Home | About Me | E-Mail |

அப்போதுதான் எழுத்து கூட்டிக் கூட்டிப் படிக்கக் கற்று கொண்டிருந்த அந்த ஆரம்ப கால நாட்களில், ஏதேச்சையாக ஒரு நாள் என் கையில் கிடைத்த "சிறுவர் மலர்" பின்னாளில் என் மேல் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம். ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையிலும், மற்ற எவருக்கும் முன்பு முதலில் நான் மட்டுமே அதை படித்து விட வேண்டும் என்று பேப்பர்காரனுக்காய் வாசலிலேயே நான் தவம் கிடப்பேன். நடுப்பக்கப் புதிர்கள், பலமுக மன்னன் ஜோ, எக்ஸ்ரே கண் ரே என்று சிறுவர் மலர் மட்டுமே என் உலகமாய் இருந்து வந்த காலம் அது. கொஞ்ச நாட்களில் சிறுவர் மலர் போரடிக்கா விட்டாலும், மொத்த புத்தகத்தையுமே நான் 10 நிமிடங்களில் படித்து முடித்து விடுமளவுக்கு பழகி விட, படக் கதைகள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பால், என்னுடைய புத்தக வட்டம் மெல்ல ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று விரியத் தொடங்கியது.

இரும்புக் கை மாயாவி, ஸ்பைடர் மேன், கௌ பாய் டெக்ஸ் வில்லர், இரும்பு மனிதன் ஆர்ச்சி, லக்கி லுக் என்று என் ஆதர்ஷ கதா நாயகர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போனது. கடைசி வரை ஏனோ எனக்கு ஜேம்ஸ் பாண்டும், ரிப் கெர்பியும் பிடிக்காமலே போய் விட்டார்கள். ஆனால் அந்த வயதில் ரஜினிகாந்தோ, விஜயகாந்தோ என்னைக் கவர்ந்ததை விட இவர்கள்தான் என்னை அதிகம் கவர்ந்தார்கள்.இன்றும் என் நண்பர்கள் மத்தியில் நான் வேகமாகப் படிப்பவன் என்று பெயர் எடுத்திருப்பதற்கும், மசால் போண்டாவைச் சுற்றித்தந்த பேப்பராக இருந்தால் கூட, அதை குப்பைத்தொட்டியில் போடுவதற்கு முன்னால் என்ன எழுதி இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்திற்கும் இந்த சிறுவர் மலரும், காமிக்ஸ்களுமே காரணம் என்று சொல்லுவேன். Thanks to you My Dear Friends..........

இப்படியே போய்க் கொண்டிருந்த நேரத்தில், சரி என்னதான் இருக்குதுன்னு பார்ப்போமே ன்னு, ஒரு நாள் ஞானோதயம் வந்து நான் கையில் எடுத்த புத்தகம் ராஜேஷ்குமாரின் ஒரு துப்புறியும் நாவல். விவேக் துப்புறியும் அந்த நாவல் ஜெட் வேகத்தில் போக, அப்புறம் தேடித் தேடி ராஜேஷ் குமாரின் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு என்னமோ ராஜேஷ்குமாரின் புத்தகங்கள் 10 க்கு 5 புத்தகங்கள் பிடிக்காமல் போக, என் கவனம் மெல்ல சுபாவிற்கும், ப.கோ.பி க்கும் தாவ ஆரம்பித்தது. பள்ளிக் கூடப் பருவத்தில் ஆரம்பித்த அந்த பழக்கம் இன்றும் அவ்வப் போது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நரேன் - வைஜயந்தி, ஜான்சுந்தர் - அனிதா,செல்வா - முருகேசன்,பரத் - சுசிலா, விவேக் - ரூபலா, விஷ்ணு இவர்கள பங்கு பெறும் எல்லாக் கதைகளையும் அனேகமாக நான் படித்திருப்பேன் என்று சொல்லலாம். இதைத் தவிர சுபா அவ்வப் போது எழுதும் ராணுவக் கதைகள் ஒன்றைக் கூட விட்டு வைக்க வில்லை.

சீரியஸான புத்தகங்களை மட்டுமே படிப்பவர்க்கு,இவையெல்லாம் சிறுபிள்ளைத்தனமான புத்தகங்களாகத் தோன்றினாலும், எனக்குள் மேலும் மேலும் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி விட்டவை இவையே. அந்த வகையில், வெகு ஜன வாசகர்கள் படிக்கும் இந்த நாவல்கள் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு சேவையை செய்து வருகின்றன என்றுதான் சொல்வேன். இப்படி வெறும் க்ரைம் நாவல்களையே படித்து வந்த நான் முதன் முதலில் படித்த சமூக நாவல் வெ.த.புகழேந்தி என்பவர் எழுதிய "மற்றபடி மனிதர்கள்" எனும் நாவலே. எத்தனை பேருக்கு இந்த நாவலும், இந்த ஆசிரியரும் பரிச்சயம் என்று எனக்குத் தெரிய வில்லை. ஆனால் புத்தகங்கள் வெறும் பொழுது போக்கிற்குத்தான் என்று அது நாள் வரை நான் வைத்திருந்த எண்னங்களை தவிடுபொடியாக்கியது இந்த புத்தகம். "புத்தகங்கள் நல்ல நண்பர்கள்" என்று எனக்குக் கற்றுக் கொடுத்தது கூட இந்த புத்தகம்தான்.

"மற்றபடி மனிதர்கள்" எனக்குள் கிளறி விட்ட நெருப்பு இன்று வரை அடங்க வில்லை. தி.ஜா, ஜெயகாந்தன், அசோகமித்திரன், பிரபஞ்சன், நீல பத்மநாபன், நா.பா, அகிலன், சாண்டில்யன், கல்கி, விக்கிரமன், கௌதம நீலாம்பரன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, ரா.கி.ரங்கராஜன், நல்ல பெருமாள் என நான் வாசித்த நாவலாசிரியர்களின் பெயர்கள் நீண்டு கொண்டே போவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது அந்த புத்தகம்தான்..

இவர்களில் பாலகுமாரனுக்கும், எண்டமூரி வீரேந்திரநாத்துக்கும் என் மனதில் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. ஆன்மீகம் கலக்காமல், மனிதர்களின் மனதில் உட்புகுந்து, உளவியல் ரீதியாக பாலகுமாரன் எழுதிய பல கதைகளை சோறு தண்ணி இல்லாமல், விடிய விடிய படித்திருக்கிறேன். க்ரைம் கதைகளை எழுதினாலும், எண்டமூரியினுடைய ஒரு சில கதைகள் என்னை ரொம்ப நேரம் யோசிக்க வைத்திருக்கின்றன.இவருடைய நடையும், பாலகுமாரனுடைய நடையும் முற்றிலும் வேறு வேறு என்றாலும், மனித எண்ணங்களை psychological ஆக approach செய்து அதை அழகாக வார்த்தையால் வடிப்பதில் இருவருமே சளைத்தவர்கள் இல்லை.

அந்த வகையில் எனக்குப் பிடித்த சில புத்தகங்களை நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

மற்றபடி மனிதர்கள் - 1981 ல் மீனாட்சி புரம் எனும் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் ஒட்டு மொத்தமாக இஸ்லாமிற்கு மாறியதை பிண்ணணியாக கொண்டு எழுதப் பட்ட நாவல் இது. "அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்ற கருத்தை எனக்குள் உரமேற்றிய புத்தகம் இது.

தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி அவர்களால் எழுதப் பட்ட நாவல் இது. இன்றும் எப்போதாவது யாருடைய பாதங்களையாவது நான் பார்க்க நேர்ந்தால், என்னையும் அறியாமல் இப்புத்தகத்தின் பெயர் என் மனதினுள் ஓடும். இவரது மற்ற புத்தகங்கள் எனக்கு அந்த அளவிற்கு பிடிக்காமல் போயிருந்த கால கட்டத்தில், என் தங்கைக்கு கல்லூரியில் துணைப் பாடமாக இந்த புத்தகத்தைக் கொடுத்து விட்டதால், என் ச்கோதரியின் தொல்லை தாங்காமல் படிக்க ஆரம்பித்த புத்தகம் இது. படித்து முடித்தவுடன் என்னுள் தோன்றிய கேள்வி "இவரா மற்றதையும் எழுதினார் என்பதுதான்?"

குருஷேத்திரம் - ர.சு. நல்லபெருமாள் அவர்கள் பத்திரிக்கைத் தொழிலையும், கம்யூனிசத்தையும் பிண்ணனியாகக் கொண்டு எழுதிய நாவல் இது. பத்திரிக்கைத் தொழில் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்திய நூல் இது. இவர் எழுதிய இன்னொரு புத்தகம் (பெயர் தெரிய வில்லை) சித்தார்த்தன் அரண்மனையை விட்டு வெளியேறிய பின்பு, புத்தராக ஞானோதயம் பெறுவதற்கு முன்பு உள்ள இடைப் பட்ட காலத்தில் என்ன நடந்தது என்ற் ஒரு கற்பனையுடன் எழுதப்பட்ட நாவல். இன்று வரை மறு வாசிப்பிற்கு தேடிக் கொண்டிருக்கிறேன்.

மணிக்கொடி - ஜோதிர்லதா கிரிஜா அவர்களால் சுதந்திரப் போராட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப் பெற்ற ஒரு வரலாற்று நாவல் இது. காந்திய சிந்தனைகள் மீது எனக்குள் ஓர் ஈர்ப்பினை ஏற்படுத்திய நாவல். இந்த நாவல் சாகித்ய அகாடமி பரிசினை பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன். ர.சு நல்ல பெருமாள் எழுதிய "கல்லுக்குள் ஈரம்" நாவலும் காந்திய சிந்தனைகளைப் பற்றிய ஏறக்குறைய இதே காலகட்டத்தை மையமாகக் கொண்ட நாவல்தான். எழுத்து நடையும் இரு நாவல்களிலும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். பல தலைவர்களைப் பற்றிய தகவல்கள் இந்த நூல்களில் வெகு சரளமாக வந்து போகும்.

சாண்டில்யன் - இவரது மன்னன் மகள், கன்னிமாடம்,கடல் புறா போன்ற வரலாற்று நாவல்களை நான் எத்தனை முறை படித்திருக்கிறேன் என்று எனக்கேத் தெரிய வில்லை. பத்து பக்கங்களிற்கு கூட வெறுமனே வர்ணணையாக மட்டுமே இவர் எழுதியுள்ள பல நாவல்கள் எனக்குக் கற்றுத் த்ந்த சொல்லாடலும், உவமைகளும் ஏராளம்.

பொன் அந்தி - எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களால் மருதநாயகத்தை நாயகனாகக் கொண்டு எழுதப் பெற்ற வரலாற்று நாவல். கமல் முதன் முதலில் மருத நாயகம் படம் எனது கனவு என்று சொன்னபோது, இந்தப் பெயர் அந்தளவிற்கு எனக்குப் பரிச்சயப் படாததால், யார் இவன்? என்றுதான் நினைத்தேன். இந்த நாவலை படித்து முடித்த போது, கமல் ஏன் அவ்வளவு வெறியாக இருந்தார் என்றுப் புரிந்துக் கொள்ள முடிந்தது.

லேடிஸ் ஹாஸ்டல் - கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு தமிழில் வெகு சில நாவல்களே வந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமானது இந்த லேடிஸ் ஹாஸ்டல். நான் படித்த முதல் எண்டமூரி வீரேந்திரநாத்தின் நாவலும் இதுதான். இக்கதையின் நாயகி கிரண்மயி யின் கேரக்டரைசேஷன் என்னைக் கொள்ளைக் கொண்ட ஒன்று. இன்றும் எனக்கு மிகப் பிடித்த நாவல்களில் இதுவும் ஒன்று. கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட எனக்குத் தெரிந்த மற்றொரு நாவல் வெ.த.புகழேந்தியின் "வீணையடி நீ எனக்கு" எனும் நாவல். இதில் நடு நடுவே பாரதியின் வரிகள் மிக அழகாகக் கையாளப்பட்டிருக்கும்.

அந்தர் முகம் - இதை ஒரு psychological நாவல் என்று சொல்லலாம். மரணத்தின் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனின் மனதில் ஏற்படும் உணர்வுகளை இத்தனை அருமையாகச் சொல்ல முடியுமா என்று என்னை வியக்க வைத்த நாவல் இது. எண்டமூரியின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் என்று நான் சொல்லுவேன். இவர் எழுதிய "நிகிலா" மற்றும் "பந்தம் பவித்ரம்" நாவல்கள் பெண்ணியத்தின் மீது என்னைத் திரும்ப வைத்த நாவல்கள்.

இரும்புக்குதிரைகள் - பாலகுமாரனின் மாஸ்டர் பீஸ் இது. இந்த புத்தகத்தை படித்த அடுத்த பத்து நாட்களிற்கு என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை. குதிரையை வைத்து இவர் எழுதிய கவிதைகள், இவருக்குள்ளே இருந்த நல்ல கவிஞரை எனக்கு அடையாள்ம் காட்டியவை. இவர் எழுதிய பல நாவல்கள் எனக்குப் பிடித்திருந்தாலும், மெர்க்குரிப் பூக்கள், பயணிகள் கவணிக்கவும், கரையோர முதலைகள், நிலாவே வா, இனிது இனிது காதல் இனிது, திருமணமான என் தோழிக்கு ஆகிய நாவல்கள் எனக்குக் கற்றுத் தந்தவை ஏராளம். அவற்றைப் பட்டியலிட்டால் நான் பத்து பதிவுகளைப் போட வேண்டி இருக்கும்.

உடையார் - இனி பாலகுமாரனே நினைத்தாலும் இப்படி ஒரு நாவலை எழுத முடியுமா என்பது சந்தேகமே. பொன்னியின் செல்வன் படித்து முடித்ததும், அவ்வளவுதானா? எனும் ஒரு ஏக்கம் நெஞ்சினுள்ளே ஓட, இதன் தொடர்ச்சி என்னவாய் இருக்கும் என்றுத் தேடித் தேடி விக்கிரமனின் "நந்திபுரத்து நாயகி" படித்த பின்பு ஏனோ அது அந்தளவுக்கு என்னைக் கவராமல் போய்விட்ட நிலையில் என் கையில் கிடைத்த நாவல்தான் இந்த உடையார். காதலையும், வீரத்தையும் மட்டுமே சரித்திரமாகப் பார்த்திருந்த எனக்கு, வரலாற்றின் பல அரிய பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை இந்த புத்தகத்தையே சேரும். ஒரு வரியில் சொல்வதென்றால் இது எல்லாம் புத்தகமே இல்லீங்க. பொக்கிஷம்.


பி.கு: இதில் இடம் பெறாத மற்ற புத்தகங்கள் எல்லாம் என்னைக் கவரவில்லை என்று அர்த்தம் இல்லை. அவை இந்த தருணத்தில் எனக்குத் தோன்ற வில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் புத்தகங்களைப் பற்றிய உங்களது கருத்துக்களை முடிந்தால் தெரியப்படுத்துங்கள். அதேப் போன்று உங்களுக்குப் பிடித்த புத்தகங்களைப் பற்றி பின்னுட்டத்தின் மூலமாகவோ, பதிவின் மூலமாகவோ சொல்லுங்களேன். நாம் பகிர்ந்துக் கொள்ளலாம்.

35 Comments:

  1. said...
    பொங்காலியாவையும் மாயவியயும் மறக்கமுடியும்?
    6ஆவது படிக்கையில் மாயாவிக்கு ரசிகர் மன்றம் வைத்தோம் . அம்புலிமாமா,கோகுலம் இவைகளுக்கிடையில் கமிக்ஸ்களும் 9 வது வகுப்பு வரை நல்ல செல்வாக்கு செலுத்தின.

    உணமைதான் பல மூன்றாந்தர நாவல்களும் கமிஸ்களும் வாசிப்பின் மீதான ஒரு ஈடுபாட்டை உருவாக்கியது. தரமான புத்தகங்கள் கிடைக்க ஆரம்பித்தபோது அறிமுகம் கிடைத்த போது அதன் மீது ஆர்வம் கொள்வதற்க்கு வாசிப்பின் மீதான இந்த ஆர்வம் நிறையத் துணை புரிவதாக இருந்தது.
    said...
    எண்டமூரியோட புஷ்பாஞ்சலி படிச்சிருக்கீங்களா நந்தா? அருமையா இருக்கும். பந்தம் பவித்ரம்தான் அவரோட மாஸ்டர் பீஸ் அப்படின்றது என்னோட அபிப்ராயம். அவரோட த்ரில்லர்களில் எனக்கு ரொம்ப பிடித்தது தளபதி. வர்ணஜாலமும் ஒரு ஒவியனின் வாழ்க்கையை ரொம்ப அருமையா சொன்ன நாவல். நானும் பாலகுமாரனின் ஆரம்ப கால நாவல்களை ரொம்ப விரும்பி படிச்சேன். ஆனா அவர் ஒரு குரு மகராஜ் ஸ்தானத்துல உட்கார்ந்துகிட்டு ஊருக்கு உபதேசம் பண்ண ஆரம்பிச்சப்புறம் எழுதின நாவல்கள் கொஞ்சம் எரிச்சல்பட வைக்குது. அவரோட தாயுமானவன் தான் என்னோட பேவரைட். நீங்க சொல்லியிருக்கற மற்றவர்கள் - புகழேந்தி, நல்ல பெருமாள் போன்றவர்களை தேடிபிடிக்க பார்க்கிறேன்.
    said...
    நன்றி சோமி....

    லட்சுமி நீங்களும் எண்டமூரி வாசகர்தானா? புஷ்பாஞ்சலி நான் இன்னும் படிக்கலீங்களே. ஆனா வர்ண் ஜாலமும் தளபதியும் படிச்சிருக்கேன். ரொம்ப அருமையான் த்ரில்லர் அது. அந்த நாவலின் கடைசியில் வரும் சில வரிகள் என்னை ரொம்ப யோசிக்க வைத்தன.

    "மதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை. மதங்களின் பெயரால் சண்டையிடுவது தவறு என்றால், எல்லைகள் கூட மனிதனால் உருவாக்கப் பட்டவைதானே?" எவ்வளவு பெரிய கேள்வி இது.... மதங்களைத் தாண்டி ,எல்லைகளைத் தாண்டி மனிதர்களை நேசியுங்கள் என்று சொல்லாமல் சொன்ன நாவல் தளபதி.

    பந்தம் பவித்ரம் உண்மையிலேயே மாஸ்டர் பீஸ்தாங்க.பெண்ணியத்தை ரொம்ப அழ்காக சொல்லியிருப்பார் அதில.

    பாலகுமாரனின் ஆன்மிகத்துக்கு முந்தைய எழுத்துக்கள் உங்களுக்குப் பிடிக்கக் கூடும் என்று நினைக்கிறேன். நானும் அப்படித்தான்.
    said...
    நந்தா,

    நல்ல பதிவு. நம் தலைமுறையில் புத்தகப் பிரியர்களாக வளர்ந்து விட்டக் கூட்டத்துக்கு உதாரணமாக விளங்குகிறீர்கள்.

    நீங்கள் குறிப்பிட்ட பல உணர்வுகளில் ஒரு பகுதியை நானும் கடந்திருக்கிறேன். நல்ல ஒரு பயணம் இந்த இடுகை.

    ஆங்கிலப் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்து விட்டீர்களா?

    அன்புடன்,

    மா சிவகுமார்
    said...
    நல்ல பதிவு நந்தா.
    said...
    //இரும்புக் கை மாயாவி, ஸ்பைடர் மேன், கௌ பாய் டெக்ஸ் வில்லர், இரும்பு மனிதன் ஆர்ச்சி, லக்கி லுக் என்று என் ஆதர்ஷ கதா நாயகர்களின் பட்டியல் //

    முகமூடி - தமிழ் வலைப்பதிவர் அல்ல:-) - ஆங்கிலத்தில் Phantom என்று அறியப்படுபவர், மந்திரவாதி மாண்ட்ரெக், பயில்வான் லொதார் இவர்களின் இரசிகர்கள் எங்கள் இல்லத்தினர்.

    கல்கண்டு தமிழ்வாணனின் கதைகள் எல்லாவற்றையும் நூலகத்தில் வாங்கச் சொல்லி எல்லாவற்றையும் திரும்பத் திரும்ப படிப்போம்.

    மற்றபடி நீங்கள் குறிப்பிட்டிருந்த எழுத்தாளர்களின் எழுத்துகளையும் இன்னும் விட்டுப்போன சிலரின் (பலரின் ?) புத்தகங்களையும் வாசித்திருக்கிறோம்.

    ர.சு.நல்லபெருமாளின் போராட்டங்கள் என்ற நாவலைத்தான் தாங்கள் குருஷேத்திரம் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வாசித்தவர்கள் வேறு யாரேனும் உறுதி செய்தால் நலம்.

    சுஜாதா (வானமென்னும் வீதியிலே, சொர்க்கத்தீவு, .... எல்லாப் புத்தகங்களும்) , பாலகுமாரன் (மெர்க்குரிப்பூக்கள், அகல்யா, கரையோர முதலைகள், பயணிகள் கவனிக்கவும், இன்னும் பல), எண்டமூரி (பணம், துளசிதளம், மீண்டும் துளசி இன்னும் பல), ஆகியோர் எங்களுக்கும் பிடிக்கும்.

    பிடித்த புத்தங்கள் பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம்.
    Anonymous said...
    //மசால் போண்டாவைச் சுற்றித்தந்த பேப்பராக இருந்தால் கூட, அதை குப்பைத்தொட்டியில் போடுவதற்கு முன்னால் என்ன எழுதி இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்திற்கும் இந்த சிறுவர் மலரும், காமிக்ஸ்களுமே காரணம் என்று சொல்லுவேன். Thanks to you My Dear Friends..........
    //

    மனசாட்சியை குழி தோண்டி புதைத்து விட்டீங்களா நந்தா?இப்படி எல்லாம் அள்ளி விடுறீங்க!மொத்ததில் நீங்க ஒரு தீவிர படிப்பாளி என்று சொல்லுறீங்க!?ஓவரா இல்லையா?
    Anonymous said...
    //பாலகுமாரன் எழுதிய பல கதைகளை சோறு தண்ணி இல்லாமல், விடிய விடிய படித்திருக்கிறேன்.//

    அடபாவமே!!இதுவும் ஓவரா இல்லை?நீங்களவது சாப்பிடமால் இருப்பதவது ;-)
    Anonymous said...
    //நல்ல பதிவு. நம் தலைமுறையில் புத்தகப் பிரியர்களாக வளர்ந்து விட்டக் கூட்டத்துக்கு உதாரணமாக விளங்குகிறீர்கள்.
    //

    ஏமாந்துவிட்டீங்களே அண்ணா!!!!
    Anonymous said...
    நீங்க இன்னும் அம்புலிமாமா பிரியர் என்று கேள்விபட்டேன் நந்தா.மெய்யலுமா?
    said...
    //நந்தா,

    நல்ல பதிவு. நம் தலைமுறையில் புத்தகப் பிரியர்களாக வளர்ந்து விட்டக் கூட்டத்துக்கு உதாரணமாக விளங்குகிறீர்கள்.

    நீங்கள் குறிப்பிட்ட பல உணர்வுகளில் ஒரு பகுதியை நானும் கடந்திருக்கிறேன். நல்ல ஒரு பயணம் இந்த இடுகை.

    ஆங்கிலப் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்து விட்டீர்களா? //


    நன்றி சிவகுமார்.

    ஆங்கிலத்தில் ஷிட்னி ஷெல்டன் நாவல்களை மட்டும் அனேகமாக எல்லாவற்றையும் படித்து விட்டேன். அதைத் தவிர ஒரு புத்தகத்தையும் படித்ததில்லை.
    said...
    துர்கா எத்தனை நாளா காத்துக்கிட்டு இருந்தீங்க. நமக்குள்ள கணக்கு ஆக்கி ஏதாவது இருக்கா? இருந்தா சொல்லுங்க வட்டியும் முதலுமா திருப்பி தந்துடரேன். இப்படியா மானத்தை வாங்கறது? அதுவும் பப்ளிக்கா....
    said...
    என் பயனமும் கிட்டத்தட்டம உங்களை மாதிரித்தான்..!!!
    ராணி காமிக்ஸ், லயன் காமிக்சில் பைத்தியமாய் அலைந்தகாலததை நினைத்துப் பார்க்கின்றேன்.. இரத்தப் படலம் என்னால் மறக்கமுடியாத தொடர்..!!! இன்றும் சில வேளைகளில் கடைகளில் லயன் வாங்கிப் படிப்பேன்.. ரானி காமிக்ஸ் ஆகவும் சீன்னப்புள்ளத் தனமா இருக்கிறதால படிக்கிறது விட்டு பல வருடங்களாகிட்டுது..

    மேலும் ராஜேஷ் குமார், தமிழ் வாணன் என்று சென்று இப்ப கொஞ்சம் ஆங்கில நாவல்கள் வாசிக்கும் பழக்கமும் உள்ளது. இந்த வேளையில் என் அருமை எழுத்தாளர் கல்கியை மறக்கவோ மறுக்கவோ முடியாது நண்பா!
    said...
    நந்தா

    அப்படியே கண்ணதாசனின் காவியங்கள், வாலியின் கவிதைகள், வைரமுத்து, அப்துல்ரகுமான், வண்ணதாசன், வண்ணநிலவன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, பெருமாள் முருகன், தமிழ்ச்செல்வன், சாருநிவேதிதா, ஜெயமோகன் என்று இன்னொரு பக்கத்தையும் பாருங்கள். தேடுங்கள்.. படித்துப் பாருங்கள்..
    said...
    //செல்வநாயகி said...
    நல்ல பதிவு நந்தா. //

    நன்றி செல்வநாயகி.

    //ர.சு.நல்லபெருமாளின் போராட்டங்கள் என்ற நாவலைத்தான் தாங்கள் குருஷேத்திரம் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வாசித்தவர்கள் வேறு யாரேனும் உறுதி செய்தால் நலம்.//

    ஆமாங்க பாலராஜன் கீதா. இவர் தொடர்கதையாக எழுதிகொண்டு இருந்த போது அதை போராட்டங்கள் எனும் பெயரில் எழுதி இருந்தார். அதைப் புத்தகமாக் வெளியிடும் போது குருஷேத்திரம் என்று பெயர் மாற்றம் செய்து விட்டார்.

    //சுஜாதா (வானமென்னும் வீதியிலே, சொர்க்கத்தீவு, .... எல்லாப் புத்தகங்களும்) , பாலகுமாரன் (மெர்க்குரிப்பூக்கள், அகல்யா, கரையோர முதலைகள், பயணிகள் கவனிக்கவும், இன்னும் பல), எண்டமூரி (பணம், துளசிதளம், மீண்டும் துளசி இன்னும் பல), ஆகியோர் எங்களுக்கும் பிடிக்கும்.//

    ஹ்ம்ம்ம்ம். சுஜாதா என்றால் எனக்கு ஞாபகத்திற்கு வருவது "ஒரு நடுப்பகல் மரணம்", "ரத்தம் ஒரே நிறம்" மற்றும் ஜீனோதான். எதற்கும் கட்டுப் படாத அவரது எழுத்து நடையே அவரது தனிச்சிறப்பு.

    //பிடித்த புத்தங்கள் பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம். ///

    உண்மைதான் புத்தகங்களைப் பற்றி பேசும் போது மட்டும் பதிவின் நீளத்தையோ, நேரத்தைப் பற்றியோ கவலைப் பட முடிவதில்லை. நாள் பத்தாதுதான். நன்றி.
    said...
    புத்தகங்களுக்கேயான தனியான வாசனையை இந்த பதிவில் உணர முடிகிறது. ராஜேஸ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்றவர்கள்தான் என் வாசிப்பின் ஆரம்பமும். ஆனால், வெகு சீக்கிரத்திலேயே விலகியும் போய்விட்டார்கள்.(பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் என்ற நாவல் நல்ல நகைச்சுவையோடு கூடியது).

    இதில் எண்டமூரி பெயர் எனக்கு முற்றிலும் புதிதாக இருக்கிறது. யார் அவர்..?
    said...
    Good Posting. Thanks for introducing some interesting Novel.

    Please possible, Victor Hugo's - ஏழை படும் பாடு.
    said...
    //அப்படியே கண்ணதாசனின் காவியங்கள், வாலியின் கவிதைகள், வைரமுத்து, அப்துல்ரகுமான், வண்ணதாசன், வண்ணநிலவன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, பெருமாள் முருகன், தமிழ்ச்செல்வன், சாருநிவேதிதா, ஜெயமோகன் என்று இன்னொரு பக்கத்தையும் பாருங்கள். தேடுங்கள்.. படித்துப் பாருங்கள்..//

    வாருங்கள் உண்மைத் தமிழன். இங்கு பெரும்பாலும் நான் சொல்லி இருப்பது நாவல்களை மட்டும்தான். கட்டுரைத் தொகுப்புப் பற்றியும், கவிதைகளைப் பற்றியும் சேர்த்துப்போட்டிருந்தால் அவ்வளவுதான். பதிவின் நீளம் பார்த்தே பல பேர் படிக்காமல் ஓடி விடுவார்கள்.

    ஆனால் நீங்கள் சொல்லி இருப்பவர்களைப் பற்றி தனியாகவே ஒரு பதிவு போட்டாலும் பத்தாது அவ்வளாவு சரக்குள்ளவர்கள். இவற்றில் கோணங்கி,பெருமாள் முருகன், தமிழ்ச்செல்வன் ஆகியோருடையதை நான் படித்ததில்லை. கண்டிப்பாக படிக்க வேண்டும். நன்றி......
    said...
    வாருங்கள் ஆழியூரான்..

    எண்டமூரி வீரேந்திரனாத் தெலுங்கு எழுத்தாளர். அவருடைய பெரும்பாலான கதைகள் தமிழில் "சுசீலா கனகதுர்கா" என்பவரால் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. என்னுடைய பார்வையில் மிக நல்ல எழுத்தாளர். தெலுங்கில் ரொம்ப ஃபேமஸ் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன்.

    நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகள் என்று பல புத்தகங்களை எழுதியுள்ளார். வேறு ஏதேனும் தகவல் வேண்டுமெனில் கேட்கவும். விசாரித்துச் சொல்லத் தயாரக உள்ளேன். நன்றி.
    said...
    அன்பு நந்தா,

    எத்தனை காலம் ஆனாலும் புத்தகங்களின் மீதான காதல் மட்டும் தீரவே தீராது போலிருக்கிறது. இவருடையவை இவருடையவை என்று பாய்ந்து பாய்ந்து குறிப்பிட்டவர்களுடைய புத்தகங்களையே வாங்கி வாசித்த காலங்கள் போயின. இப்போது கதம்பமான ஒரு வாசிப்பு நிலைக்கு வந்திருப்பதாகவே நினைக்கிறேன். ஒருகாலத்தில் பாலகுமாரன் பைத்தியம் என்று சொல்லலாம். நீங்கள் கூறியிருப்பதுபோல அவர் ஆன்மீகத்திற்கு மாறியபிறகு அந்த ஈர்ப்பு போய்விட்டது. கரையோர முதலைகள் ஸ்வப்னாவையும் தியாகுவையும் இன்னும் மறக்க முடியவில்லை. பிறகு ஜானகிராமனின் நாவல்களை மீண்டும் மீண்டும் வாசிக்குமளவிற்கு ஆழ்ந்து கிடந்தேன். அதிலும் 'மோகமுள்'எனக்கு மிகப் பிடித்தமானதாக இருந்தது. இப்போது பிடித்ததாக மாறிவிட்டது. ஜானகிராமன் வாசித்துப் பாருங்கள். அநேக இடங்களில் உங்களை உணர்வுபூர்வமானவரெனச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கு நிச்சயமாக அவருடைய எழுத்து பிடிக்கும். மிகையற்ற தரமான எழுத்துக்காக அசோகமித்திரனை வாசிக்கலாம். இப்போது ஒரு கனவு மயப்பட்ட கவித்துவத்திற்காக பிரேம்-ரமேசை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அலமாரி நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. இப்போது வாசிப்பதில் ஒரு தேக்கம் வந்துவிட்டது. ஆனால், அடிக்கடி அவற்றைக் காதலோடு பார்த்துக்கொள்வேன். ஒருநாளைக்கு உங்களுள் உலவும் பாத்திரங்கள் எல்லாம் எனக்குள் வந்துவிடுவார்கள் என்று நினைத்துக்கொள்வேன். இப்படி ஒரு நிலை இருக்கிறபோதிலும் புத்தகங்கள் மீது இருக்கிற 'ஆசை'இருக்கிறதே... அதை விபரிக்கவியலாது. ஒரு நூலகத்துள் அல்லது புத்தகக்கடைக்குள் போய் அவற்றைப் பார்த்துக்கொண்டே நிற்பதில் கூட சொல்லவியலாத இனிமை இருக்கிறது. நேரம் பறக்கிறது. என்னைப் போன்றவர்களின் உலகம் காகிதங்களாலானது என்றே தோன்றுகிறது. எனது கவிதைக்கு இட்ட பின்னூட்டத்தின் வழியாக உங்கள் பக்கம் வந்தேன். ஏதோ எனக்கு நானே இதையெல்லாம் சொல்லிவிட்டுச் செல்வதுபோல செல்கிறேன். நான் புத்தகங்களைப் பிரிந்துகொண்டிருக்கிறேன் என்ற உணர்வு தந்த உறுத்தலை இப்படி இறக்கிவைக்கிறேனோ என்னவோ....
    said...
    எண்டமூரி பற்றிய தகவல்களுக்கு நன்றி நந்தா.. இப்போது non-fiction பக்கம்தான் ஆர்வம்.
    said...
    நன்றி சந்திப்பு அவர்களே....

    வாருங்கள் தமிழ்நதி.

    //எத்தனை காலம் ஆனாலும் புத்தகங்களின் மீதான காதல் மட்டும் தீரவே தீராது போலிருக்கிறது. இவருடையவை இவருடையவை என்று பாய்ந்து பாய்ந்து குறிப்பிட்டவர்களுடைய புத்தகங்களையே வாங்கி வாசித்த காலங்கள் போயின. இப்போது கதம்பமான ஒரு வாசிப்பு நிலைக்கு வந்திருப்பதாகவே நினைக்கிறேன். ஒருகாலத்தில் பாலகுமாரன் பைத்தியம் என்று சொல்லலாம். நீங்கள் கூறியிருப்பதுபோல அவர் ஆன்மீகத்திற்கு மாறியபிறகு அந்த ஈர்ப்பு போய்விட்டது. கரையோர முதலைகள் ஸ்வப்னாவையும் தியாகுவையும் இன்னும் மறக்க முடியவில்லை. பிறகு ஜானகிராமனின் நாவல்களை மீண்டும் மீண்டும் வாசிக்குமளவிற்கு ஆழ்ந்து கிடந்தேன். அதிலும் 'மோகமுள்'எனக்கு மிகப் பிடித்தமானதாக இருந்தது. இப்போது பிடித்ததாக மாறிவிட்டது. ஜானகிராமன் வாசித்துப் பாருங்கள். அநேக இடங்களில் உங்களை உணர்வுபூர்வமானவரெனச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கு நிச்சயமாக அவருடைய எழுத்து பிடிக்கும். //

    உண்மைதான் எத்தனை காலம் ஆனாலும் புத்தகங்களின் மீதான காதல் மட்டும் தீராதுதான். யார்தான் மறக்க முடியும் தியாகுவையும், ஸ்வப்னாவையும். தி.ஜா வின் மோகமுள்ளை ஏற்கனவே படித்திருக்கிறேன். நீங்கள் இப்போது மறு படி ஞாபகப் படுத்தி விட்டீர்கள். மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    //இப்போது ஒரு கனவு மயப்பட்ட கவித்துவத்திற்காக பிரேம்-ரமேசை வாசித்துக்கொண்டிருக்கிறேன். //

    நான் இன்னும் பிரேம் ரமேசை வாசிக்க வில்லை. அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

    //அலமாரி நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. இப்போது வாசிப்பதில் ஒரு தேக்கம் வந்துவிட்டது. ஆனால், அடிக்கடி அவற்றைக் காதலோடு பார்த்துக்கொள்வேன். ஒருநாளைக்கு உங்களுள் உலவும் பாத்திரங்கள் எல்லாம் எனக்குள் வந்துவிடுவார்கள் என்று நினைத்துக்கொள்வேன். இப்படி ஒரு நிலை இருக்கிறபோதிலும் புத்தகங்கள் மீது இருக்கிற 'ஆசை'இருக்கிறதே... அதை விபரிக்கவியலாது. ஒரு நூலகத்துள் அல்லது புத்தகக்கடைக்குள் போய் அவற்றைப் பார்த்துக்கொண்டே நிற்பதில் கூட சொல்லவியலாத இனிமை இருக்கிறது. நேரம் பறக்கிறது. என்னைப் போன்றவர்களின் உலகம் காகிதங்களாலானது என்றே தோன்றுகிறது. எனது கவிதைக்கு இட்ட பின்னூட்டத்தின் வழியாக உங்கள் பக்கம் வந்தேன். ஏதோ எனக்கு நானே இதையெல்லாம் சொல்லிவிட்டுச் செல்வதுபோல செல்கிறேன். நான் புத்தகங்களைப் பிரிந்துகொண்டிருக்கிறேன் என்ற உணர்வு தந்த உறுத்தலை இப்படி இறக்கிவைக்கிறேனோ என்னவோ.... //

    என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்களுடைய நேற்றைய கவிதையிலும்"எழுதுவதை நிறுத்தி விட்டால்" என்று பார்த்தேன். இங்கே ஏதோ ஒரு வெறுமை படர்ந்திருப்பது போல சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கே தெரியாம உங்களுடைய தீவிர ரசிகர்கள் பல பேர் இங்கே இருக்கிறோம்.

    உங்களுடைய இந்த மனதைத் தொடும் பின்ன்னூட்டத்திற்கு நன்றி.
    said...
    //உங்களுக்கே தெரியாம உங்களுடைய தீவிர ரசிகர்கள் பல பேர் இங்கே இருக்கிறோம்//

    ரிப்பீட்டே (உபயம் - சென்ஷி)
    :-)))
    said...
    பார்த்தீங்க இல்லை ஆதரவுக் குரலை.
    said...
    அட! இன்னொரு புத்தகப் பைத்தியமா! என்னடா இது, கல்கியின் பெயர் இல்லாத ஒரு புத்தக லிஸ்டா என்று யோசித்துக்கொண்டு படித்த போது கட்டக் கடைசியில் பார்க்க முடிந்தது. நந்திபுரத்து நாயகி படித்திருக்கிறேன். ஆனால் 'உடையார்' படித்தது இல்லை.

    நான் கொஞ்சம் பழைய ஆள். நாங்கள் வளர்ந்த போது கல்கி போய் விட்டார். ஆனால் தேவன், சாவி, மணியன், லக்ஷ்மி, அகிலன், சிவசங்கரி, ஜெயகாந்தன், கடைசியில் சுஜாதா என்று பல எழுத்தாளர்கள் பத்திரிகைகளில் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தார்கள்.
    உத்தியோகத்துக்கு வந்து, வேறு ஊர்களுக்கு கிளம்பிப் போய், மணமுடித்து, பிள்ளைகளை வளர்த்து இப்போது திரும்பிப் பார்க்கும்போது எங்கே அந்த மாதிரி எழுத்தாளர்கள் என்று தோன்றுகிறது. பத்திரிகைகள் படிக்கும் ஆர்வம் குறைந்து விட்டது.
    என் வேண்டுகோள்: படிப்பதை நிறுத்தி விடாதீர்கள். ஆங்கிலப் புத்தகங்களும் படியுங்கள்.
    said...
    //அட! இன்னொரு புத்தகப் பைத்தியமா! என்னடா இது, கல்கியின் பெயர் இல்லாத ஒரு புத்தக லிஸ்டா என்று யோசித்துக்கொண்டு படித்த போது கட்டக் கடைசியில் பார்க்க முடிந்தது. நந்திபுரத்து நாயகி படித்திருக்கிறேன். ஆனால் 'உடையார்' படித்தது இல்லை.//

    வாருங்கள் கல்கிதாசன். கல்கியின் பெயரை இங்கு நான் தனியே குறிப்பிடாதற்குக் காரணம் உண்டு. மேற்குறிப்பிட்ட புத்தகங்களை பலர் படித்திருகலாம். இல்லாமலும் போகலாம்.இந்த புத்தகங்கள் ஒரு சிலருக்கு மிகப் பிடித்திருக்கலாம். ஒரு சிலருக்கு கொஞ்சம் கூட பிடிக்காமல் போய் இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரிந்து புத்தகங்கள் வாசிப்பவர்களில் கல்கியை வாசிக்காதவர்களை விரல் விட்டு எண்ணிடலாம் என்றே தோணுகிறது. விருப்பு வெறுப்பின்றி எல்லாராலும் படிக்கப் பட்டவைதான் அவரது பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்தீபன் கனவு இன்னும் பிற. ஆகையால் தான் அதைத் தனியே சொல்ல வில்லை. முடிந்தால் உடையாரைப் படியுங்கள். என்னுடைய பார்வையில் மிகச் சிறந்த புத்தகம் அது.

    //என் வேண்டுகோள்: படிப்பதை நிறுத்தி விடாதீர்கள். ஆங்கிலப் புத்தகங்களும் படியுங்கள். //

    நன்றி. புத்தகங்கள் மீதான உங்களது காதலை உங்களது வேண்டுகோளில் பார்க்க முடிகிறது.
    said...
    கிட்டத்தட்ட உங்களை போலவே தான் நானும்....அம்புலிமாமாவில் ஆரம்பித்து பின் ஒவ்வொன்றாய்...ராஜேஷ்குமாருடன் குரும்பூர் குப்புசாமி. நாஞ்சில் பிடி சாமியை விட்டு விட்டீர்களே...

    பின்குறிப்பு: உங்கள் பதிவில் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக இருக்கின்றன. கொஞ்சம் பெரிதாக்கலாம்.
    said...
    பின்னூட்டங்களை படித்தப்பிறகு தான் தெரிந்தது ஒரு கூட்டமே நம்மை போல இருக்கிறார்கள் என்று. நெகிழ வைக்கிறது.

    தமிழி நதி எனக்கும் சேர்த்து சொல்லிவிட்டார் போல.....
    said...
    ///பின்னூட்டங்களை படித்தப்பிறகு தான் தெரிந்தது ஒரு கூட்டமே நம்மை போல இருக்கிறார்கள் என்று. நெகிழ வைக்கிறது.

    தமிழி நதி எனக்கும் சேர்த்து சொல்லிவிட்டார் போல..... ///

    ஆமாம் மஞ்சூர் ராசா, இங்கே ஒரு பெரிய்ய்ய்ய கூட்டமே இருக்கிறது. இத்தனை பேர் புத்தகப் பிரியர்களா என்று உண்மையிலேயே நெகிழத்தான் வேண்டி இருக்கிறது. தமிழ் நதி எல்லாருக்கும் சேர்த்தே பேசி இருக்கிறார்.
    said...
    உண்மைதான் நந்தா.

    நீங்கள் சொல்வது போல் ஒவ்வொருவர்க்கும் காமிக்ஸ் புத்தகங்கள் தான் புத்தக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன்.

    நீங்கள் கூறிய மற்ற புத்தகங்களைப் பற்றி எனக்கு தெரியவில்லை.

    ஆனால் பொன்னியின் செல்வன் படித்து முடித்தும் ஏதோ முழுமை பெறாத ஒரு மனம். அதுவும் ஆதித்திய கரிகாலர் மரணம் இன்னும் பலர் அறியாத ஒரு புதிர்.

    மேலும் நம் எல்லோருக்கும் தஞ்சை கோயிலைப் பற்றிதான் தெரியும். ஆனால் அதை கட்ட தூண்டிய நிகழ்வுகள், அதை எப்படி அமைக்க வேண்டும் என அவர்கள் சிந்தித்தது, சிற்பம், வேலை ஆட்கள் என் ஒவ்வொன்றும் நம்மை பரவசமடைய செய்யும்.
    Anonymous said...
    அண்ணாச்சி.. இந்த பாலா இருக்காரே நல்லா எழுதிட்டு இருந்தாரு.. ஆன்மீகமும் கூடத்தான்.. ஆனா ஒரே ஸ்டீர்யோ டைப் ஆ எழுத வந்தப்ப தான் வெறுத்துப் போச்சு.

    உடையார் எழுத நிறைய ஆராச்சி எல்லாம் செஞ்சதா சொல்லிருக்கார். ஆனா நிறைய பொய் அல்லது மிகுந்த கற்பனை கலந்து எழுதி இருக்கார். அதை தெளிவா கற்பனைன்னு சொன்னா படிக்கறவன் ஒரு வரலாற்று புனைவுங்கற வகையில் படிக்கலாம். ஆனா ஆராய்ச்சின்னு சொன்னப்பறம் படிக்கிறவன் அது உண்மையா இருக்கும்னு நம்புவான்ல.

    கல்கி ரொம்ப க்ளியரா அதை முதல்லையே சொல்லிருப்பார். அந்த நேர்மை இல்லாம போச்சு
    said...
    /அண்ணாச்சி.. இந்த பாலா இருக்காரே நல்லா எழுதிட்டு இருந்தாரு.. ஆன்மீகமும் கூடத்தான்.. ஆனா ஒரே ஸ்டீர்யோ டைப் ஆ எழுத வந்தப்ப தான் வெறுத்துப் போச்சு.

    உடையார் எழுத நிறைய ஆராச்சி எல்லாம் செஞ்சதா சொல்லிருக்கார். ஆனா நிறைய பொய் அல்லது மிகுந்த கற்பனை கலந்து எழுதி இருக்கார். அதை தெளிவா கற்பனைன்னு சொன்னா படிக்கறவன் ஒரு வரலாற்று புனைவுங்கற வகையில் படிக்கலாம். ஆனா ஆராய்ச்சின்னு சொன்னப்பறம் படிக்கிறவன் அது உண்மையா இருக்கும்னு நம்புவான்ல.

    கல்கி ரொம்ப க்ளியரா அதை முதல்லையே சொல்லிருப்பார். அந்த நேர்மை இல்லாம போச்சு //

    வருகைக்கு நன்றி அனானி...

    உடையாரில் ஒரு சில இடத்தில் அதீத கற்பனையாக எழுதி இருக்கலாம். அவை ஒரு சில சம்பவங்கள் தானே ஒழிய ஒட்டு மொத்த வரலாறையே அவர் தவறுதலாக எழுதிட வில்லை என்பது என் எண்ணம்.அவர் நன்றாக களப் பணி செய்த பின்பே இதை எழுதினார் என்று நான் அறிந்திருக்கிறேன்.

    பாலச்சந்தர் படத்தில் எப்படி ஒரு சிலர் வயதுக்கு மீறி பேசுவார்களோ அது போல இவரது நாவல் களிலும் ஒரு சில கேரக்டர்கள் ஒரு மிகைப் படுத்தப் பட்ட முதிர்ச்சியோடு இருப்பார்கள். ஒருவேளை அது உங்க்களுக்கு அதீத கற்பனையாகவோ, பொய்யாகவோ தோன்றியிருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக உடையார் ஒரு சிறந்த படைப்பு என்பது என் எண்ணம்.

    ஒரு சின்ன வேண்டுகோள். அடுத்த முறை பெயரையும் சேர்த்து சொல்லி விட்டுப் போகவும். அனானி என்பதை விட பெயரை சொல்லி கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளலாம். இது குறித்து மேலும் ஏதேனும் சொல்ல விரும்பினால், வாருங்கள் பகிர்ந்துக் கொள்ளுவோம்.
    said...
    அன்பு நந்தா,

    உங்கள் பதிவை படித்த போது ஏதோ நானே எழுதியது பொல ஒரு பிரமை. நானும் சிறுவர் மலரிலிருந்து தான் என் படிக்கும் பழக்கத்தை தொடங்கினேன். இப்பொது சுஜாதா, கல்கி கடந்து கொண்டிருக்கிறேன். ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன் என்னுடய விருப்ப எழுத்தாளர்கள். எண்டமூரி சாண்டில்யன் எனது அடுத்த நண்பர்கள்.
    said...
    Nandha,

    Ungaludaya ilakkiya daaham therihiradhu. Neengal kurippitta ezhuthaalarkalum avarkalin padaippukalum suvaarasyamaanavai.

    Naan silavtraip padithirukkiraen: Balakumaran (Mercuryppookkal), Jayakanthan (Paris-ukku Po,(Agni nakshathiram (shortstory), Asokamitran (Iruvar), Sujatha (vaanamenum veedhiyile, Kanavu thozhirchaalai), Aadhavan (Kaagitha Malarkal) ippadi sila. Ilakkiyathai patri maelum ezhudhavum .
    Anonymous said...
    waste one.

Post a Comment