸ் கொடுத்திருப்பார் அதைப் படி. அதுவும் இல்லையா? மறுபடியும் படுத்துத் தூங்கு.

இதைத்தானே நேற்றும் செய்தேன்?

ஆமாம் நேற்றும் இதைத்தான் செய்தாய். இன்றும் இப்படித்தான். ஏன்.... நாளையும் இப்படித்தான்.இதைத்தாண்டி வேறு எதுவும் உனக்கு விதிக்கப் பட்டிருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. வேறு என்ன செய்யத் தோன்றுகிறது உனக்கு?

நான் வேணா தையல் கத்துக்கிட்டுமா? டெய்லரிங், எம்பிராய்டரி இப்படி ஏதாவது பண்ணிட்டுருக்கலாமே.இல்லைன்னா இந்த பூ படம் எல்லாம் வரைஞ்சு செவுத்துல ஃபிரேம் பண்ணி மாட்டுவாங்களே. அதைக் கத்துக்கிறேன்....

ஹ்ம்ம்ம். தையல் மெஷின். உன்னை மாதிரி ஆளுங்களுக்கு கரெக்டா இருக்கும். சரி என்ன பூவை வரைஞ்சு நீ என்ன பண்ணப் போற? அப்படியே நீ பூ வரைஞ்சாலும், அதை யாரும் வாங்குவாங்களா? நீ பேசாம டெய்லரிங்கே கத்துக்கோ......

ஹ்ம்ம்ம் சரி. ஆனா இன்னும் எத்தனை நாளைக்கு?

என்ன இன்னும் எத்தனை நாளைக்கு?

இப்படி வெளில எங்கேயும் போகாம, வீட்டுக்குள்ளேயே, வாரமலர், தையல் மெஷின், அவரைக்காய் குழம்பு ன்னு காலத்தை ஓட்டறது.....

வெளிலயா. போலாமே யார் வேணாம்னா. கோயிலுக்குப் போ. இல்லைன்னா பக்கத்து வீட்டு அக்கா கூட ஏதாவது படத்திற்குப் போ.

படமா வேணாம்பா. புருஷன் செத்த கவலை இல்லாம படம் பார்க்க வந்திருக்கா பாருன்னு எதிர்த்த வீட்டு மாமி சொல்லுவா. அதுவுமில்லாமல் படத்தில ஜோடியா யாரையாவது பார்த்தா உள்ள என்னமோ பண்ணுது. எப்படியும் ஃபர்ஸ்ட் நைட் சீனோ இல்லை டூயட்னு ஒரு கவர்ச்சிப் பாட்டோ இருக்கும். அதைப் பார்த்தா நைட் தூங்கவே முடியாது. அதனால படம் வேணாம். நான் இப்படியே சன் டீவியிலயே பார்த்துக்கறேன்.

அதுவும் சரிதான். வேணும்னா எதாவது விசேஷத்துக்குப் போ. ஆனா கவனமா இருந்துக்கோ. எந்த விசேஷத்துலயும் முன்னாடி நிக்காத. எங்கயாவது தூண் ஓரமாவே நின்னுட்டு இருந்துட்டு வந்துடு. உதவிதானே செய்யறோம்னு நினைச்சுக்கிட்டுப் போய் மேடையில போய் நிக்காத.

ஆமா ஆமா. அன்னிக்கே பாலா அண்ணன் வீட்டு குழந்தைக்கு பெயர் சூட்டுற விழாவிற்கு போய், குழந்தையை ஆசையா கொஞ்சிட்டிறுக்கறப்ப, அவங்க மாமியார், "நீ எல்லாம் குழந்தையை தொடாதம்மா"ன்னு ஒரு மாதிரி பேசிட்டாங்க. அதனாலதான் இன்னிக்கு பக்கத்து வீட்டு விசேஷத்துக்கும் நான் போகலை. அம்மா மட்டும் போய் இருக்காங்க.

ஹ்ம்ம் தெரியுதுல்ல.அப்புறம் என்ன? ஒண்ணு தெரிஞ்சிக்கோ. உனக்கு இதுதான். நீ இப்படித்தான் இருக்கணும். அவங்க யாரும் மாற மாட்டாங்க.

ஏன் எல்லாரும் இப்படி இருக்காங்க. நான் என்ன தப்பு செஞ்சேன்? என் மாமியாரு கூட எப்படிம்மா இருக்கேன்னு கேட்டு 2 மாசமா ஒரு போன் கூட பண்ணலை. எனக்கு மட்டும் ஏன் இப்படி? நானும் மத்தவங்க மாதிரி சந்தோஷமா இருந்தவதான. ஒரே நாள்ல ஒட்டு மொத்தமா எல்லாத்தையும் பிடுங்கி மூலைல உட்காருடீன்னு சொன்னா நான் எங்கே போவேன்.
உண்மையை சொல்லணும்னா என் புருஷன் செத்துப் போய்ட்டான் ங்கறதை விட நாளைக்கு நான் யாரு? ங்கறதை நினைக்கிறப்பதான் எனக்கு அழுகையா வருது.

சரி விடு. இதை இப்படியே வெச்சுக்கோ. வெளில சொல்லாத. எங்க காலம் மாதிரி வெள்ளைப் புடவை கட்ட சொல்றோமா? பூ வெக்க வேணாம்னு சொல்றோமா? இல்லை சினிமா பார்க்க வேணாம்னு சொல்றோமா? இப்போ நாங்க எல்லாம் இல்லை. என்னமோ இவ ஒருத்திதான் அறுத்துக் கட்டினவ மாதிரி பெரிசா பேசறா........அப்படின்னு ஊர்ல இருக்கிற உன் அப்பத்தாவே கேட்கும்.

மயிரு! போய் சொல்லு என் அப்பத்தா கிட்ட. "வாழறதுங்கறது உயிரோட இருக்கறது இல்லை. அதுக்கும் மேல...."

14 Comments:

  1. said...
    //"நல்லதோர் வீணை செய்தே.."//

    சூப்பர் தலைப்புங்க.


    சிட்டியில எப்படினு தெரியல. ஆனா நம்ம ஊர்ல இன்னும் இது மாதிரி நடந்துகிட்டுதான் இருக்கு.
    said...
    ஆமாம் J.K. இன்னமும் சிட்டியத் தவிர்த்த எல்லா ஊர்களிலும் இன்று இதுதான் நிலை. கண் முன்னே பலர் அந்த வலியை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்......
    said...
    Hi nandha,

    /மயிரு! போய் சொல்லு என் அப்பத்தா கிட்ட. "வாழறதுங்கறது உயிரோட இருக்கறது இல்லை. அதுக்கும் மேல...."/

    100% true...

    ( detailed comment in tamil later... )
    Anonymous said...
    நந்தா ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

    ஒரு பெண்ணோட மனசுக்குள்ள ஏற்படும் உணர்வுகளை, போராட்டங்களை, அழகா படம் பிடிச்சு காட்டி இருக்கீங்க.

    இதுல எனக்கு ரொம்ப பிடிச்சுதே, அவளுக்கும், அவ மனசுக்கும் இடையே நடக்கிற உரையாடலைப் போல இதைப் பதிவு செய்ததுதான்.

    ரொம்ப நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
    said...
    //100% true...

    ( detailed comment in tamil later... ) //

    விரிவான பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறேன். வருகைக்கு நன்றி அருட்பெருங்கோ....
    said...
    நந்தா,

    ஏன்டா காதல் கத்திரிக்காய் அது இதுனே எப்போவும் எழுதிட்டு இருக்கேனு எவ்ளோ பேர் சொன்னாலும் தோணாதது உங்க இந்த பொஸ்ட் பாக்கும் போது தோணுது. ச்சே ! சூப்பருங்கோ!

    ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க... எனக்கு தெரிஞ்சு இந்த மாதிரி யாரும் இல்லை..சோ அவ்வளவா reality பத்தி தெரியல‌! But very well said :)
    said...
    நன்றி சூர்யா....

    //ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க... எனக்கு தெரிஞ்சு இந்த மாதிரி யாரும் இல்லை..சோ அவ்வளவா reality பத்தி தெரியல‌! But very well said :) //

    நன்றி முகிலன்.

    இன்றும், நகரங்களைத் தவிர்த்த எல்லா ஊர்களிலும், இது இப்படியாகவே இருக்கிறது. ஆண்களை விட பெண்களிற்கு இதில் பாதிப்பு அதிகம். அதிலும் விசேஷங்களின் போதும் அவர்களின் அவஸ்தை இருக்கிறதே....

    தாமும் மற்றவர் போல அதில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை ஒரு புறம், யாரேனும் எதேனும் சொல்லுவார்களோ என்ற பயமும், தயக்கமும் மறுபுறம் என்று அவர்களது மன நிலை இருக்கிறதே, ரொம்ப கொடுமைங்க. தான் கட்டும் சேலையிலிருந்து தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் அவர்கள் வெகு ஜாக்கிரதையாகவே இருக்க நினைக்கிறார்கள். ஏனெனில் எப்போது வேண்டுமானாலும், அவர்கள் மீது ஒரு குற்றச் சாட்டு சாட்டப்படலாம். "புருஷனை இழ்ந்தவளுக்கு ஆனாலும் இம்புட்டு அலங்காரம் இருக்கக்கூடாது. அறுத்துக் கட்டினவ மாதிரியா நடந்துக்கறா? ச்சீ ச்சீ எல்லாம் கலிகாலம்".
    said...
    நந்தா, உங்களை எனக்குத் தெரியும் என்ற உரிமையில் ஒரு விமரிசனம்... அருமையாகப் போய்க்கொண்டிருந்த கதையைக் கடைசி வரி கெடுத்துவிட்டது :-( கவிதை, சிறுகதையில் கடைசி வரிகள் சக்தி வாய்ந்தவை. அதில் போய் அப்படி எழுதியிருக்கவேண்டாம் என்பது என் கருத்து. நல்ல கருத்து, நல்ல கதை, கடைசி வரி இன்னும் நாகரிகமாக எழுதப்பட்டிருந்தால் இதை அடித்துக்கொள்ள முடியாது.
    said...
    முதலில் உங்களுக்கு ஒரு பெரிய்ய நன்றி. குறையென மனதில்
    பட்டதை உரிமையாக சொன்னீர்களே அதுக்கு.

    அந்த வார்த்தையை அடக்கி வைக்கப் பட்ட ஒரு பெண்ணின் இயலாமையின் கோபமான
    வெளிப்பாடாகக் கருதி போட்டுள்ளேன். நீங்கள் சொன்னது போல கடைசி வரிகள் சக்தி வாய்ந்தவையாக இருக்க வேண்டும் என்பதற்காகவேதான் பல வார்த்தைகளை
    இட்டுப் பார்த்துத் திருப்தி அடையாமல் இதைச் சேர்த்தேன். எதிர்பாரா வகையில் இது சற்று உறுத்தலாகப் போய்விட்டது.

    எனக்குப் பிரச்சினையே, என்னிடம் கருத்து தெரிவித்தவர்களில் பாதிப் பேர் கடைசி வரிதான் சூப்பர் என்கிறார்கள். மீதிப் பாதி பேர் அந்த வார்த்தை கொஞ்சம் உறுத்துது நந்தா என்கிறார்கள்.
    said...
    நல்லா இருக்கு.

    தலைப்பு ரொம்ப சூப்பர்."நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியிலெறிவதுண்டோ". நச்சுன்னு இருக்கு.

    சூப்பருங்கண்ணா
    said...
    மன்னிக்கவும், மேலே உள்ளது தனி மடலின் மூலமாக நண்பர் கணேஷ் எனக்கு அனுப்பியது.
    said...
    நல்லா இருக்குங்க.. டைட்டில் கலக்கல்.
    said...
    ஒரு வேளை இப்படியிருக்குமோ நந்தா?

    //எங்க காலம் மாதிரி வெள்ளைப் புடவை கட்ட சொல்றோமா? பூ வெக்க வேணாம்னு சொல்றோமா? இல்லை சினிமா பார்க்க வேணாம்னு சொல்றோமா? இப்போ நாங்க எல்லாம் இல்லை. என்னமோ இவ ஒருத்திதான் அறுத்துக் கட்டினவ மாதிரி பெரிசா பேசறா........//
    இப்படி இப்ப சொல்ற அப்பத்தாவும் அப்ப தனக்கிது நடந்தப்ப அழுது பொலம்பியிருக்கும். அப்ப அதோட அப்பத்தா "எங்க காலத்துலயெல்லாம் தாலியறுத்தவங்களை புருஷங்காரனோடயே சிதையிலேத்திடுவோம். இந்த வெள்ளக்காரப் பயலுக சட்டத்தால இவளுகள இப்படி வீட்டுக்குள்ள வச்சு காபந்து பண்ன வேண்டியிருக்கு. காலங்கெட்ட காலத்துல எதாச்சும் ஏறுக்கு மாறா ஆச்சுன்னா, குடும்ப கவுரதை என்ன ஆறது? " அப்படின்னு புலம்பியிருக்கலாம். அதுனாலதான் இப்போ அதுக்கு தன் பேத்தி உயிரோட இருக்கறதே பெரிய கொடுப்பினையா தெரியுது போல. இந்த கற்பனைய எதுக்கு சொல்ல வர்றேன்னா, தலைமுறைகள் மாறும்போது மதிப்பீடுகளும் மாறுது அதுவும் ஏறுமுகமாத்தான் இருக்குன்றது கொஞ்சம் நம்பிக்கையளிக்கும் விஷயம் இல்லையா?
    said...
    நீங்கள் கூறியதும் சரிதான் லட்சுமி. மாற்றங்கள் ஏறுமுகமாக இருப்பது நிச்சயம் வரவேற்கத் தகுந்ததே. மாற்றங்கள் இன்னும் வேகமாக நடைபெற வேண்டும் என்பதாலேயே இதை நான் சொன்னேன். அந்த அப்பத்தாவும், முதன் முதலில் வெள்ளை சேலை கட்டியபோது இந்த உணர்வுகளைத் தாண்டித்தான் வந்திருக்கும்.

    ஆகையால் வேறு எவருக்கும் புரியாத உணர்வுகள் நிச்சயமாக அந்த அப்பத்தாவால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இங்கே எதிர்ப்பு வருவதே இது போன்ற போன தலைமுறைகளிடமிருந்துதான். எதிர்த்து ஏதும் செய்ய முடியா கையாலாகத் தனமும், எனக்கு உன் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்று ஒரு சின்ன வட்டத்திற்குள்ளேயே ஒப்பிட்டுப் பார்த்து சுய திருப்தி அடைந்து கொண்டு அப்படியே நீயும் இருந்து கொள் என்கின்ற அடக்குமுறையுமே இதன் காரணங்கள்.

    அன்னிக்கு எழுந்து மட்டும் நாம பெரிசா என்ன சாதிச்சுடப் போறோம் என்று ஒவ்வொரு நாளையையும் விரக்தியுடன் ஆரம்பிக்கும் ஒரு பெண்ணின் உணர்வை மேலும் வார்த்தைகளால் குதறிப் போடக் காத்திருக்கும் சமூகத்திடமிருந்து நான் எதிர்பார்ப்பது இன்னும் வேகமான மாற்றத்தையே.

Post a Comment