Home | About Me | E-Mail |

வலைப்பதிவுலக நண்பர்களிற்கு வணக்கம்.

இதுவரை http://nandhakumaran.blogspot.com என்ற வலைப்பதிவிலிருந்து எழுதிக் கொண்டிருந்த நான் இப்போது http://blog.nandhaonline.com எனும் சொந்த தளத்திளிருந்தே பதிவுகளை எழுதப்போகிறேன். தமிழ் மணத்திலும் பதிவு செய்தாயிற்று. முகவரியும், வார்ப்புரு மட்டுமே மாற்றம் பெற்றுள்ளது. மற்றவை எல்லாம் அப்படியேதான்.

காரணம் எல்லாம் பெரிசா ஒண்ணுமில்லீங்க. சொந்தத் தளத்திலேயே இயங்குவதால், புதிது புதிதாய் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதென்பது மிகவும் எளிது. பொறுப்புணர்ச்சியும் அதிகமாகும். வார்ப்புருக்களில் கொஞ்சமேனும் வித்தை காட்டலாம். எல்லாவற்றிற்கும் மேலாக இணையத்தில் தமிழ் மற்றும் வலைப்பதிவுகளின் அசுர வேக பரிணாம வளர்ச்சிக்கு தனித்தளத்திலிருந்து இயங்குவது முக்கியம் என்று நான் கருதுவதால், இதோ நானும் புது வீட்டைத் திறந்து காலடி எடுத்து வைத்திருக்கிறேன், உங்களின் ஆதரவும் நட்பும் தொடர்ந்து கிட்டும் என்ற நம்பிக்கையில்….

ட்ரிங் ட்ரிங்

என்னடா

இன்னிக்கு ஆஃபிஸ்ல இருந்து சீக்கிரம் வந்திடுப்பா

அடிப்பாவி! இப்பதான் வீட்டுல இருந்து கிளம்பி ஆஃபீஸ்க்கே வந்து சேர்றேன்.அதுக்குள்ள ஃபோனை போட்டு இன்னிக்கு சீக்கிரம் வரச் சொல்ற. இன்னிக்குன்னு பார்த்து இங்கயும் வேலை அதிகமா இருக்குமா.

போடா உனக்கென்ன! எனக்கென்னமோ இன்னிக்கு உன்கிட்ட நிறைய பேசணும்னு தோணுது. யேய் ப்ளீஸ்பா, இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் வாயேன்.

ம்ம்ம்... சரி இன்னிக்கு நான் சீக்கிரம் வந்துட்டா என்ன தருவ.

என்ன வேணும்.

நீயே சொல்லு.

ஹ்ம்ம். நேத்து ஆசையா கேட்டியே. நான் கூட வெட்கப்பட்டுக்கிட்டு மாட்டேன்னுட்டனே. அதைத் தரேன்.

என்ன கேட்டேன். மறந்துட்டனே.

திருடா தெரியாத மாதிரி நடிக்கறியா. அதான் முத்து படத்தில ரஜினி கேட்கற மாதிரி கேட்ட இல்லை. தரேன். போதுமா?

நிஜமா?

நிஜம்ம்ம்ம்ம்ம்மாதான்

அப்புறம் பேச்சு மாற மாட்டியே?

மாட்டேன்.

சத்தியமா?

சத்... யேய், நான் சொன்னா நம்ப மாட்டியா நீ.

சரி சரி நம்பறேன்.அதுக்கு முன்னாடி நீ ஃபோனை வெச்சுட்டு வந்து கதவைத் திற.

கதவை.....What? என்ன சொன்ன.

வந்து கதவைத் திற. தெரியும்.
...
...
...
...
...
...
...
...
...
...

ப்பச்சக்..


நாலு மணி நேரமா
அப்படி என்னதாண்டா
பேசுவீங்க?

எப்படி சொல்வது என் நண்பனிடம்?

ஒண்ணே ஒண்ணு கொடுவையும்,
மாட்டேனையும் தவிர
நாம் வேற எதுவுமே
பேசிக்கொள்ளவில்லை என்று.


இறுக்கியணைத்த உந்தன் கதகதப்போ,
காயங்கள் தந்த நகக் கீறல்களோ
'என் செல்லம்' எனும் உன் கொஞ்சலோ
சற்றும் சொல்லவில்லை.

நான் தூங்கிவிட்டதாய்
நினைத்துக்கொண்டு,
என் நெற்றிப்பொட்டில்
நீ தந்துவிட்டுப் போகும்
ஒற்றை முத்தத்தில்
தெரிந்துகொண்டேன்.
என் மீதான உன் காதலின் அளவை.Onne onnu koden.
Matten.
Please paaa.
Mudiyaadhunna mudiyaadhudhaan.
Podi.
Podaaaaaaaaaaa.

SMS ல் கூட
ஒற்றை முத்தத்தை
தர மறுக்கும்
உன் திமிரை விடவா
அழகிய கவிதையை
எழுதிவிடப் போகிறேன்???


பி.கு. இது கவிதையா,கதையா,மொக்கையா என்ன கருமம்டா இது? என்று கேட்க நினைக்கும் நண்பர்களிற்கு. இது "காதல்" அவ்வளவுதான்.

ஆன்மீகத்தின் பெயராலும், ஆகம விதிகளின் பெயராலும், கோயில்களில் நடைபெறும் மனித நேய மறுப்புகள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்த பின்புதான் நிற்குமோ என்பது எவராலும் அனுமானிக்க முடியாத ஒரு விஷயம்தான். ஒரு சில குறிப்பிட்ட சமுதாயத்தினரை கோயிலினுள்ளேயே நுழைய விடக்கூடாது என்று சொன்னதும், தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பதும், சொத்தை காரணங்களுக்காக கோயிலைப் புனிதப் படுத்தக் கிளம்பி விடுவதும்.... இன்னும் எத்தனையோ விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எந்த விஷயத்தையும் மதத்தின் பெயராலேயே அணுகும் தலைவர்களும், மததின் பெயரால் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்கும் ஜனஙகளும் இருக்கும் வரை இந்த அவலம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

சில நாட்களிற்கு முன்பு கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் போன்று, தற்போது ராமேசுவரத்தில்.இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ஆகம விதிகளின் படி மாற்று மதத்தவர் இந்துக் கோயிலகளினுள் நுழைவது மிகப் பெரியத் தீட்டு. அது கடவுளுக்கே செய்யும் துரோகம். அப்படி மீறி நடந்து விட்டால், ஒரு சில ஆயிரம் (லட்சம்) ரூபாய்களை செலவு செய்து ஒரு தீட்டு கழிக்கும் வைபவத்தை நடத்தி விட்டால் மட்டுமே மீண்டும் அந்த கோயில் புனிதம் அடைவது சாத்தியம். பொதுவாக கோயில்களில் நடைபெறும் இது போன்ற எந்த வைபவங்களிற்கும் காரணமாகச் சொல்லப்படுவது ஆகம விதிகள்தான். ஆனால் இந்த ஆகம விதிகள் பற்றி பலரும் பல கருத்துக்களை சொல்லுகின்றனர். எல்லா கோயில்களிலும் ஒரே மாதிரியான ஆகம விதிகள்தான் கடை பிடிக்கப்படுகிறதா? அவை உலகத்திலுள்ள எல்லாக் கோயில்களிலும் கடை பிடிக்கப் படுகிறதா? இவ்வளவு ஏன் . வட இந்தியாவிலாவது தீவிரமாகக் கடைபிடிக்கப் படுகிறதா? இது போன்ற பல விஷயங்கள் இன்னும் புரியாத புதிராகவே உள்ளன.

இந்து மதத்தில் மலிந்து கிடக்கும் மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம். இந்த மூட நம்பிக்கைகளையும் தாண்டி இந்து மதத்தை நேசித்தவ்ர்கள் பலர் உண்டு. அந்த காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் இந்து மதத்தை நேசித்தவர்களே. நம் எல்லோருக்கும் மேலே ஒருவன் உண்டு, அவன்தான் எல்லாமே என்ற தன்னடக்கத்தின் பொருட்டோ, தப்பு செஞ்சா நிச்சயம் அவனிடம் தண்டனை உண்டு என்ற தனி மனித ஒழுக்கத்தின் பொருட்டோ, அல்லது இந்து மதமும், பகவத்கீதையும் நேரடியாகவோ மறை முகமாகவோ சொல்லும் தத்துவங்களின் பால் கவரப் பட்டோ அவர்களில் பலர் இந்து மத்தை நேசித்தவர்களாய் இருக்கின்றனர். ஏன் கடவுளின் பெயரால் கருத்துக்களைச் சொன்னால் கேட்டு நடக்கத் தயாராகயிருக்கும் மக்கள் இந்த காலத்தை விட அந்த கால்த்தில் அதிகமாய் இருந்ததும், வேறு எதையும் விட இதன் மூலம் மக்களை தம்மை பின்பற்ற வைக்கலாம் என்று நினைத்து கூட தலைவர்கள் தாம் சார்ந்த மத்தை நேசித்திருக்கலாம்.

அப்படி தான் சார்ந்த மதத்தை நேசித்தவர்தான் மகாத்மா. பிற்காலத்தில் தானும் ஓர் தீவிர இந்துத்துவாவாக முத்திரைக் குத்தப் பட்டு விடுவோம் என்று மட்டும் அன்றே அவருக்கு தெரிந்திருந்தால் சத்திய சோதனை எழுதுவதற்குப் பதில் "நான் கண்ட இந்து மதம்" என்பது போன்ற தலைப்பில் ஏதேனும் ஒரு புத்தகத்தைதான் முதலில் எழுதியிருப்பார். அப்படி அவர் தீவிர இந்துவாக முன்னிலைப் படுத்த விமர்சகர்கள் சொல்லும் சில காரணங்கள்:

1. இறக்கும் தருவாயிலும் "ஹே ராம்" என்று சொன்னவர்தான் இவர்.இவர் ஏன் "ஈசுவர அல்லா தேரா நாம்" என்று சொல்ல வில்லை.

2. தனது அருகில் எப்போதும், பகவத் கீதா புத்தகத்தை வைத்திருந்தவர்தான் இவர். பல கூட்டங்களிலும் பெரும்பாலும் அதிலிருந்து மட்டுமே மேற்கோள்களை காட்டியவர் இவர்.

3. இந்து மதத்தில் வேரோடிக்கிடந்த மூடப்பழக்க வழக்கங்களையும், மனித நேயத்திற்குப் புறம்பான கட்டுப்பாடுகளையும் ஆராய்ச்சி செய்து இந்து மதத்தைக் கடுமையாக விமசித்து மேயோ எனும் வெளிநாட்டுப் பெண்மணி 1927 ல் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தார். அதை விமர்சனம் செய்து காந்தியடிகள் "யங் இந்தியா" பத்திரிக்கையில் "இந்தியாவிலுள்ள சாக்கடைகளை எல்லாம் திறந்து பார்த்து விட்டு இந்தியாவே சாக்கடைதான் என்று சொல்வது போல் இருக்கிறது இப்புத்தகம்" என்று எழுதியிருந்தார்.

இது போன்ற ஒரு சில வரலாற்று நிகழ்வுகளை முன்வைத்து காந்தியை விமர்சனம் செய்வோர் இருக்கின்றனர். ஆனால் இவர்களால் சரியாக பதில் சொல்ல முடியாத ஒன்று இருக்கிறது.

அப்படி காந்தி தீவிர இந்துத்துவா வாதியாக இருந்திருந்தால், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முதல் தூண்டுகோலாய் அவர்தான் இருந்திருப்பார். முஸ்லீம்களை தனியே பிரித்து அனுப்பி விட்டு இந்துக்களை மட்டும் வைத்து அவர் கனவு கண்ட ராம ராஜ்ஜியத்தை எளிதில் நிலை நாட்டியிருக்கலாம். இந்தியா, பாகிஸ்தானிற்கு தருவதாய் வாக்களித்திருந்த பணத்தை கண்டிப்பாக கொடுத்துதான் தீரவேண்டும் என்று தமது சகாக்களையே எதிர்த்து போராடியிருக்க மாட்டார்.

இவ்வளவு ஏன் முஸ்லீம்களுக்கு ஆதரவாகவே செயல் படுவதாக சொல்லி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்திருக்க மாட்டார். எந்த இந்துமத வெறியின்பாற்பட்டு காந்தியைச் சுட்டுக் கொன்றானோ அந்த கோட்சேக்கு இன்றும் மராட்டிய மாநிலத்தில் சங் பரிவார் அமைப்புகள் பிறந்த நாள் விழா கொண்டாடி வருகிறார்கள். "நான் கோட்சே பேசுகிறேன்" எனும் நாடகத்தின் மூலம் இன்றும் கோட்சேவின் புகழ் பரப்பி, காந்தியை இழிவுபடுத்தி வருகிறார்கள். ஒருவரே தீவிர இந்துத்துவா வாதியாகவும், இசுலாமிய ஆதரவாளராகவும் முத்திரை குத்தப் படுவது என்று பார்த்தால் அது இவராகத்தான் இருக்கும்.

இதையும் தாண்டி காந்திக்கு தமிழ்நாட்டில் ஒரு அவமதிப்பு நடந்திருக்கிறது. 1920 களில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய தென்னகம் வந்த காந்தி கன்னியாகுமரி சென்ற போது அப்பகுதி காங்கிரசார் கேட்டுக்கொண்டதால், அங்கிருந்த அம்மன் கோயிலுக்குள் செல்ல முயலும் போது அந்த ஆலய அதிகாரிகளால் அனுமதிக்க மறுக்கப்பட்டார். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் "காந்தியடிகள் கடல் தாண்டி மேல்நாடு சென்று படித்து வந்தவர். ஆகம விதிகளின் படி இவர் இந்து மதத்திலிருந்து மதப்பிரஷ்டம் செய்யப்பட்டவ்ர். ஆகையால் மிலேச்சருக்கு ஆலயத்தில் இடமில்லை என்று ஆகம விதிகளை சொல்லி அனுமதி மறுக்கப்பட்டது.

அதே ஆலய மனிதர்கள்தான் சில காலம் கழித்து கன்னியாகுமரி வந்த நேருவை ஆலயத்திற்கு வந்து அம்மனை தரிசிக்கச்சொல்லி அழைப்பு விடுத்தனர். நேருவும் ஒரு மிலேச்சரே. அப்படியிருக்கையில் அவர்களது இந்த மன மாற்றத்திற்குக் காரணம் என்ன? அப்போது மட்டும் ஆகம விதிகள் தடுக்காதா? இது எப்படி சாத்தியமாயிற்று?

வேறு ஒன்றுமில்லை. அப்போது கன்னியாகுமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்ததாய் இருந்தது. அந்த சமஸ்தானத்து மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிற்கு அப்போது எற்பட்ட தீவிர நோயின் காரணமாக அவர்கள் இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை செய்தால்தான் குணமடையும் என்ற நிலை ஏற்பட்டது. அதனால் அவர்களும் கப்பலேறி கடல் கடந்து சென்று சிகிச்சை முடித்து திரும்பினர்.

அப்போது அந்த சமஸ்தானத்து திவானாக இருந்த சர்.சி.பி.இராமசாமி அய்யங்கார் மன்னர் குடும்பத்திற்காக ஆகம விதிகளை மாற்றியமைத்தார். அதனாலேயே அதற்குப் பின் அங்கு வந்த நேருவுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. ஆனால் காந்தியடிகளிற்கு அனுமதி மறுக்கப்பட்ட இந்த கோயிலில் நுழைய எனக்கும் அவசியமில்லை என்று கூறி மறுத்து விட்டார்.

இத்தனை கேள்விகளையும், குழப்பங்களையும் வைத்து காந்தியடிகள் தீவிர இந்து வெறியரா? அல்லவா? என்பதை அவரவர்களே முடிவு செய்து கொள்ளட்டும். ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. ஆகம விதிகள் என்பது ஒரு சிலர் தமது விருப்பு, வெறுப்பு வசதிகளுக்கேற்ப, சுயலாபத்திற்காக, ஒட்டு மொத்த மனிதாபிமானத்தையும் எதிர்த்து பயன்படுத்தி வருகின்றனரே தவிர வேதங்களும் மதங்களும் இவர்களிற்கு ஒரு பொருட்டே அல்ல. சாமானியரிடமிருந்து தன்னை பிரித்து உயர்த்திக் காண்பித்துக் கொள்ளவும், காசு தேடி பிழைப்பு நடத்தவும் ஆகம விதிகள் கால காலமாய் சொல்லப்பட்டு வருகிறது.

நேற்று குருவாயூர். இன்று ராமேசுவரம். நாளை???

எல்லா சமுதாய மக்களாலும், எல்லா அரசியல் அமைப்புகளாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்ட தலைவர் என்று எவரேனும் ஒருவரையாவது உங்களில் யாரேனும் எனக்கு சுட்டிக்காட்ட இயலுமானால், வரலாற்றின் புதியதொரு பக்கத்தை எனக்கும் உலகுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியதான பெருமையை நீங்கள் அடையலாம். ஆனால் அப்படியொரு பெருமித உணர்வை நீங்கள் மட்டுமில்லை, இனிவரும் காலங்களில் கூட எவரேனும் பெற முடியாதென்றே தோணுகிறது.

"இப்படியொரு தலைவர் வாழ்ந்தார் என்று பின்வரும் தலைமுறையினர் நம்புவதற்கே கஷ்டப்படும் அளவில் வாழ்ந்து மறைந்த மனிதர்"என்று ஐன்ஸ்டீனால் பாரட்டப் பட்ட மகாத்மா காந்தியும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் சமீப காலங்களில் தீவிர விமர்சனத்திற்குடபடுபவ்ர்களில் மகாத்மாவுக்கு முதலிடம் கூட கொடுக்கலாம். இதை இந்திய ஜனநாயக கருத்துச் சுதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றி என்று எண்ணி சந்தோஷப் பட்டுக் கொள்வதா? அல்லது மகாத்மாவிற்கே இந்த கதிதானா என்று ஆற்றாமை கொள்வதா? எனபதை அவரவர் விருப்பத்திற்கே விட்டுவிடலாம்.

வரலாற்று நாயகர்கள் வாழ்ந்த காலத்திற்கும், அவர்களை விமர்சனம் செய்பவர்கள் வாழும் காலத்திற்கும் இடைப்பட்டதான கால இடைவெளியும் அந்த இடைப்பட்ட காலங்களில் ஏற்படும் அரசியல், பொருளாதார, கலாச்சார மாற்றங்களும், விமர்சகர்கள் மீது ஏறப்டுத்தும் தாக்கங்களும் சேர்ந்தே ஒரு விமர்சனத்தை நிர்ணயம் செய்கின்றன. அதனாலேயே இந்த நாயகர்கள் இறந்து 50, 60 வருடங்கள் கழித்து "1925 ஆம் வருடத்தில் மார்ச் மாதம் இவர் ம்ட்டும் இப்படி நடந்திருக்காவிட்டால் இந்த நிலை நமக்கு வந்திருக்காது" என்பது போன்ற விமர்சனங்கள் எழுப்பப் படுகின்றன.

பொதுவாக சாதாரண மனிதர்களுக்கும், இது போன்ற தலைவர்களுக்கும் ஒரு பெரும் வித்தியாசம் உண்டு. சாதாரண மனிதர்கள் "Life is Trial and Error" என்று வாழ அனுமதிக்கப்பட்டவர்கள். அவர்களது தவறுகளும், முயற்சிகளும் தீவிர விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை. ஆனால் வரலாற்று நாயகர்களிற்கு இந்த சுதந்திரம் வெகு நிச்சயமாக மறுக்கப் படுகிறது. இது போன்ற சரித்திர புருஷர்கள் எவரை எடுத்துக் கொண்டாலும், அவர்களைச் சுற்றி அந்த காலத்தில் வாழ்ந்த மக்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு புனித பிம்பம் நமக்கு புலப்படும். தலைவர்களை, நம்மை உய்விக்க வ்ந்த ரட்சகர்களாகவே பார்த்துப் பழகியதால் இந்த "புனித பிம்ப கட்டுமானப் பணி" இதோ இந்த நூற்றாண்டிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அப்படி மிகப் புனிதமானவராக, கடவுளின் அவதாரமாக, தவறுகளே செய்ய வாய்ப்பில்லாத தன்னிகரற்ற தலைவராக புனையப்பட்டவ்ர்தான் மகாத்மா. சமீப காலங்களில் இவர் எடுத்த தவறான முடிவுகளும், தோற்றுப் போன முயற்சிகளும், பின்பற்றிய ஒரு சில தவறான கொள்கைகளும் என்று ஒரு சில விஷயங்கள் வெகு தீவிரமாக முன்னிலைப் படுத்தப் படுகின்றன. நண்பர் மா.சிவக்குமார் கூட இது குறித்தான ஒரு தெளிவான புரிதலை ஏற்படுத்தும் விதமாக, நேற்று ஒரு பதிவிட்டிருந்தார். நான் சந்தித்தவர்களில் ஒரு சிலரும் மகாத்மாவின் மீது ஒரு சில குற்றச் சாட்டுகளை முன்வைத்தனர்.

1. காந்தி தீவிர இந்துத்துவ ஆதரவாளர். அவர் வர்ணாசிரம தர்மத்தை ஏறக்குறைய ஆதரித்தார். காந்தி தமிழ் நாடு சுற்றுப் பயணம் வந்த போது அவரது பெயரில் தோழர் ஜீவா நடத்தி வந்த ஆசிரமத்தில் இதை கடை பிடிக்கச் சொன்னதாகவும், அதை ஜீவா மறுத்து விட்டு வருத்தப்பட்டதாகவும் ஒரு சில தோழர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்கள்.

2. பகத் சிங் விஷயத்தில் காந்தி ரொம்பவே துரோகம் இழைத்துவிட்டார் என்று மார்க்சிய தோழர்களால் தீவிரமாக சொல்லப்படுகிறது.

3. உண்மையில் சொல்லப்போனால் காந்தியின் வருகையே ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு கொண்டு வரப்பட்ட ஒரு நிகழ்வே. அந்த கால கட்டத்தில் பல தலைவர்களால் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக இருந்த போது அந்த தீவிரத்தை குறைப்பதற்காகவே அவர் கொண்டுவரப்பட்டார். அஹிம்சை எனும் மந்திரச் சொற்களை உபயோகப் படுத்தி போராட்டத்தின் தீவிரத்தை குறைத்தார்.

4. உப்புச் சத்தியா கிரகமே தேவையில்லாத ஒன்று. அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் வேறு பல போராட்டங்களில் ஈடுபட முக்கிய தலைவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். அதைத் தடுக்கவே இந்த போராட்டத்தை அவர் துவக்கினார்.

5. உலகப்போரின் போது காந்தி எடுத்த ஆங்கிலேயர்களுக்கு ஆதரவான முடிவு.

6. சௌரி சௌரா போராட்டத்தின் போது ஒரு சில ஆங்கிலேயர்கள் இறந்ததற்கே வருத்தப்பட்டு, போராட்டத்தை நிறுத்த சொன்ன காந்திக்கு இங்கே பல இந்திய உயிர்கள் போவது தெரிய வில்லையா?

என்று பல குற்றச்சாட்டுகள் அவர்மீது முன் வைக்கப் படுகின்றன. பெரும்பாலானவை எனக்குத் தெரிந்த ஒரு சில மார்க்சிய தோழர்களால் முன்வைக்கப்பட்டவையே.

காந்தியடிகள் மீது அதீதமாய்த் தோற்றுவிக்கப்ப்ட்ட இந்த புனித பிம்பம், தொடர்ந்து வரலாற்று ஆசிரியர்களாலும் கட்டிக் காப்பாற்றப்பட்டு வர, பாமரர்களுக்கும் இதுவே வரலாறாக பதிந்துவிடுகிறது. சில காலங்கள் கழித்து, வேறு சிலரால் இப்படிப்பட்ட கேள்விகள் முன்வைக்கப் படும் போது, பாமரர்களில் ஒரு சிலர், படீரென்று புனிதபிம்பத்தை தூக்கியெறிந்துவிட்டு, அவரை ஒரேயடியாய் வெறுத்து விடுகினர். வேறு சிலரோ தான் காத்து வந்த புனித பிம்பத்தை கலைக்க மனமின்றி உண்மையான வரலாற்றை தெரிந்துக் கொள்ள மறுத்து விட்டு பாமரர்களாகவே இருக்கப் பழகி விடுகின்றனர்.

இங்கே நாம் கற்றுக் கொள்ள வேண்டியது வரலாற்று நாயகர்களும் மனிதர்களே. தவறான முடிவுகளை எடுத்திருக்க அவர்களுக்கும் சாத்தியமே. தலைவனை தலைவனாக மட்டுமே பார்க்க வேண்டும். அவர்களை நம்மை காக்க வந்த ரட்சகர்களாக நாம் பார்த்தோமேயானால் எந்த காலத்திற்கும் நமக்கு ஒரு தலைவன் தேவைப் பட்டுக் கொண்டேதான் இருப்பான். நாம் பாமரர்களாக்வே இருந்து கொண்டிருப்போம். நம்மில் பலர் இங்கே பாமரராய் இருக்கப் பிரியப்பட்டாலும், இனியொரு தலைவன் இது போன்று கிடைப்பானா என்பது கேள்விக்குறியே?

பி.கு: நம்மில் எவருமே அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் இல்லை. எனவே புத்தகங்களும், அந்த காலத்தில் வாழ்ந்த நடுநிலையாளர்களும் சொல்லும் தகவ்ல்களே இது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை நமக்கு சொல்லமுடியும் எனவே. புனித பிம்பத்தை உடைத்தெறிந்து விட்டு, ஒரு நல்ல தலைவனின் நோக்கங்களை, சந்தித்த போராட்டங்களை, கண்ட வெற்றிகளை, அடைந்த தோல்விகளை, அவமானங்களை, செய்யத் தவறியவைகளை அறிந்து கொள்ள விரும்பும் ஒரே நோக்கத்துடன், இன்னும் இது போன்ற பல கேள்விகளுக்கு நாம் விடை தேடலாம். பகிர்ந்து கொள்ளலாம்.

"இயேசுவைக் கும்பிடாத எத்தனையோ ஊருங்க இருக்கு.
இந்து மதத்தைப் பத்தி தெரியாத எத்தனையோ நாடுங்க இருக்கு.
அல்லாவைக் கும்பிடாத எத்தனையோ ஜனங்க இருக்கிறாங்க.
ஏன்? கடவுளே இல்லைன்னு சொல்ற கூட்டம் கூட இருக்கு.
ஆனால் காதல் இல்லாத இடமே இல்லை.
காக்கா குருவிக்கிட்ட கூட காதல் இருக்கு.ஆனா மதம்ங்கிறது மனுஷன்கிட்ட மட்டும்தான் இருக்கு."

நல்லாதானடா இருந்த. திடீர்னு என்னடா ஆச்சு உனக்கு? என்ன கண்றாவி இதுன்னு கேக்கறீங்களா. வேற ஒண்ணுமில்லை. நேத்து நைட் தெரியாத்தனமா பூவே உனக்காக படத்துல ஒரு சீன் பார்த்துட்டேன். அதுல வர்ற டயலாக்தான் இது. இதாவாது பரவாயில்லை. க்ளைமாக்ஸ்ல அண்ணன் பேசுவாருங்க பாரு டயலாக்.......

அஞ்சு: So, காதல்ல தோத்துட்டா, வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது அப்படித்தானே? (எவன் சொன்னது. அப்படி பார்த்தா ஊர்ல ஒரு பயலுக்குக் கண்ணாலம் ஆகாது.)

விஜய்: தோக்கிறதுக்கு இது ஒண்ணும் பரிட்சை இல்லைங்க. அது ஒரு ஃபீலிங். அந்த ஃபீலிங் ஒரு முறை வந்துட்டா, வாழ்நாள் முழுக்க மறையாது. (என்ன ஃபீஈஈஈஈஈலிங்... நீ முதல்ல எட்டாவது பரிட்சையை ஒழுங்கா எழுதி பாஸ் பண்ணியா? என்னமோ IAS, IPS பரிட்சை ரேஞ்சுக்கு பில்டப் உடற)

அஞ்சு: ஆனால் காதல்ல தோத்தவங்க எத்தனையோ பேரு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கறதில்லையா? (அவனுங்க எல்லாம் சந்தோஷமா இருக்கறதே காதல்ல தோத்ததாலதான். ஜெயிச்சிருந்தாங்கன்னா சேது விக்ரம் மாதிரி ஏர்வாடியிலதான் திரிஞ்சிருப்பானுங்க.)

விஜய்: இருக்காங்க. ஆனா, அவங்க சந்தோஷமாதான் இருக்காங்கன்னு, உங்களிற்குத் தெரியுமா? எங்க அவங்க நெஞ்சுல கையை வெச்சு சொல்லுங்க பார்க்கலாம். அவங்க மனசுல அந்த பழைய காதல் இல்லைன்னு. முடியாதுங்க. எத்தனை வருஷம் ஆனாலும்,எங்கோ ஒரு மூலைல, அவங்க நெஞ்சுல அந்த பழைய்ய காதல் இருந்துக்கிட்டுதான் இருக்கும். (அதுக்கு பேருதான் சனி மூலைங்கிறது. பின்ன மறக்க முடியுமா? எதிர்த்த வீட்டு ராதிகா கிட்ட செருப்படி வாங்கினது. பக்கத்து வீட்டு செல்விக்கிட்ட கெட்ட வார்த்தையிலேயே திட்டு வாங்கினதை எல்லாம் மறக்க முடியுமா?)

அஞ்சு: ஒரு செடியில ஒரு பூ உதிர்ந்துட்டா அந்த செடியில இன்னொரு பூ பூக்கறதில்லையா? அது மாதிரிதான இதுவும். (இப்ப நீ என்ன கேக்க வர்ற.
தெளிவா கேளு. சும்மா செடி, பூ, கத்திரிக்காய்ன்னுட்டு)

விஜய்: வாஸ்தவம்தாங்க. ஆனா விழுந்த பூவை எடுத்து மறுபடி அந்த செடியில உங்களால ஒட்ட வெக்க முடியுமா? முடியாதுங்க. சில பேருக்கு அது செடி மாதிரி. சில பேருக்கு அது பூ மாதிரி. (சுத்தம்... அதுக்கு அந்த புள்ளை கேட்டதே பரவாயில்லை. கொஞ்சமாவது புரிஞ்சுது. நீ நேராவா எதையும் பேச மாட்டியா)

அஞ்சு: இதுதான் உங்க முடிவா? (அடிப்பாவி....இவ்வளவு நேரமா இந்த கண்றாவியைத்தான சொல்லிட்டிருந்தேன்)

விஜய்: இல்லை. இதுதான் என் பதில். (டேய் ரெண்டுமே ஒண்ணுதாண்டா. என்னதாண்டா பிரச்சினை உங்களுக்கு)

ஹி ஹி. ரொம்ப நாளா மொக்கைப் பதிவு போடணும்னு ஒரு ஆசை அதான். ஹி ஹி ஹி.

டேய் அப்போ இதுக்கு முன்னாடி போட்டதெல்லாம் ரொம்ப நல்ல பதிவுன்னு நினைச்சுட்டிருக்கியா? எல்லாமே மொக்கைதாண்டான்னு யாரும் சொல்லக் கூடாது. அது எனக்கே தெரியும்...

வெகு சமீப காலம் வரையிலும் கூட இந்திய வரலாறு என்று நான் தெரிந்து வைத்திருந்தது சேர,சோழ,பாண்டிய,முகலாய, இன்ன பிற மன்னர்கள் - அப்புறம் ஆங்கிலேயர்கள் - காந்தியும், காங்கிரசும் சேர்ந்து வாங்கிக் கொடுத்த சுதந்திரம் - இந்திய ஜனநாயக அரசியலமைப்பு என்ற அளவில் மட்டுமே.பிறகுதான் புரிந்தது. நான் மட்டுமின்றி என் வயதையொத்த பலரும் இருப்பது இப்படியேதான் என்று.

பள்ளிக்கூட சமூக அறிவியல் புத்தகங்கள் சொன்ன வருடங்களும், வரலாற்று நிகழ்ச்சிகளும் 2 மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளாகவும், 5 மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளாகவே எங்களுக்குள் வலம் வந்ததால், ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கூட, உணர்ச்சியின்றி மனப்பாடம் பண்ணி ஒப்பித்துக் காட்டி, 5 மார்க் நிச்சயம் என்ற அளவிலேயே பெருமைப் பட்டுக் கொண்டோம்(டேன்).

இப்படியாக வரலாற்றிற்கும், எங்களுக்குமிருந்த உணர்ச்சியற்ற பிணைப்பை, 11, 12 ஆம் வகுப்புகள் எளிதாய்ப் பிரித்தன. 1 ஆம் வகுப்பிலிருந்து, 10 ஆம் வகுப்புவரை, கொஞ்ச கொஞ்சமாய் நாங்கள் பெற்ற வரலாற்றறிவை, 2 வருடங்கள் கழித்து, 12 ஆம் வகுப்பின் இறுதியில் இருந்து கொண்டு நினைவு கூர்கையில், சாஜகான் கட்டிய தாஜ்மகாலும், அசோகர் நட்ட மரங்களும், ஔரங்கசீப், வீரசிவாஜி எனும் பெயர்களும் மட்டுமே நினைவிற்கு வந்தன.

முதலாம், இரண்டாம், மூன்றாம், விஜயாலய,பராந்தக சோழர்களும், நரசிம்ம, மகேந்திர பல்லவர்களும் ஏற்படுத்திய பெயர்க் குழப்பங்களால், இந்திய வரலாறும், தமிழக வரலாறும் எனக்கு கசப்பான மருந்தாகவே இருந்து வந்தது. பின்னாளில் படிக்க ஆரம்பித்த வரலாற்று நாவல்களே இந்த பெயர்க் குழப்பங்களை தீர்த்து வைத்த ஆபத்பாந்தவர்கள். ஆனாலும், வெறும் பொழுது போக்கிற்காகவும், ஹிரோயிச சண்டைக் காட்சிகளின், கவர்ச்சிக்காகவும் படிக்கப் பட்ட இந்த நாவல்கள் ஆரம்பத்தில் எனக்குள் பெரிய வரலாற்றறிவைப் புகுத்தி விட வில்லை.

காதலையும், வீரத்தையும் மட்டுமே வரலாறாக காட்டி வந்த காலகட்டத்தில், பிரபஞ்சன் எழுதிய "மானுடம் வெல்லும்" எனும் வரலாற்று நாவல் கைக்கு கிடைத்தது. காதலில்லாமல், போர்கள் இல்லாமல், ஐரோப்பியர்களின் ஆதிக்கம் இந்தியாவில் மிகுந்திருந்த அந்த கால கட்டத்தில் வாழ்ந்த ஒரு மனிதரின், டைரிக் குறிப்புகளைப் போல எழுதப் பட்ட இந்த புத்தகமே, வரலாற்றினை, பாடங்கள் கற்றுத் தரும், நிகழ்வுகளின் தொகுப்பாக என்னைப் பார்க்க வைத்தது.

காலம் கடந்து ஏற்பட்ட இந்த வரலாற்றின் மீதான ஈர்ப்புக்கு, வெகு நிச்சயமாக சரித்திர நாவல்களே, நாவல்கள் மட்டுமே காரணம் என்று சொல்லலாம். அதற்குப் பின்பு, பல்வேறு சமயங்களில், பற்பல விஷயங்களிற்காக, இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பல்வேறு வகைப் பட்ட வயதினருடனும் (ஒரு சில போன தலைமுறை வயதினருடனும்), பேசிய பின்பு நான் புரிந்து கொண்டது இதுவே:

ஐரோப்பியர்களின் இந்திய ஆக்கிரமிப்பும், மறு விளைவாக இந்தியா மற்றும் தமிழகத்தில் ஏற்பட்ட சுதந்திர போராட்ட வரலாறு குறித்தும், நான் உட்பட பலருக்கும் ஒரு தெளிவான முழு வரலாற்றுப் பிண்ணனி தெரிந்திருக்க வில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில, பல வரலாற்று விஷயங்களை அறிந்து வைத்திருந்தார்களேயொழிய, வருடங்களுடன் சேர்த்து வரலாற்று நிகழ்வுகளையும், அவை ஏற்படுத்திய கலாச்சார மற்றும் அரசியல் தாக்கங்களையும் முழுதாக தெரிந்திருக்க வில்லை.

சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த வலைப் பதிவர் சந்திப்பில் ஒரு விஷயம், திரும்பத் திரும்ப பலரால் வலியுறுத்தப் பட்டது. ஒரு வலைப் பதிவை இன்னொரு வலைப் பதிவர் படித்து விட்டு கருத்து சொல்வது எனும் நிலை மாறி, வலைப் பதிவுகளை வெகு ஜன வாசகர்களும் தீவிரமாகப் படிக்கும் நிலை வர வேண்டும் என்பதே அது. அதற்கு முக்கியமாக நாம் செய்ய வேண்டியது, பதிவுகளின் தரம் உயர வேண்டும்.கதை கவிதை,அரசியல் கட்டுரைகள், நகைச்சுவை அனுபவங்கள் மட்டுமின்றி, துறை சார்ந்த பதிவுகளும், தகவல் களஞ்சியப் பதிவுகளும் அதிகரிக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது.

இந்த இரண்டு விஷயங்கள் எனக்குள் ஏற்படுத்திய சலனங்களின் காரணமாக, ஒரு முயற்சியாக, 15 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்து ஐரோப்பியர் வருகையால், இந்திய அரசையலமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை மையமாக வைத்து, ஒரு வரலாற்றுக் கட்டுரைத்தொடரை எழுத இருக்கின்றேன்.

இன்றில்லாவிடினும்,எப்போதாவது ஒரு நாள் வலைப்பதிவுகளையும், தகவல் களஞ்சியமாகவும், துறை சார்ந்த விஷயங்களின் அறிவினைப் பெறவும் உபயோகிக்கும் நிலை வரும் போது, இது போன்ற கட்டுரைகள் கொஞ்சமாகவேனும் உபயோகமாய் இருக்கும் என்பதற்காக மட்டுமின்றி, ஒரு பெரிய சுய நலத்தை முன்னிட்டும் இதை எழுத இருக்கின்றேன்.

இத் தொடருக்கான ஆதாரங்களையும், விஷயங்களையும் தேடித் தேடித் தொகுத்தளிக்கும் வகையிலாவது, கொஞ்சம் விசாலமான வரலாற்றறிவைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சுயநல முனைப்புடனேயே தொடங்குகின்றேன்.

முதல் கட்டுரையில், ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், ஃபிரெஞ்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள் என்று அனைவரும் ஒட்டு மொத்தமாக இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வணிகம் செய்ய முயன்றதற்குக் காரண்மாய் இருந்தது எது? அந்கழ்ச்சி நடந்தது எப்போது? முதன் முதலில் இந்த்யாவிற்குள் காலடி எடுத்து வைத்தது யார்? எங்கே? அப்போது இந்தியாவில் இருந்த சூழ்நிலை என்ன? என்பதற்கான விடைகளை தருகிறேன்.

பி.கு: நான் ஒன்றும் பெரிய வரலாற்று ஆய்வாளன் கிடையாது.பல்வேறு மூலங்களையும் தேடிப் படித்து, அதை எளிய வடிவில் ஒன்றாக தொகுத்துத் தர முனைகிறேன் அவ்வளவே. இது குறித்தான உங்களது பரிந்துரைகளையும், suggested sources ஐயும் ஏற்கத் தயாரகவே உள்ளேன்.ஓவரா பில்டப் கொடுக்கிறேனோ? வெத்து சீன் விடறேனொ? சரி மன்னிச்சு விட்டுடுங்க. பொழைச்சு போறேன்.

அன்றைக்கும் பொழுது விடிந்தது. சூரியனின் கதிர்கள் அழுத்தமாய் என்னைத் தீண்டித்தான் சென்றது. வெய்யில் சுளீரென நெற்றியில் உரைத்தது. கண்களை திறக்கலாமா வேண்டாமா என்று மனது பட்டி மன்றம் நடத்தியது. "எழுந்து போயேன்" மூளை என்னைக் கெஞ்சியது.

சரி.எழுந்து?........

மனது யோசித்துச் சொன்னது. முதலில் குளி. நேற்றைப் போலவே இன்றும் ஏதாவது குழம்பு வை. துவைத்துக் காயப் போட்ட உனது புடவைகளை மடித்து வை. எச்சில் பருக்கைகள் நிறைந்து கிடக்கும் தட்டுக்களை கழுவி வை. வேலைக்குப் போன உனது தந்தையும், பக்கத்து வீட்டுப் பெண்ணின் விசேஷத்திற்குப் பட்டுப் புடவை சரசரக்கச் சென்ற அம்மாவும் திரும்பி வரும் வரை, டீவி பார். வாரமலர் நடுப்பக்க கிசுகிசுக்களைப் படி. பொழுது போகும். இல்லைன்னா மல்லிகா பத்ரிநாத் "மிளகு இட்லி செய்வது எப்படி?" ன்னு பெண்கள் மலரில் எதாவது டிப்ஸ் கொடுத்திருப்பார் அதைப் படி. அதுவும் இல்லையா? மறுபடியும் படுத்துத் தூங்கு.

இதைத்தானே நேற்றும் செய்தேன்?

ஆமாம் நேற்றும் இதைத்தான் செய்தாய். இன்றும் இப்படித்தான். ஏன்.... நாளையும் இப்படித்தான்.இதைத்தாண்டி வேறு எதுவும் உனக்கு விதிக்கப் பட்டிருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. வேறு என்ன செய்யத் தோன்றுகிறது உனக்கு?

நான் வேணா தையல் கத்துக்கிட்டுமா? டெய்லரிங், எம்பிராய்டரி இப்படி ஏதாவது பண்ணிட்டுருக்கலாமே.இல்லைன்னா இந்த பூ படம் எல்லாம் வரைஞ்சு செவுத்துல ஃபிரேம் பண்ணி மாட்டுவாங்களே. அதைக் கத்துக்கிறேன்....

ஹ்ம்ம்ம். தையல் மெஷின். உன்னை மாதிரி ஆளுங்களுக்கு கரெக்டா இருக்கும். சரி என்ன பூவை வரைஞ்சு நீ என்ன பண்ணப் போற? அப்படியே நீ பூ வரைஞ்சாலும், அதை யாரும் வாங்குவாங்களா? நீ பேசாம டெய்லரிங்கே கத்துக்கோ......

ஹ்ம்ம்ம் சரி. ஆனா இன்னும் எத்தனை நாளைக்கு?

என்ன இன்னும் எத்தனை நாளைக்கு?

இப்படி வெளில எங்கேயும் போகாம, வீட்டுக்குள்ளேயே, வாரமலர், தையல் மெஷின், அவரைக்காய் குழம்பு ன்னு காலத்தை ஓட்டறது.....

வெளிலயா. போலாமே யார் வேணாம்னா. கோயிலுக்குப் போ. இல்லைன்னா பக்கத்து வீட்டு அக்கா கூட ஏதாவது படத்திற்குப் போ.

படமா வேணாம்பா. புருஷன் செத்த கவலை இல்லாம படம் பார்க்க வந்திருக்கா பாருன்னு எதிர்த்த வீட்டு மாமி சொல்லுவா. அதுவுமில்லாமல் படத்தில ஜோடியா யாரையாவது பார்த்தா உள்ள என்னமோ பண்ணுது. எப்படியும் ஃபர்ஸ்ட் நைட் சீனோ இல்லை டூயட்னு ஒரு கவர்ச்சிப் பாட்டோ இருக்கும். அதைப் பார்த்தா நைட் தூங்கவே முடியாது. அதனால படம் வேணாம். நான் இப்படியே சன் டீவியிலயே பார்த்துக்கறேன்.

அதுவும் சரிதான். வேணும்னா எதாவது விசேஷத்துக்குப் போ. ஆனா கவனமா இருந்துக்கோ. எந்த விசேஷத்துலயும் முன்னாடி நிக்காத. எங்கயாவது தூண் ஓரமாவே நின்னுட்டு இருந்துட்டு வந்துடு. உதவிதானே செய்யறோம்னு நினைச்சுக்கிட்டுப் போய் மேடையில போய் நிக்காத.

ஆமா ஆமா. அன்னிக்கே பாலா அண்ணன் வீட்டு குழந்தைக்கு பெயர் சூட்டுற விழாவிற்கு போய், குழந்தையை ஆசையா கொஞ்சிட்டிறுக்கறப்ப, அவங்க மாமியார், "நீ எல்லாம் குழந்தையை தொடாதம்மா"ன்னு ஒரு மாதிரி பேசிட்டாங்க. அதனாலதான் இன்னிக்கு பக்கத்து வீட்டு விசேஷத்துக்கும் நான் போகலை. அம்மா மட்டும் போய் இருக்காங்க.

ஹ்ம்ம் தெரியுதுல்ல.அப்புறம் என்ன? ஒண்ணு தெரிஞ்சிக்கோ. உனக்கு இதுதான். நீ இப்படித்தான் இருக்கணும். அவங்க யாரும் மாற மாட்டாங்க.

ஏன் எல்லாரும் இப்படி இருக்காங்க. நான் என்ன தப்பு செஞ்சேன்? என் மாமியாரு கூட எப்படிம்மா இருக்கேன்னு கேட்டு 2 மாசமா ஒரு போன் கூட பண்ணலை. எனக்கு மட்டும் ஏன் இப்படி? நானும் மத்தவங்க மாதிரி சந்தோஷமா இருந்தவதான. ஒரே நாள்ல ஒட்டு மொத்தமா எல்லாத்தையும் பிடுங்கி மூலைல உட்காருடீன்னு சொன்னா நான் எங்கே போவேன்.
உண்மையை சொல்லணும்னா என் புருஷன் செத்துப் போய்ட்டான் ங்கறதை விட நாளைக்கு நான் யாரு? ங்கறதை நினைக்கிறப்பதான் எனக்கு அழுகையா வருது.

சரி விடு. இதை இப்படியே வெச்சுக்கோ. வெளில சொல்லாத. எங்க காலம் மாதிரி வெள்ளைப் புடவை கட்ட சொல்றோமா? பூ வெக்க வேணாம்னு சொல்றோமா? இல்லை சினிமா பார்க்க வேணாம்னு சொல்றோமா? இப்போ நாங்க எல்லாம் இல்லை. என்னமோ இவ ஒருத்திதான் அறுத்துக் கட்டினவ மாதிரி பெரிசா பேசறா........அப்படின்னு ஊர்ல இருக்கிற உன் அப்பத்தாவே கேட்கும்.

மயிரு! போய் சொல்லு என் அப்பத்தா கிட்ட. "வாழறதுங்கறது உயிரோட இருக்கறது இல்லை. அதுக்கும் மேல...."

அப்போதுதான் எழுத்து கூட்டிக் கூட்டிப் படிக்கக் கற்று கொண்டிருந்த அந்த ஆரம்ப கால நாட்களில், ஏதேச்சையாக ஒரு நாள் என் கையில் கிடைத்த "சிறுவர் மலர்" பின்னாளில் என் மேல் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம். ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையிலும், மற்ற எவருக்கும் முன்பு முதலில் நான் மட்டுமே அதை படித்து விட வேண்டும் என்று பேப்பர்காரனுக்காய் வாசலிலேயே நான் தவம் கிடப்பேன். நடுப்பக்கப் புதிர்கள், பலமுக மன்னன் ஜோ, எக்ஸ்ரே கண் ரே என்று சிறுவர் மலர் மட்டுமே என் உலகமாய் இருந்து வந்த காலம் அது. கொஞ்ச நாட்களில் சிறுவர் மலர் போரடிக்கா விட்டாலும், மொத்த புத்தகத்தையுமே நான் 10 நிமிடங்களில் படித்து முடித்து விடுமளவுக்கு பழகி விட, படக் கதைகள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பால், என்னுடைய புத்தக வட்டம் மெல்ல ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று விரியத் தொடங்கியது.

இரும்புக் கை மாயாவி, ஸ்பைடர் மேன், கௌ பாய் டெக்ஸ் வில்லர், இரும்பு மனிதன் ஆர்ச்சி, லக்கி லுக் என்று என் ஆதர்ஷ கதா நாயகர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போனது. கடைசி வரை ஏனோ எனக்கு ஜேம்ஸ் பாண்டும், ரிப் கெர்பியும் பிடிக்காமலே போய் விட்டார்கள். ஆனால் அந்த வயதில் ரஜினிகாந்தோ, விஜயகாந்தோ என்னைக் கவர்ந்ததை விட இவர்கள்தான் என்னை அதிகம் கவர்ந்தார்கள்.இன்றும் என் நண்பர்கள் மத்தியில் நான் வேகமாகப் படிப்பவன் என்று பெயர் எடுத்திருப்பதற்கும், மசால் போண்டாவைச் சுற்றித்தந்த பேப்பராக இருந்தால் கூட, அதை குப்பைத்தொட்டியில் போடுவதற்கு முன்னால் என்ன எழுதி இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்திற்கும் இந்த சிறுவர் மலரும், காமிக்ஸ்களுமே காரணம் என்று சொல்லுவேன். Thanks to you My Dear Friends..........

இப்படியே போய்க் கொண்டிருந்த நேரத்தில், சரி என்னதான் இருக்குதுன்னு பார்ப்போமே ன்னு, ஒரு நாள் ஞானோதயம் வந்து நான் கையில் எடுத்த புத்தகம் ராஜேஷ்குமாரின் ஒரு துப்புறியும் நாவல். விவேக் துப்புறியும் அந்த நாவல் ஜெட் வேகத்தில் போக, அப்புறம் தேடித் தேடி ராஜேஷ் குமாரின் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு என்னமோ ராஜேஷ்குமாரின் புத்தகங்கள் 10 க்கு 5 புத்தகங்கள் பிடிக்காமல் போக, என் கவனம் மெல்ல சுபாவிற்கும், ப.கோ.பி க்கும் தாவ ஆரம்பித்தது. பள்ளிக் கூடப் பருவத்தில் ஆரம்பித்த அந்த பழக்கம் இன்றும் அவ்வப் போது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நரேன் - வைஜயந்தி, ஜான்சுந்தர் - அனிதா,செல்வா - முருகேசன்,பரத் - சுசிலா, விவேக் - ரூபலா, விஷ்ணு இவர்கள பங்கு பெறும் எல்லாக் கதைகளையும் அனேகமாக நான் படித்திருப்பேன் என்று சொல்லலாம். இதைத் தவிர சுபா அவ்வப் போது எழுதும் ராணுவக் கதைகள் ஒன்றைக் கூட விட்டு வைக்க வில்லை.

சீரியஸான புத்தகங்களை மட்டுமே படிப்பவர்க்கு,இவையெல்லாம் சிறுபிள்ளைத்தனமான புத்தகங்களாகத் தோன்றினாலும், எனக்குள் மேலும் மேலும் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி விட்டவை இவையே. அந்த வகையில், வெகு ஜன வாசகர்கள் படிக்கும் இந்த நாவல்கள் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு சேவையை செய்து வருகின்றன என்றுதான் சொல்வேன். இப்படி வெறும் க்ரைம் நாவல்களையே படித்து வந்த நான் முதன் முதலில் படித்த சமூக நாவல் வெ.த.புகழேந்தி என்பவர் எழுதிய "மற்றபடி மனிதர்கள்" எனும் நாவலே. எத்தனை பேருக்கு இந்த நாவலும், இந்த ஆசிரியரும் பரிச்சயம் என்று எனக்குத் தெரிய வில்லை. ஆனால் புத்தகங்கள் வெறும் பொழுது போக்கிற்குத்தான் என்று அது நாள் வரை நான் வைத்திருந்த எண்னங்களை தவிடுபொடியாக்கியது இந்த புத்தகம். "புத்தகங்கள் நல்ல நண்பர்கள்" என்று எனக்குக் கற்றுக் கொடுத்தது கூட இந்த புத்தகம்தான்.

"மற்றபடி மனிதர்கள்" எனக்குள் கிளறி விட்ட நெருப்பு இன்று வரை அடங்க வில்லை. தி.ஜா, ஜெயகாந்தன், அசோகமித்திரன், பிரபஞ்சன், நீல பத்மநாபன், நா.பா, அகிலன், சாண்டில்யன், கல்கி, விக்கிரமன், கௌதம நீலாம்பரன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, ரா.கி.ரங்கராஜன், நல்ல பெருமாள் என நான் வாசித்த நாவலாசிரியர்களின் பெயர்கள் நீண்டு கொண்டே போவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது அந்த புத்தகம்தான்..

இவர்களில் பாலகுமாரனுக்கும், எண்டமூரி வீரேந்திரநாத்துக்கும் என் மனதில் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. ஆன்மீகம் கலக்காமல், மனிதர்களின் மனதில் உட்புகுந்து, உளவியல் ரீதியாக பாலகுமாரன் எழுதிய பல கதைகளை சோறு தண்ணி இல்லாமல், விடிய விடிய படித்திருக்கிறேன். க்ரைம் கதைகளை எழுதினாலும், எண்டமூரியினுடைய ஒரு சில கதைகள் என்னை ரொம்ப நேரம் யோசிக்க வைத்திருக்கின்றன.இவருடைய நடையும், பாலகுமாரனுடைய நடையும் முற்றிலும் வேறு வேறு என்றாலும், மனித எண்ணங்களை psychological ஆக approach செய்து அதை அழகாக வார்த்தையால் வடிப்பதில் இருவருமே சளைத்தவர்கள் இல்லை.

அந்த வகையில் எனக்குப் பிடித்த சில புத்தகங்களை நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

மற்றபடி மனிதர்கள் - 1981 ல் மீனாட்சி புரம் எனும் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் ஒட்டு மொத்தமாக இஸ்லாமிற்கு மாறியதை பிண்ணணியாக கொண்டு எழுதப் பட்ட நாவல் இது. "அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்ற கருத்தை எனக்குள் உரமேற்றிய புத்தகம் இது.

தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி அவர்களால் எழுதப் பட்ட நாவல் இது. இன்றும் எப்போதாவது யாருடைய பாதங்களையாவது நான் பார்க்க நேர்ந்தால், என்னையும் அறியாமல் இப்புத்தகத்தின் பெயர் என் மனதினுள் ஓடும். இவரது மற்ற புத்தகங்கள் எனக்கு அந்த அளவிற்கு பிடிக்காமல் போயிருந்த கால கட்டத்தில், என் தங்கைக்கு கல்லூரியில் துணைப் பாடமாக இந்த புத்தகத்தைக் கொடுத்து விட்டதால், என் ச்கோதரியின் தொல்லை தாங்காமல் படிக்க ஆரம்பித்த புத்தகம் இது. படித்து முடித்தவுடன் என்னுள் தோன்றிய கேள்வி "இவரா மற்றதையும் எழுதினார் என்பதுதான்?"

குருஷேத்திரம் - ர.சு. நல்லபெருமாள் அவர்கள் பத்திரிக்கைத் தொழிலையும், கம்யூனிசத்தையும் பிண்ணனியாகக் கொண்டு எழுதிய நாவல் இது. பத்திரிக்கைத் தொழில் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்திய நூல் இது. இவர் எழுதிய இன்னொரு புத்தகம் (பெயர் தெரிய வில்லை) சித்தார்த்தன் அரண்மனையை விட்டு வெளியேறிய பின்பு, புத்தராக ஞானோதயம் பெறுவதற்கு முன்பு உள்ள இடைப் பட்ட காலத்தில் என்ன நடந்தது என்ற் ஒரு கற்பனையுடன் எழுதப்பட்ட நாவல். இன்று வரை மறு வாசிப்பிற்கு தேடிக் கொண்டிருக்கிறேன்.

மணிக்கொடி - ஜோதிர்லதா கிரிஜா அவர்களால் சுதந்திரப் போராட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப் பெற்ற ஒரு வரலாற்று நாவல் இது. காந்திய சிந்தனைகள் மீது எனக்குள் ஓர் ஈர்ப்பினை ஏற்படுத்திய நாவல். இந்த நாவல் சாகித்ய அகாடமி பரிசினை பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன். ர.சு நல்ல பெருமாள் எழுதிய "கல்லுக்குள் ஈரம்" நாவலும் காந்திய சிந்தனைகளைப் பற்றிய ஏறக்குறைய இதே காலகட்டத்தை மையமாகக் கொண்ட நாவல்தான். எழுத்து நடையும் இரு நாவல்களிலும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். பல தலைவர்களைப் பற்றிய தகவல்கள் இந்த நூல்களில் வெகு சரளமாக வந்து போகும்.

சாண்டில்யன் - இவரது மன்னன் மகள், கன்னிமாடம்,கடல் புறா போன்ற வரலாற்று நாவல்களை நான் எத்தனை முறை படித்திருக்கிறேன் என்று எனக்கேத் தெரிய வில்லை. பத்து பக்கங்களிற்கு கூட வெறுமனே வர்ணணையாக மட்டுமே இவர் எழுதியுள்ள பல நாவல்கள் எனக்குக் கற்றுத் த்ந்த சொல்லாடலும், உவமைகளும் ஏராளம்.

பொன் அந்தி - எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களால் மருதநாயகத்தை நாயகனாகக் கொண்டு எழுதப் பெற்ற வரலாற்று நாவல். கமல் முதன் முதலில் மருத நாயகம் படம் எனது கனவு என்று சொன்னபோது, இந்தப் பெயர் அந்தளவிற்கு எனக்குப் பரிச்சயப் படாததால், யார் இவன்? என்றுதான் நினைத்தேன். இந்த நாவலை படித்து முடித்த போது, கமல் ஏன் அவ்வளவு வெறியாக இருந்தார் என்றுப் புரிந்துக் கொள்ள முடிந்தது.

லேடிஸ் ஹாஸ்டல் - கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு தமிழில் வெகு சில நாவல்களே வந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமானது இந்த லேடிஸ் ஹாஸ்டல். நான் படித்த முதல் எண்டமூரி வீரேந்திரநாத்தின் நாவலும் இதுதான். இக்கதையின் நாயகி கிரண்மயி யின் கேரக்டரைசேஷன் என்னைக் கொள்ளைக் கொண்ட ஒன்று. இன்றும் எனக்கு மிகப் பிடித்த நாவல்களில் இதுவும் ஒன்று. கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட எனக்குத் தெரிந்த மற்றொரு நாவல் வெ.த.புகழேந்தியின் "வீணையடி நீ எனக்கு" எனும் நாவல். இதில் நடு நடுவே பாரதியின் வரிகள் மிக அழகாகக் கையாளப்பட்டிருக்கும்.

அந்தர் முகம் - இதை ஒரு psychological நாவல் என்று சொல்லலாம். மரணத்தின் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனின் மனதில் ஏற்படும் உணர்வுகளை இத்தனை அருமையாகச் சொல்ல முடியுமா என்று என்னை வியக்க வைத்த நாவல் இது. எண்டமூரியின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் என்று நான் சொல்லுவேன். இவர் எழுதிய "நிகிலா" மற்றும் "பந்தம் பவித்ரம்" நாவல்கள் பெண்ணியத்தின் மீது என்னைத் திரும்ப வைத்த நாவல்கள்.

இரும்புக்குதிரைகள் - பாலகுமாரனின் மாஸ்டர் பீஸ் இது. இந்த புத்தகத்தை படித்த அடுத்த பத்து நாட்களிற்கு என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை. குதிரையை வைத்து இவர் எழுதிய கவிதைகள், இவருக்குள்ளே இருந்த நல்ல கவிஞரை எனக்கு அடையாள்ம் காட்டியவை. இவர் எழுதிய பல நாவல்கள் எனக்குப் பிடித்திருந்தாலும், மெர்க்குரிப் பூக்கள், பயணிகள் கவணிக்கவும், கரையோர முதலைகள், நிலாவே வா, இனிது இனிது காதல் இனிது, திருமணமான என் தோழிக்கு ஆகிய நாவல்கள் எனக்குக் கற்றுத் தந்தவை ஏராளம். அவற்றைப் பட்டியலிட்டால் நான் பத்து பதிவுகளைப் போட வேண்டி இருக்கும்.

உடையார் - இனி பாலகுமாரனே நினைத்தாலும் இப்படி ஒரு நாவலை எழுத முடியுமா என்பது சந்தேகமே. பொன்னியின் செல்வன் படித்து முடித்ததும், அவ்வளவுதானா? எனும் ஒரு ஏக்கம் நெஞ்சினுள்ளே ஓட, இதன் தொடர்ச்சி என்னவாய் இருக்கும் என்றுத் தேடித் தேடி விக்கிரமனின் "நந்திபுரத்து நாயகி" படித்த பின்பு ஏனோ அது அந்தளவுக்கு என்னைக் கவராமல் போய்விட்ட நிலையில் என் கையில் கிடைத்த நாவல்தான் இந்த உடையார். காதலையும், வீரத்தையும் மட்டுமே சரித்திரமாகப் பார்த்திருந்த எனக்கு, வரலாற்றின் பல அரிய பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை இந்த புத்தகத்தையே சேரும். ஒரு வரியில் சொல்வதென்றால் இது எல்லாம் புத்தகமே இல்லீங்க. பொக்கிஷம்.


பி.கு: இதில் இடம் பெறாத மற்ற புத்தகங்கள் எல்லாம் என்னைக் கவரவில்லை என்று அர்த்தம் இல்லை. அவை இந்த தருணத்தில் எனக்குத் தோன்ற வில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் புத்தகங்களைப் பற்றிய உங்களது கருத்துக்களை முடிந்தால் தெரியப்படுத்துங்கள். அதேப் போன்று உங்களுக்குப் பிடித்த புத்தகங்களைப் பற்றி பின்னுட்டத்தின் மூலமாகவோ, பதிவின் மூலமாகவோ சொல்லுங்களேன். நாம் பகிர்ந்துக் கொள்ளலாம்.

ஒரு படைப்பின் வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக அப்படைப்பின் மீதான விமர்சனம் திகழ்கிறது. எந்த ஒரு படைப்பாளிக்கும் விமர்சனம் என்பது, உற்சாகப் படுத்தும் அல்லது தவறுகளைச் சுட்டிக் காட்டும் ஒரு நண்பனாக இருக்கிறது. எட்டாம் வகுப்புப் படிக்கையில்,

"இளைஞனே,
உருக்க உருக்க உருக நீ தங்கம் இல்லை.
சூடியவுடன் வாட நீ மல்லிகை இல்லை.
கண நேரத்தில் அணைந்து போகும் தீக்குச்சி இல்லை"

என்பது போன்ற அமெச்சூர்த்தனமான கவிதைகளையும் பார்த்து விட்டு 'ரொம்ப நல்லா இருக்குடா' என்று நான் முகம் மறந்து போன, என் பக்கத்து பெஞ்சுக்காரன் சொன்ன வார்த்தைகள் தான் இன்று என்னை ஒரு வலைப் பதிவனாக ஆளாக்கியிருக்கிறது. காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் ஒரு காதலி தரும் வலியை, மிக எளிதாக "கேவலமான படைப்பு" என்பது போன்ற விமர்சனங்கள் தந்து விடும். ஒரு முழு பரிமாணத்தோடு, ஆக்கப் பூர்வமாக கலையை அலசிப் பார்க்கும் ஒரு மயிலிறகு தான் விமர்சனம் என்பது.

இன்றும் தீவிர விமர்சனத்துக்குள்ளாகும் இரண்டு கலை அம்சங்கள் புத்தகங்களும், தமிழ் சினிமாவும் தான். இவற்றில் மிகத் தீவிரமாக விமர்சனத்துக்குள்ளாவது காட்சி ஊடகம் என்று சொல்லப் படும் சினிமாதான். சினிமா குறித்த புரிதலின்றியே பல விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்னால் குமுதத்தில் பாமரன் என்பவரால் எழுதப் பட்ட விமர்சனங்கள் பல திரைப் படங்களை துவைத்துக் காயப் போட்டது. பின்னர் ஒரு குறுகிய காலத்திற்கு சன் டீவியில் இடம் பெற்ற திரை விமர்சனம் எனும் நிகழ்ச்சி இதே வேலையை செய்து வந்தது. 'நிழல்', 'கனவு', 'உயிர்மை' முதலான சிறு பத்திரிகைகளில் மட்டும் சினிமா குறித்தான தீவிரமான கட்டுரைகள், நேர்காணல்கள் அவ்வப்போது வெளியாகின்றன.

ஆனால் சமீப காலங்களில் வெளிவரும் பல விமர்சனங்கள் ஒரு சார்புத் தன்மையாகவோ, அல்லது விமர்சகரின் அதி மேதாவித் தனத்தின் வெளிப்பாடாகவோ மட்டுமே உள்ளது.
இந்த ஒற்றைச் சார்புத் தனமையால் பெரிதும் பாதிக்கப் படுவது கமல், மணிரத்னம், சேரன், .....(இன்னும் பலர் உள்ளனர்) போன்ற நல்ல படைப்பாளிகள்தான். எப்படிப் பட்ட படம் எடுத்தாலும், அதில் தேடிப் பிடித்து,சின்னச் சின்ன குறைபாடுகளை பூதக் கண்ணாடி வைத்து பெரிது படுத்தி, மொத்தத்தில் அப்படம் ஒரு குப்பை என்பது போன்ற விமர்சனங்களை மிக எளிதாக அளித்து விட்டுச் சென்று விடுகின்றனர். அல்லது இப்படம் 'என்னைப் போன்றவர்களை திருப்தி செய்ய வில்லை' என்று தன்னை முன்னிலைப் படுத்தி நிற்பதில் பெருமிதம் கொள்கின்றனர்.

சேரனின் 'தவமாய் தவமிருந்து' எனும் படம் உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்திய ஒரு சிறந்த படம். அதில் ஒரு சில குறை பாடுகள் யாரேனும் கண்டுபிடித்துச் சொல்லலாம். ஆனால் அது நல்ல படம் என்று நான் ரவுண்டு கட்டி வக்காலத்து வாங்குவேன். இதற்கு இந்தியா டுடே யில் விமர்சன்ம் செய்த கே.முரளிதரன் (என்று நினைக்கிறேன்) "படம் முழுக்க ஒரு தந்தையின் கோணத்திலேயே சொல்லப் படுகிறது. தாயின் தியாகங்கள் அந்தளவிற்குக் கண்டுகொள்ளப் பட வில்லை. சற்றே ஆணாதிக்கத் தன்மையில் இருக்கிறது.படம் சுமார்தான்." என்ற ரீதியில் எழுதி இருந்தார். அதைப் படித்தவுடன் "டேய் என்னதாண்டா பிரச்சினை உங்களுக்கு? அம்மா சென்டிமென்டை வெச்சு 100 படம் வந்துடுச்சே. இந்த ஒரு படத்தைதான் விட்டு வைங்களேன்" என்றுதான் தோணியது.

என்னுடைய வருத்தம் இவர்கள் "வியாபாரி" போன்ற மிக மட்டமான படங்களை துவைத்துக் காயப் போட்டாலும் பரவாயில்லை. ஆனால் மிக நல்ல படங்கள் அல்லது ஓரளவு தரமானவை என்று சொல்லப் படும் படங்கள்தான் இவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. "சினிசௌத்" இணையத் தளத்தால் சேரன் தொடர்ந்து தீவிர விமர்சனத்திற்குட்பட்டிருக்கிறார். சேரனின் தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு இரண்டும் சமூக அக்கறையை வெளிப் படுத்துவது போன்ற நாடகம் ஆடுகின்றது என்ற ரீதியில் குற்றம் சாட்டப் பட்டது. இன்னும் பல விமர்சகர்கள் போகிற போக்கில் "ஆட்டொகிரஃப் மற்றும் தவமாய் தவமிருந்து" படங்களின் மீது கல்லெறிந்து விட்டுச் சென்றனர்.

கமல் நடித்ததாலேயே "வேட்டையாடு விளையாடு" படம் ஒரு மிகைப் படுத்தப் பட்ட கண்ணோட்டத்தோடு பார்க்கப் பட்டது.படத்திலுள்ள பல சின்னக் குறைகளைச் சுட்டிக் காட்டி தமிழ் சினிமாவின் சாபக் கேடு இப்படம் என்பது போன்ற வசை பாடல்கள் ஒரு சிலரால் எதிரொலிக்கப்பட்டது. அதே படத்தில் வேறு யாரேனும் நடித்திருந்தால் அப்படம் அப்படியே எதிர் மறையான விமர்சனங்களை பெற்றிருக்கும். கௌதம் மேனனின் காக்க காக்க படமும் இதற்குத் தப்ப வில்லை. "Self narration" ல் வெளி வந்த முதல் படம் அது என மறந்து போய்க் கூட அப்படத்தைப் பாராட்ட வில்லை. மாறாக "ஜீவனின் கத்தல்களும், க்ளைமாக்ஸில் சூர்யா திடீரென உடல் நலம் பெற்று சண்டைக்குச் செல்வதையுமே" பெரிது படுத்திக் காட்டி குற்றம் சுமத்தப் பட்டது.

சமீபத்தில் வெளிவந்த பருத்தி வீரன், மொழி படங்களும் இதற்கு விதி விலக்கல்ல. பருத்தி வீரனில் திருநங்கைகளை சித்தரித்த விதமும், வன்புணர்ச்சி செய்யப் படும் இறுதி கட்ட காட்சிகளும் கண்டிப்பாக விமர்சனத்திற்குட்பட்டவைதான். ஆனால் ஒட்டு மொத்த படத்திலும் ஒன்றுமே இல்லை, இப்படத்தை எல்லாம் பார்ப்பதே தவறு என்பது போன்ற விமர்சனங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு வெகு எளிதாக எழுதப் படுகின்றன. மொழி படத்தில் எல்லரும் பேசிகொண்டே இருக்கிறார்கள், காட்சியமைப்பு சுமார்தான், காமெடியே படத்திற்கு இருந்திருக்கக் கூடாது என்று சொல்லி இதையும் புறந்தள்ளச் சொல்கிறார்கள்.

இப்படி விமர்சனம் செய்பவர்களை, பதில் விமர்சனமாக இதெல்லாம் ஒரு விமர்சனமா? கிறுக்குத்தனமான விமர்சனம், குப்பை, மட்டம் என்று சொன்னால் உடனே விமர்சகர்களிற்கு கோபம் வரும். தன்னுடைய விமர்சனத்தையே ஒரு படைப்பாகக் கருதும் இவர்கள், எந்த வித சலனமுமில்லாமல் மிக எளிதாக வேறு படைப்புகளின் மீது கல்லெறிந்து விட்டுப் போகிறார்கள். ஒரு நல்ல படத்தைக் கொடுத்த அல்லது கொடுக்க முயற்சி செய்த ஒரு படைப்பாளியின் உணர்வுகள் துச்சமென மதிகப் படுகிறது.

பி.கு: இப்படி பல படங்களை என்னால் பட்டியலிட முடியும். முடிந்தால் பின்னூட்டங்களில் சொல்கிறேன். (ஏற்கனவே பதிவு பெரிதாக இருப்பது போல் தோன்றுகிறது). இப்பதிவு குறித்து நியாயமான வாதத்திற்கு நான் தயாராகவே உள்ளேன். எந்த விமர்சகர்களையும் காயப் படுத்த வேண்டும் என்பது இப்பதிவின் நோக்கமல்ல. அப்படி இருப்பின் பாசாங்கில்லாத என் வருத்தங்களைத் தெரிவிக்கிறேன்.

விடி விளக்கின்
வெளிச்சத்தில் கூட
தலையை தாழ்த்தியோ,
இறுகிய கைகளுடனோ,
மட்டுமே இருந்திருக்கிறாய்.

இன்றாவது நீ தொடங்குவாய் என
காத்திருந்து காத்திருந்து
எல்லா நாளிலுமே நானே
தொடங்கியிருக்கின்றேன்.

ஆடைகளைக் களையும் போதும்,
அங்கங்களை வருடும் போதும்,
காமுகன் என நினைத்திடுவாயோ
என்று பயந்தே செய்கின்றேன்.

'ம்' என்ற ஒற்றைச் சொல்லிலேயே
எனக்கான
எல்லா அர்த்தங்களையும்
தேடித் தேடிக் களைத்துப் போகின்றேன்.

உன் வசமிழக்கும் வரை
விருப்பமில்லாதது போல் நடிப்பதாலேயே
பல முறை கற்பழிக்கிறேனோ என்று
பயந்திருக்கின்றேன்.

கணவனிடம் கூட
காமம் காட்ட
மறுப்பதற்கு பதில்
நீ கன்னியாகவே இருந்திருக்கலாம்.

ஒன்று மட்டும் சொல்கிறேன் கேள்.
ஆசைகளும், அவஸ்தைகளும்
பெண்களுக்கு மட்டுமே
சொந்தமில்லை.

"புருஷனை கைக்குள்ள போட்டுக்கோடி,
அப்போதான் காலம் தள்ளமுடியும்!"

அக்காவிற்குச் சொன்ன
அதே அம்மாதான்
என்னிடம் சொன்னாள்.
"உன் பொண்டாட்டி,
தலையணை மந்திரம் ஓதுவா.
அவ முந்தானைல சிக்கிக்காத
நீ ஆம்பளைடா!"

அடிச்சு சொல்லுவேன்.
எல்லா அம்மாக்களும்
'ஹமாம்' அம்மா கிடையாதுன்னு.

நான் பாட்டுக்கு செவ்வனேன்னு நாலு, அஞ்சு கவிதயை எழுதிக்கிட்டு காலத்தை ஓட்டிக்கிட்டு இருந்தேன். நீ எழுதறது மட்டும் தான் லூசுத்தனமா இருக்குமா இல்லை ஆளே லூஸான்னு தெரிஞ்சுக்கணும்னு சொல்லி நம்ம தேவ் போற போக்குல கோர்த்து விட்டுட்டு போய்ட்டாரு. வேற வழியே இல்லாம, நானும் சரி நாம செய்யற அஞ்சு கிறுக்குத்தனம் என்னன்னு ஒக்காந்து யோசிச்சா உள்ள இருந்து மனசாட்சி கத்துது. அடேய் வெறும் அஞ்சு கிறுக்குத்தனமாடா நீ செய்யற? ஐநூறு கிறுக்குத்தனம் செஞ்சுக்கிட்டு இருக்கறடான்னனு சொல்லி.ஆனா அதுக்கு நான் சந்தோஷப்பட்டேன். பரவாயில்லை, நாம செய்யற எல்லாமே அப்படித்தான் இருக்குதுன்னு சொல்லாம போச்சேன்னு உள்ள ஒரு சின்ன ஆறுதல்.

பாருங்க எப்படி எப்படி எல்லாம் நினைச்சு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதா இருக்குன்னு. இதுல கொடுமை என்னன்னா நான் எழுதற ப்ளாகே "நந்தாவின் கிறுக்கல்கள்" னுதான் இருக்கு. சரி ஐநூறையும் எழுதறதுக்கு ஒரு பதிவு பத்தாதுன்னு வெறும் அஞ்சு மட்டும் எழுதி இருக்கேன். பின்ன படிக்கறவங்க நிலைமையையும் கொஞ்சம் யோசிக்கணுமில்லையா?

1.புத்தகங்கள்: இது அனேகமா தமிழ் மணத்தில இருக்கற நிறைய பேருக்கு இருக்கற கிறுக்குதான். என்னதான் சொல்லுங்க. ஏதாவது சாப்டுக்கிட்டே புத்தகம் படிக்கிறதில இருக்கற சுகமே தனிங்க.நமக்கு பிடிச்ச மாதிரி ஒரு புத்தகம் அமைஞ்சிடுச்சின்னா 'ரவுண்ட்' கட்டி உக்காந்து படிப்பேன். 2 மாசம் முன்னாடி நடந்த புத்தகக் கண்காட்சியில 3000 ரூபாய்க்கு மேல புத்தகம் வாங்கினேன்னா பாத்துக்கோங்களேன். என்ன என்ன புத்தகம் வாங்கினேன்னு நானும் ஒரு பதிவு போடலாமான்னு பார்த்தேன். ஆனா அதுக்குள்ள ரொம்ப லேட் ஆய்ட்டதால பேசாம விட்டுட்டேன். அடுத்த புக் ஃபேர்ல என்ன என்ன வாங்கணும்னு இப்ப இருந்தே லிஸ்ட் போட்டுட்டு இருக்கேன்னா பாத்துக்கோங்களேன்.

2.எனக்கு நானே பேசிக்கறது: நான் ஒரு விஷயத்தை ரொம்ப சிறப்பா செஞ்சுட்டா எனக்கு நானே 'கலக்கிட்டடா நந்தா' 'பின்னிட்டடா மாமூ' இந்த மாதிரி ஏதாவ்து சொல்லி என்ன நானே தட்டிக் கொடுத்துக்குவேன். இதே எதையாவது தப்பா செஞ்சு சொதப்பிட்டனா 'டேய் லூசு! இது கூட தெரியாதா உனக்கு' 'கிறுக்கன்டா நீ' இப்படி ஏதாவ்து சொல்லி என்னை நானே திட்டிக்குவேன்.இவ்வளவு ஏன் வண்டி ஓட்டறப்போ சிக்னல் மாறுகிற மாதிரி இருந்தால் 'டேய் கண்ணு போய்டுரா! போய்டுரா' ன்னு சொல்லிக்குவேன். இது பெரும்பாலும் நான் தனியா இருக்கறப்போ மட்டும் தான். அதனால் இப்படி ஒரு பழக்கம் என்கிட்ட இருக்கறது என் நண்பர்களுக்கே தெரியுமா தெரியாதான்னு தெரியலை.

3. சினிமா: சும்மா ரவுண்டு கட்டி படம் பார்க்கிற கேசு. கொஞ்சம் விட்டுருந்தா அசிஸ்டண்ட் டைரக்டர் சான்ஸ்க்கு கூட அலைஞ்சிருப்போம். ஆனா தமிழ் சினிமா கொடுத்து வெச்சது கம்மிதான் போல. ஏனோ அந்த பக்கம் போகாமயே இருந்துட்டேன். நம்மளை சுத்தி இருக்கறதுங்களும் படம் பார்க்கிற கேசுங்களா இருக்கறதால பெரும்பாலான படத்தை பார்த்திடுவேன்.சில படங்களை கணக்கு வழக்கு இல்லாம பாத்திருக்கேன். ரீசண்டா நம்ம கேப்டன் நடிச்ச சபரி படத்தை போய் பார்த்து ரத்தக்களரியா வந்ததை எல்லாம் நான் சொல்ல மாட்டேன். இதுல தமிழ் இங்கிலீஷ்னு பேதம் இல்லாம DVD கலெக்ஷன் எல்லாம் வெச்சிருந்தேன். யார் யாரோ வந்து எடுத்திட்டுப் போனாங்க. மாப்ளை கொடுத்திருடான்னு கேட்டா, யாரு நீ? ன்னு திருப்பி கேக்கிறாங்க. பாசக்கார பயலுக......

4.வாதம் செய்தல்: ஒரு விஷயம் தப்பு. செய்யாதேன்னு சொன்னா அப்படியே ஒத்துக்க மாட்டேன். எதனால தப்பு ன்னு புரியவைக்க சொல்லுவேன். இல்லைன்னா இது சரிதான்னு அவங்க கிட்ட argument பண்ண ஆரம்பிச்சுடுவேன். அதுக்காக மத்தவங்க சொல்றதை ஏத்துக்க மாட்டேன்னு அர்த்தம் கிடையாது. அதே சமயம் சரியான காரணங்கள் இல்லைன்னா கடைசி வரைக்கு அதை ஒத்துக் கொள்ளவும் மாட்டேன்.

5.லேட்டா தூங்க போறது: பேச்ச்சிலர் லைஃபோட சௌகர்யங்கள்ல இதுவும் ஒண்ணுன்னு சொல்லலாம். நைட் படுக்க போறது டெய்லி லேட் ஆகும். சர்வ சாதாரணமா 2 மணி ஆகும். வீக் என்ட்னா 4 மணி 5 மணி கூட ஆகும். வெட்டி அரட்டை, Computer Games, படம் பார்க்கறது, புக்ஸ் இப்படி ஏதாவ்து பண்ணிக்கிட்டு இருப்பேன். வீட்ல எனக்கு 'ராக்கோழி'ன்னுதான் பேரே. நான் தனியா பார்க்கணும்னு நினைக்கிற படங்களை எல்லாம் இப்படி நைட் உக்காந்து தான் பார்ப்பேன். Cricket 2007, Lord of Rings, StrongHold, AOE இந்த மாதிரி பல கேம்ஸை நைட் விடிய விடிய விளையாடிய காலமும் உண்டு. பின்ன இதெல்லாம் இப்பயே பண்ணிக்கிட்டாதாங்க உண்டு.

எல்லாம் படிச்சதுக்கப்புறம். த்தூ! இதெல்லாம் ஒரு பொழப்பா? ன்னு உங்கள்ல பல பேரு கேக்க நினைக்கிறது எனக்கு புரியுது. என்னங்க பண்றது பொது வாழ்க்கைன்னு வந்ததுக்கப்புறம் இதெல்லாம் தாங்கித்தான ஆகணும். சரி நாம லூசு ஆனது போதும். நம்ம பங்குக்கு நாம யாரையாவது மாட்டி விடணுமே. உண்மையில சொல்லப் போனா இப்படி அஞ்சு பேத்தை மாட்டி விடணும்னு சொல்லலைன்னா நான் இந்த பதிவை எல்லாம் எழுதவே மாட்டேன். அது என்னவோ தெரியலை நம்மளால ஒரு நாலு பேரு கஷ்டப் பட்டாங்கன்னா அடி வயித்துல இருந்து ஒரு சந்தோஷம் வரும் பாருங்க. அதெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும்.

1.கார்மேகராஜா -
http://karmegarajas.blogspot.com
2.சிவபாலன் -
http://sivabalanblog.blogspot.com
3.பிரேம் குமார் -
http://premkumarpec.blogspot.com
4.சுரேஷ் -
http://nsureshchennai.blogspot.com
5.இராகவன் -
http://kavithaikealungal.blogspot.com

அப்பாடா! நம்ம பங்குக்கு அஞ்சு பேத்தை கோத்து விட்டாச்ச்சு. யாராவது ஏற்கனவே இந்த ஆட்டத்தை ஆடி முடிச்சிருந்தீங்கன்னா விட்டுடுங்க. மத்தவங்க வந்து இந்த ஜோதியில கலந்துக்கோங்க.

விரல் விட்டு எண்ணிடலாம்
கடந்த ஐந்து வருடங்களில்
நான் சென்று வந்த கோயில்களின்
மொத்த எண்ணக்கையை.

அம்மாவின் வேண்டுதலோ,
தங்கையின் தொந்தரவோ,
அப்பாவின் கோபப்பார்வையோ,
அதன் பின் ஒளிந்து நிற்கும்.

ஆனால்,
உன்னைப் பார்த்ததிலிருந்து
என்னுடைய எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும்
கோயில்களாலேயே நிரப்பப் படுகின்றன.

"பெரிய நாத்திகன் மாதிரி பேசுன!
இப்போ மட்டும் என்ன வந்தது?"
என் நண்பர்கள் கேட்கிறார்கள்.
என்ன சொல்வது அவர்களிடம்?

என்னை,
ஒரு குழந்தை போல் பாவித்து,
ஒவ்வொரு பிரகாரங்களிலும்
நீ வைத்து விடும்
திருநீறு, குங்குமத்தில்
நான் உயிர்த்தெழுவதை,
எவர் புரிந்து கொள்ளக் கூடும்?

அடப் போங்கடா.
நாத்திகமாவது! ஆத்திகமாவது!

முதலிரவில்,
என் காலில் விழுந்து வணங்கிய அந்த கணங்களிலேயே
நொறுங்கிப்போனது
உன் மீதான என் ஒட்டு மொத்த மரியாதையும்.

ஒவ்வொரு நாள் காலையிலும்,
தாலியைத் தொட்டு ஒற்றிக் கொள்ளும் வேளைகளில்,
பொய்த்துக் கொண்டிருக்கிறது
மீதமிருக்கும், என் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்புகளும்.

புடவைக் கடைகளிலும், நகைக் கடைகளிலும்,
உன் முகம் அடையும் பிரகாசத்தை
நம் வீட்டு படுக்கையறையில் கூட
இதுவரை கண்டதில்லை.

உப்புப் போட மறந்ததையும்,
சர்க்கரை அதிகமாய்ப் போட்டதையும்,
தாண்டி
என்னிடம் பேச
விஷயங்களே உனக்கு தோன்றியதில்லை.

'அவரு', 'என் வீட்டுக்காரர்'
உன் உதடுகள்
உச்சரிக்க மறுத்து கூசுமளவிற்கு
என் பெயர்
கெட்ட வார்த்தையாகிப் போனது உனக்கு.

"ம்ம்ம்........ வந்து
அடுத்த வாரம் வீட்டுக்குப் போய்ட்டு வரட்டுமா"
தயங்கி தயங்கி
கேட்கும் ஒவ்வொரு முறையும்
உன் குடும்பத்திலிருந்து அந்நியப்பட்டுப் போகிறேன்.

"வாங்க... உட்காருங்க... காஃபி சாப்பிடுங்க..."
இயந்திரத் தனமாய்
இம்மூன்றைத் தவிர வேறெதையும்
என் நண்பர்களிடத்தில் பேசியதாய்,
எனக்கு நினைவில்லை.

தோழியென்றோ, தோழனென்றோ,
ஒருவருமே இல்லாமல்
உன்னுடைய ஒட்டு மொத்த உலகமே
கணவனும், புகுந்த வீடும் மட்டுமே
என்பதில் நீ வேண்டுமானால்,
பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

என் தந்தையின் எதிரே
அமர்ந்து பேச மறுக்கும்
ஒவ்வொறு முறையும் நினைவுறுத்துகிறாய்
உன் தந்தையின் முன்பு மட்டும்
நீ கால் மீது கால் போட்டமர்ந்து
பேசுவதை.

வழி வழியாய் வந்ததையே
பார்த்தோ...
கேட்டோ...
பழகியோ...
நீயும்
'வத்தக் குழம்புக்குள்'
உன் உலகை
தேடிக் கொண்டிருக்கிறாய்.

போர்த்திக் கொண்டு,
தூணின் பின் நின்று,
நிலம் பார்த்து
பதில் சொல்லும் பழக்கம்
நம் பாட்டிகளோடு
போகட்டும்.

வந்து விடு.
கற்புக்கரசிகளும், பத்தினிப் பெண்களும்
காவியங்களோடு போகட்டும்.
சரி, தவறுகள் செய்யும்
சாதாரண மனுஷியாய்,
உன் வட்டத்தைத் தாண்டி
வெளியே வந்து விடு.பி.கு : இந்த கவிதை(கண்டுக்காதீங்க விடுங்க) தவறாகவும் புரிந்து கொள்ளப் படலாம் என்ற பயத்தில் இதை எழுதுகிறேன். இது திருமணத்திற்கு பின்பு ஒட்டு மொத்தமாய் தடம் புரண்டு போன ஒரு சில பெண்கள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கமே தவிர, நேரடியாகவோ மறைமுகமாகவோ, பெண்களை மட்டம் தட்டும் முயற்சியல்ல.

அப்படியே என்ன நினைக்கறீங்கன்னும் சொல்லிட்டுப் போங்க.

உனக்கென்ன?
உன் பாடு பரவாயில்லை.

என்னைப் போல
மொட்டை மாடி இரவின்
நிலா வெளிச்சத்தில்,
வார்த்தைகளை தேடிப்பிடித்து,
விரயம் செய்து,
நடு நடுவில்
கண்ணே , மணியே சேர்த்து,
கவிதை எனும் பெயரில்
குப்பையாய் ஒன்றை
கொடுக்க வேண்டிய தேவை
எதுவும் இருப்பதில்லை.

நான் தரும் குப்பையை
வாசித்து விட்டு,
மெல்ல முகம் சுளித்து,
கண்களை சுருக்கி,
செல்லமாய் சிணுங்கி,
"ச்சீ போடா"
என நீ சொல்லும்
ஒற்றை சொல்லே போதும்.

அதற்கே நான் பாதி செத்து விடுகிறேன்.

அதெப்படிறா மாமூ!
இவளுங்களால மட்டும் இதெல்லாம் முடியுது?

"குருவி கூடு கட்டறதை ரசிக்கறது,
மழையைப் பார்த்தா துள்ளி குதிக்கறது,
நாய்க்குட்டியை ஓட விட்டு துரத்தி பிடிக்கறது,
குழந்தைங்களைப் பார்த்தா உலகத்தையே மறந்துடறது,
சின்ன காயத்துக்குக் கூட மும்தாஜ் கணக்கா
'ஐயோ பாவம்'னு உருகறது,
பட்டம், பலூன், பஞ்சு மிட்டாய்,
நெல்லிக்காய் னு
வரைமுறை இல்லாமல்
எதைப் பார்த்தாலும் ஆச்சர்யப்படுவது.
இதெல்லாம் ரொம்ப ஓவர்றா !"

நானும் சொல்லித் திரிந்தவன்தான்.
நாயர் கடையில் நின்று கொண்டு,
கூட்டமாய் செல்லும் பெண்களைப் பார்த்து,
நானும் சொல்லித் திரிந்தவன்தான்.

ஆனால்,
அன்றொரு மதிய வெயிலில்,
காரணமில்லாமல் தோன்றிய,
யாருமே மதிக்காத,
அந்த மங்கிய வானவில்லைப் பார்த்து,
"வாவ்! எவ்ளோவ் நல்லா இருக்கு பாரேன்
ச்சோ ச்வீட் !"
என்று நீ சொன்ன போது,
வானவில்லை விட, நீ சொன்ன
வார்த்தைகளை ரொம்ப ரசித்தேன்.

அன்று இரவு என் நண்பனிடம் கூறினேன்.
"ஒண்ணுத்துக்கும் உதவாத விஷயங்களை
ரசிக்கறதுல கூட
ஒரு சுகம் இருக்குடா மச்சான் !"

போடா லூசுபின்ன எதுக்குடா தெரியாத மாதிரி நடிச்ச?
சிணுங்கலாய்க் கேட்டாய் நீ.

தெரிந்தே இருந்தாலும்,
உன்னை சீண்டி விட்டு,
அழ வைத்து, வேடிக்கை பார்த்து,
எதிர்பார்க்காத ஒரு நொடியில்
நான் காட்டிடும் அந்த வெள்ளி கொலுசை,
உதடுகள் குவித்து,
விழிகள் விரிய, இமைகள் படபடக்க,
நீர்த்துளிகள் மெல்ல எட்டிப் பார்க்க,
ஆச்சர்யமும், ஆனந்தமும் கலந்த கலவையாய்,
நீ நின்றிடும்
அந்த ஒரு சில நொடிகளை ரசிக்கத்தான்
என்று எப்படி சொல்வது?

மெல்லச் சிரித்து, அழுத்திச் சொல்கிறேன்.
மறக்க முடியுமா உன் பிறந்த நாளை?
போடி லூசு!


போடி லூசாம்!
எனக்குத் தெரியாதா?
என்னுடைய எல்லா பாவங்களையும் ரசிப்பவன் நீ!
மெல்ல எட்டிப்பார்த்த அந்த நீர்த்துளிகளைத் தவிர,
அந்த சிணுங்கல்,
அந்த கோபம்,
அந்த அழுகை, ஆச்சர்யம், ஆனந்தம்
எல்லாமே பொய்யாய்,
உனக்காகத்தான்டா! எல்லாம் உனக்காகத்தான்!

நான் எப்படிடா நினைப்பேன்?
நீ என் பிறந்த நாளை மறந்திடுவேன்னு.
போடா லூசு.