Home | About Me | E-Mail |

ஒரு படைப்பின் வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக அப்படைப்பின் மீதான விமர்சனம் திகழ்கிறது. எந்த ஒரு படைப்பாளிக்கும் விமர்சனம் என்பது, உற்சாகப் படுத்தும் அல்லது தவறுகளைச் சுட்டிக் காட்டும் ஒரு நண்பனாக இருக்கிறது. எட்டாம் வகுப்புப் படிக்கையில்,

"இளைஞனே,
உருக்க உருக்க உருக நீ தங்கம் இல்லை.
சூடியவுடன் வாட நீ மல்லிகை இல்லை.
கண நேரத்தில் அணைந்து போகும் தீக்குச்சி இல்லை"

என்பது போன்ற அமெச்சூர்த்தனமான கவிதைகளையும் பார்த்து விட்டு 'ரொம்ப நல்லா இருக்குடா' என்று நான் முகம் மறந்து போன, என் பக்கத்து பெஞ்சுக்காரன் சொன்ன வார்த்தைகள் தான் இன்று என்னை ஒரு வலைப் பதிவனாக ஆளாக்கியிருக்கிறது. காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் ஒரு காதலி தரும் வலியை, மிக எளிதாக "கேவலமான படைப்பு" என்பது போன்ற விமர்சனங்கள் தந்து விடும். ஒரு முழு பரிமாணத்தோடு, ஆக்கப் பூர்வமாக கலையை அலசிப் பார்க்கும் ஒரு மயிலிறகு தான் விமர்சனம் என்பது.

இன்றும் தீவிர விமர்சனத்துக்குள்ளாகும் இரண்டு கலை அம்சங்கள் புத்தகங்களும், தமிழ் சினிமாவும் தான். இவற்றில் மிகத் தீவிரமாக விமர்சனத்துக்குள்ளாவது காட்சி ஊடகம் என்று சொல்லப் படும் சினிமாதான். சினிமா குறித்த புரிதலின்றியே பல விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்னால் குமுதத்தில் பாமரன் என்பவரால் எழுதப் பட்ட விமர்சனங்கள் பல திரைப் படங்களை துவைத்துக் காயப் போட்டது. பின்னர் ஒரு குறுகிய காலத்திற்கு சன் டீவியில் இடம் பெற்ற திரை விமர்சனம் எனும் நிகழ்ச்சி இதே வேலையை செய்து வந்தது. 'நிழல்', 'கனவு', 'உயிர்மை' முதலான சிறு பத்திரிகைகளில் மட்டும் சினிமா குறித்தான தீவிரமான கட்டுரைகள், நேர்காணல்கள் அவ்வப்போது வெளியாகின்றன.

ஆனால் சமீப காலங்களில் வெளிவரும் பல விமர்சனங்கள் ஒரு சார்புத் தன்மையாகவோ, அல்லது விமர்சகரின் அதி மேதாவித் தனத்தின் வெளிப்பாடாகவோ மட்டுமே உள்ளது.
இந்த ஒற்றைச் சார்புத் தனமையால் பெரிதும் பாதிக்கப் படுவது கமல், மணிரத்னம், சேரன், .....(இன்னும் பலர் உள்ளனர்) போன்ற நல்ல படைப்பாளிகள்தான். எப்படிப் பட்ட படம் எடுத்தாலும், அதில் தேடிப் பிடித்து,சின்னச் சின்ன குறைபாடுகளை பூதக் கண்ணாடி வைத்து பெரிது படுத்தி, மொத்தத்தில் அப்படம் ஒரு குப்பை என்பது போன்ற விமர்சனங்களை மிக எளிதாக அளித்து விட்டுச் சென்று விடுகின்றனர். அல்லது இப்படம் 'என்னைப் போன்றவர்களை திருப்தி செய்ய வில்லை' என்று தன்னை முன்னிலைப் படுத்தி நிற்பதில் பெருமிதம் கொள்கின்றனர்.

சேரனின் 'தவமாய் தவமிருந்து' எனும் படம் உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்திய ஒரு சிறந்த படம். அதில் ஒரு சில குறை பாடுகள் யாரேனும் கண்டுபிடித்துச் சொல்லலாம். ஆனால் அது நல்ல படம் என்று நான் ரவுண்டு கட்டி வக்காலத்து வாங்குவேன். இதற்கு இந்தியா டுடே யில் விமர்சன்ம் செய்த கே.முரளிதரன் (என்று நினைக்கிறேன்) "படம் முழுக்க ஒரு தந்தையின் கோணத்திலேயே சொல்லப் படுகிறது. தாயின் தியாகங்கள் அந்தளவிற்குக் கண்டுகொள்ளப் பட வில்லை. சற்றே ஆணாதிக்கத் தன்மையில் இருக்கிறது.படம் சுமார்தான்." என்ற ரீதியில் எழுதி இருந்தார். அதைப் படித்தவுடன் "டேய் என்னதாண்டா பிரச்சினை உங்களுக்கு? அம்மா சென்டிமென்டை வெச்சு 100 படம் வந்துடுச்சே. இந்த ஒரு படத்தைதான் விட்டு வைங்களேன்" என்றுதான் தோணியது.

என்னுடைய வருத்தம் இவர்கள் "வியாபாரி" போன்ற மிக மட்டமான படங்களை துவைத்துக் காயப் போட்டாலும் பரவாயில்லை. ஆனால் மிக நல்ல படங்கள் அல்லது ஓரளவு தரமானவை என்று சொல்லப் படும் படங்கள்தான் இவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. "சினிசௌத்" இணையத் தளத்தால் சேரன் தொடர்ந்து தீவிர விமர்சனத்திற்குட்பட்டிருக்கிறார். சேரனின் தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு இரண்டும் சமூக அக்கறையை வெளிப் படுத்துவது போன்ற நாடகம் ஆடுகின்றது என்ற ரீதியில் குற்றம் சாட்டப் பட்டது. இன்னும் பல விமர்சகர்கள் போகிற போக்கில் "ஆட்டொகிரஃப் மற்றும் தவமாய் தவமிருந்து" படங்களின் மீது கல்லெறிந்து விட்டுச் சென்றனர்.

கமல் நடித்ததாலேயே "வேட்டையாடு விளையாடு" படம் ஒரு மிகைப் படுத்தப் பட்ட கண்ணோட்டத்தோடு பார்க்கப் பட்டது.படத்திலுள்ள பல சின்னக் குறைகளைச் சுட்டிக் காட்டி தமிழ் சினிமாவின் சாபக் கேடு இப்படம் என்பது போன்ற வசை பாடல்கள் ஒரு சிலரால் எதிரொலிக்கப்பட்டது. அதே படத்தில் வேறு யாரேனும் நடித்திருந்தால் அப்படம் அப்படியே எதிர் மறையான விமர்சனங்களை பெற்றிருக்கும். கௌதம் மேனனின் காக்க காக்க படமும் இதற்குத் தப்ப வில்லை. "Self narration" ல் வெளி வந்த முதல் படம் அது என மறந்து போய்க் கூட அப்படத்தைப் பாராட்ட வில்லை. மாறாக "ஜீவனின் கத்தல்களும், க்ளைமாக்ஸில் சூர்யா திடீரென உடல் நலம் பெற்று சண்டைக்குச் செல்வதையுமே" பெரிது படுத்திக் காட்டி குற்றம் சுமத்தப் பட்டது.

சமீபத்தில் வெளிவந்த பருத்தி வீரன், மொழி படங்களும் இதற்கு விதி விலக்கல்ல. பருத்தி வீரனில் திருநங்கைகளை சித்தரித்த விதமும், வன்புணர்ச்சி செய்யப் படும் இறுதி கட்ட காட்சிகளும் கண்டிப்பாக விமர்சனத்திற்குட்பட்டவைதான். ஆனால் ஒட்டு மொத்த படத்திலும் ஒன்றுமே இல்லை, இப்படத்தை எல்லாம் பார்ப்பதே தவறு என்பது போன்ற விமர்சனங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு வெகு எளிதாக எழுதப் படுகின்றன. மொழி படத்தில் எல்லரும் பேசிகொண்டே இருக்கிறார்கள், காட்சியமைப்பு சுமார்தான், காமெடியே படத்திற்கு இருந்திருக்கக் கூடாது என்று சொல்லி இதையும் புறந்தள்ளச் சொல்கிறார்கள்.

இப்படி விமர்சனம் செய்பவர்களை, பதில் விமர்சனமாக இதெல்லாம் ஒரு விமர்சனமா? கிறுக்குத்தனமான விமர்சனம், குப்பை, மட்டம் என்று சொன்னால் உடனே விமர்சகர்களிற்கு கோபம் வரும். தன்னுடைய விமர்சனத்தையே ஒரு படைப்பாகக் கருதும் இவர்கள், எந்த வித சலனமுமில்லாமல் மிக எளிதாக வேறு படைப்புகளின் மீது கல்லெறிந்து விட்டுப் போகிறார்கள். ஒரு நல்ல படத்தைக் கொடுத்த அல்லது கொடுக்க முயற்சி செய்த ஒரு படைப்பாளியின் உணர்வுகள் துச்சமென மதிகப் படுகிறது.

பி.கு: இப்படி பல படங்களை என்னால் பட்டியலிட முடியும். முடிந்தால் பின்னூட்டங்களில் சொல்கிறேன். (ஏற்கனவே பதிவு பெரிதாக இருப்பது போல் தோன்றுகிறது). இப்பதிவு குறித்து நியாயமான வாதத்திற்கு நான் தயாராகவே உள்ளேன். எந்த விமர்சகர்களையும் காயப் படுத்த வேண்டும் என்பது இப்பதிவின் நோக்கமல்ல. அப்படி இருப்பின் பாசாங்கில்லாத என் வருத்தங்களைத் தெரிவிக்கிறேன்.

19 Comments:

  1. said...
    நந்தா,

    மிக அருமையான சாட்டையடிகளைக் கொண்ட பதிவு..

    தரமான படைப்பாளிகளுக்காகத் தயங்காது குரல்கொடுக்கும் உங்களுக்கு நான் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் அளிக்கிறேன்.. சபாஷ்!

    கமல் படங்களில் கூட பாலியல் சம்பந்தப்பட்ட காட்சிகளை முன்னிறுத்தி அவை நிராகரிக்கப்படுவதை ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளலாம்.. எனினும் பாலியல் தவிர மற்ற தொழில்நுட்ப, காட்சியமைப்பு, தீவிரமுயற்சி, நடிப்பு இப்படிப் பல கண்ணோட்டங்களில் அவர் சளைத்தவரே அல்ல... அவர் வயதையொத்த எத்தனையோ ஏன் எல்லா நடிகர்களையும் விட அவர் இன்னும் கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட உண்மையான கலைஞன்..

    எனக்குக் கமலிடம் பிடித்த விஷயங்களில் ஒன்று. எல்லாப் பேட்டிகளிலும் அவரைப் பற்றியோ அல்லது பிறரைப் பற்றியோ எழும் அந்தரங்கமான கேள்விகளுக்கு அவர் உடனே வைக்கும் முற்றுப்புள்ளி. அவர் கூறும் காரணமும் ஒத்துக்கொள்ளக் கூடியதே - "அது அவரது சொந்த விஷயம். அதைப் பற்றிப் பேச வேண்டாமே ப்ளீஸ்" என்று.

    சேரன் விஷயத்திற்கு வந்தால் அவர் இதுவரை எடுத்துள்ள எந்தப் படங்களிலுமே வியாபார நோக்கு துளியும் இல்லை.. பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசியகீதம், வெற்றிக் கொடிகட்டு, பாண்டவர்பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து என எல்லாப் படங்களிலும் மையக் கருத்து குடும்பம், சமூகம், தனிமனித உணர்ச்சிகள் இவற்றைச் சார்ந்து தான் இருக்குமே ஒழிய, வியாபார நோக்கில் குத்துப்பாட்டு, தேவையில்லாத விரயம் என்று எதுவுமே இராது..

    மாயக்கண்ணாடி - வெளிவரவிருக்கின்ற அவரது புதுப்படத்தில் அவர் தன் பாணியை மாற்றியிருப்பதாகக் கூறியிருக்கிறார் அவர் அளித்த பேட்டியில்.. எந்த அளவுக்கு என்று தெரியவில்லை.. பார்ப்போம்.. ஆயினும் அவரைக் கேள்வி கேட்டே துளைத்து விட்டார்கள் - "ஏன் குடும்பம், சமூகம் இப்படி ஒரே மாதிரியாகப் படம் எடுக்கிறீர்கள்" என்று? அவர் சொன்ன பதில், "சினிமா என்பது என்னைப் பொறுத்தவரை அந்த அளவில் இருக்கிறது. அதில் தவறொன்றுமில்லை" என்பது போல..

    //இப்படி விமர்சனம் செய்பவர்களை, பதில் விமர்சனமாக இதெல்லாம் ஒரு விமர்சனமா? கிறுக்குத்தனமான விமர்சனம், குப்பை, மட்டம் என்று சொன்னால் உடனே விமர்சகர்களிற்கு கோபம் வரும்.//

    வராதா பின்னே? இது பொதுவாக பெரும்பாலானோரிடம் இருக்கும் குணம்.

    //தன்னுடைய விமர்சனத்தையே ஒரு படைப்பாகக் கருதும் இவர்கள், எந்த வித சலனமுமில்லாமல் மிக எளிதாக வேறு படைப்புகளின் மீது கல்லெறிந்து விட்டுப் போகிறார்கள்.//

    அவர்களும் தொழில் பார்க்க வேண்டும் அல்லவா?பிழைக்க
    வேண்டுமே...

    //ஒரு நல்ல படத்தைக் கொடுத்த அல்லது கொடுக்க முயற்சி செய்த ஒரு படைப்பாளியின் உணர்வுகள் துச்சமென மதிகப்படுகிறது.//
    அது இருந்தால் நம் சமூகம் எங்கோ முன்னேறி விடுமே...

    மொழி படத்தைக் குறைசொல்வதற்கான தனிப்பட்ட காரணம் எனக்குத் தெரியவில்லை.. பிரகாஷ்ராஜ் இப்பொழுது கொஞ்சம் நல்ல நிலையில் இருக்கிறார் தனக்கென ஒரு ரசிகர் சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டு.. அவர் திரையில் சில நேரம் வந்தாலே போதும், அதற்காகவே படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் நிறையப் பேரை சம்பாதித்துள்ளார். ஆனந்த விகடனில் வரும் 'சொல்லாததும் உண்மை' படிக்கிறீர்களா? அருமையான பதிவுங்க அது.. ஒவ்வொரு வரியும் உண்மையான மறுக்கமுடியாத வரிங்க..

    திருந்துவாங்களான்னு பார்ப்போம்...
    said...
    //"டேய் என்னதாண்டா பிரச்சினை உங்களுக்கு? அம்மா சென்டிமென்டை வெச்சு 100 படம் வந்துடுச்சே. இந்த ஒரு படத்தைதான் விட்டு வைங்களேன்" //

    :)))

    நந்தா..!

    விமர்சனங்களுக்கு நல்ல விமர்சனம் கொடுத்துள்ளீர்கள்... 100% ஒத்துக்கொள்கிறேன் ... இருந்தாலும் ஒரு குறை இருக்கு... இருங்க பூதக் கண்ணாடியை எங்கேயோ வச்சுட்டேன் தேடி எடுத்து வந்து என்ன குறைன்னு சொல்றேன்.

    :))))))
    said...
    உங்கள் ஆதங்கம் நியாயமானதே. பல இடங்களில் நல்ல படங்களை கூட மிக கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். இதனை சுஜாதா அறிவு ஜீவி திமிர் என்று சரியான முறையில் விமர்சனம் செய்தார்.
    said...
    //சேரனின் 'தவமாய் தவமிருந்து' எனும் படம் உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்திய ஒரு சிறந்த படம். அதில் ஒரு சில குறை பாடுகள் யாரேனும் கண்டுபிடித்துச் சொல்லலாம். ஆனால் அது நல்ல படம் என்று நான் ரவுண்டு கட்டி வக்காலத்து வாங்குவேன். இதற்கு இந்தியா டுடே யில் விமர்சன்ம் செய்த கே.முரளிதரன் (என்று நினைக்கிறேன்) "படம் முழுக்க ஒரு தந்தையின் கோணத்திலேயே சொல்லப் படுகிறது. தாயின் தியாகங்கள் அந்தளவிற்குக் கண்டுகொள்ளப் பட வில்லை. சற்றே ஆணாதிக்கத் தன்மையில் இருக்கிறது.படம் சுமார்தான்." என்ற ரீதியில் எழுதி இருந்தார். அதைப் படித்தவுடன் "டேய் என்னதாண்டா பிரச்சினை உங்களுக்கு? அம்மா சென்டிமென்டை வெச்சு 100 படம் வந்துடுச்சே. இந்த ஒரு படத்தைதான் விட்டு வைங்களேன்" என்றுதான் தோணியது.//


    :))

    நல்ல விமர்சனம்...

    சென்ஷி
    said...
    Good one.

    - Suresh Kannan
    said...
    //இப்படி விமர்சனம் செய்பவர்களை, பதில் விமர்சனமாக இதெல்லாம் ஒரு விமர்சனமா? கிறுக்குத்தனமான விமர்சனம், குப்பை, மட்டம் என்று சொன்னால் உடனே விமர்சகர்களிற்கு கோபம் வரும். தன்னுடைய விமர்சனத்தையே ஒரு படைப்பாகக் கருதும் இவர்கள், எந்த வித சலனமுமில்லாமல் மிக எளிதாக வேறு படைப்புகளின் மீது கல்லெறிந்து விட்டுப் போகிறார்கள். ஒரு நல்ல படத்தைக் கொடுத்த அல்லது கொடுக்க முயற்சி செய்த ஒரு படைப்பாளியின் உணர்வுகள் துச்சமென மதிகப் படுகிறது.//


    நீங்கள் சொல்வதை ஆமோதிக்கிறேன். அதே சமயத்தில் நல்ல படங்களிலும் படத்திற்கு ஒட்டாத வகையில் வரும் சில காட்சிகள் அப்படத்தின் தரத்தையே அழித்து விடுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

    உதாரணமாக மொழி படத்தில் ஒரே ஒரு பாட்டுக்காக மொரீசியஸில் எடுத்திருப்பது தேவையற்றது என தோன்றுகிறது.

    அடுத்து நீங்கள் எதற்காக வருத்தம் தெரிவிக்கவேண்டும் என எனக்கு விளங்கவில்லை.
    said...
    நந்தா,
    நீங்க சொல்வது போன்ற விமர்சனங்கள் எழுதுபவர்களும் கூட, 'நல்ல படம், ஆனால் இன்னும் சின்னச் சின்ன குறைகளைத் தவிர்த்திருக்கலாமே' என்ற கோணத்தில் எழுதுவதாக ஏன் பார்க்கக் கூடாது?

    'வேட்டையாடு விளையாடு' படத்தின் பல காட்சிகளில் எனக்குக் கண்டிப்பாக ஒப்புதல் இல்லை. ஆனால், எல்லா விதத்திலும் முற்போக்கான கமல் இது போன்ற ஒரு படத்தில் நடிக்கும் போது நமக்கு இயல்பான வருத்தம் வருவது நியாயம் தான் அல்லவா? வேறு யாராவது நடித்திருந்தால் அந்தப் படம் இத்தனை எதிர்ப்புகளை/ விமர்சனங்களைச் சந்திக்காமல் போயிருக்கலாம்.

    தவமாய்த் தவமிருந்து நல்ல படம். எனக்கென்னவோ, தாய்-தந்தை இருவரின் தியாகமும் சரியாகக் காட்டப்பட்டிருந்ததாகத் தான் தெரிந்தது. ஆனால், "கதாநாயகிக்கு அதே தந்தைப்பாசம் இருக்காதா?" என்ற செல்வாவின் கேள்வி நியாயமான, 'நல்லதொரு படத்தில் சேரன் இந்த முரணைத் தவிர்த்திருக்கலாமே!' என்னும் ஆதங்கமாகத் தான் ஒலிக்கிறது.

    நீங்கள் பட்டியலிட்டிருக்கும் எல்லா படங்களைப் பற்றியும் இதையே சொல்லலாம். மொழி படத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றிய கேலிக் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சட்டப்பூர்வமான உரிமை கிடைக்கப் போகும் இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற கேலிக் கூத்தான காட்சிகள் அபத்தம்.

    விமர்சனங்கள், சும்மா கைக்கு வலிக்குமோ, முதுக்குக்கு வலிக்குமோ என்று தடவிக் கொடுக்கும் விதமாக இருப்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை. "நல்ல பதிவு/நல்ல படம்" என்ற விமர்சனத்தை மிகச் சுலபமாக முன்வைத்துவிடலாம். ஆனால், அதைத் தாண்டி, அந்தப் படைப்பில் உள்ள தவிர்த்திருக்கக் கூடிய குறைகளையும், நம் எதிர்பார்ப்பு பொருந்தாமல் போன இடங்களையும் பட்டியலிடவேண்டிய அவசியம் நல்லதொரு விமர்சகருக்கு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அடுத்த படைப்புக்கு தன்னைச் செதுக்கிக் கொள்ளும் படைப்பாளிக்கு அது கண்டிப்பாக உதவும்.
    said...
    போன பின்னூட்டத்தில் சுட்டியைத் தவறாகக் கொடுத்துவிட்டேன்.. அந்தப் பதிவின் சரியான சுட்டி இங்கே
    said...
    வருகை தந்த அனைவருக்கும் நன்றி.
    //எனக்குக் கமலிடம் பிடித்த விஷயங்களில் ஒன்று. எல்லாப் பேட்டிகளிலும் அவரைப் பற்றியோ அல்லது பிறரைப் பற்றியோ எழும் அந்தரங்கமான கேள்விகளுக்கு அவர் உடனே வைக்கும் முற்றுப்புள்ளி. //

    சரியாச் சொன்னீங்க.

    //உதாரணமாக மொழி படத்தில் ஒரே ஒரு பாட்டுக்காக மொரீசியஸில் எடுத்திருப்பது தேவையற்றது என தோன்றுகிறது.//

    இது போன்ற விமர்சனங்கள் நிச்சயம் படைப்பளியை காயப் படுத்தாது. ராதா மோகன் அடுத்த படத்தில் இது போன்ற தவறுகளைச் செய்யாமலிருக்கக் கூட இது உதவும்.

    ஆனால் மொரீஷியஸ் பாட்டை மட்டும் சுட்டிக்காட்டி இப்படம் அபத்தத்திலும் அபத்தம், இதை எல்லாம் எப்படி நல்ல படம்னு சொல்றாங்களோ என்று சொல்வது தான் தவறு என்கிறேன்.

    //அடுத்து நீங்கள் எதற்காக வருத்தம் தெரிவிக்கவேண்டும் என எனக்கு விளங்கவில்லை. //

    தெரிந்தோ தெரியாமலோ எந்த ஒரு விமர்சகரையும் என்னுடைய சொற்கள் காயப் படுத்தி விடக் கூடாது என்பதற்காக.
    said...
    இந்த அருமையான பதிவை இப்போது தான் பார்க்கிறேன் .என் எண்ணங்களை உங்கள் எழுத்தில் பார்க்கிறேன் .ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க .மகிழ்ச்சி!
    said...
    வணக்கம் பொன்ஸ்,

    முதலில் உங்களது நேர்மையான கருத்துக்களுக்கு நன்றி. இப்போ இந்த பதிவையே எடுத்துக்கோங்களேன். இப்பதிவு குறித்தான உங்களது பார்வையை படைப்பாளியின் மனது புண்படாமல் , அதே சமயம் குறைகள் என்று உங்களுக்கு தோணியதை எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். இதனால் என்ன நடக்கும் என்றால், ஒன்று இதை நான் ஒத்துக் கொண்டு அடுத்தப் பதிவில் இந்தக் குறைபாடுகள் இல்லாமல் எழுத முயற்சிப்பேன். அல்லது இது குறித்தான எனது விளக்கத்தை அளிக்க முயற்சிப்பேன். எது எப்படியோ, இது நிச்சயம் ஒரு நல்ல புரிதலையே ஏற்படுத்தும்.

    அப்படி இல்லாமல் தொடர்ச்சியாக எனது எல்லாப் பதிவுகளையும் படித்து விட்டு தேடித் தேடி குற்றங்களை (உதாரணத்திற்கு: //உணர்வுகள் துச்சமென மதிகப் படுகிறது.// ஒழுங்கா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதத் தெரியலை இதெல்லாம் ஒரு விமர்சனமா? முதல்ல "க்" சேத்தி எழுது. அப்புறமா விமர்சனம் எழுதலாம் என்பது போல்) மட்டும் சொல்லி விட்டுச் சென்றால், ஒன்று நான் பதிவு எழுதுவதை நிறுத்திடுவேன் அல்லது எப்படியும் அது நொல்லை, இது நொல்லை என்றுதான் சொல்லப் போகிறார்கள், அதனால் இவர்களிற்கு இது போதும் என்று நான் தரம் தாழ்ந்து எழுத ஆரம்பித்து விடுவேன்.

    நான் விமர்சனத்தில் குறைகளே சொல்லாதீர்கள் என்று சொல்ல வர வில்லை. இரண்டு மூன்று குறைகளை காட்டி, நல்ல படங்களை குப்பை என்று சொல்லாதீர்கள் என்றுதான் சொல்கிறேன். நல்ல விமர்சனம் கண்டிப்பாக குறைகளைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்பதை நான் மறுக்க வில்லை.

    மொழி படத்தில் வரும் ஓரினச் சேர்க்கை பற்றிய காட்சிகள் நிச்சயம் அப்படத்திற்கு ஒரு குறையே. நிச்சயம் தவிர்க்கப் பட வேண்டியவையே. ஆனால் இதற்கு விமர்சனம் எழுதிய ஒருவர் சொல்லியிருந்தார். " தமிழ் சினிமாவின் சாபக் கேடு, மொழி போன்ற படங்களை எல்லாம் நல்ல திரைப் படம் என்று சொல்ல வேண்டி இருக்கிறது". இது எந்த வகையில் நியாயமான விமர்சனம் என்று எனக்குப் புரியவில்லை. அழகியே தீயே திரைப் படத்தையும் இன்னொரு விமர்சனத்தில், " படம் ஆரம்பிச்சதுல இருந்து கடைசி வரைக்கும் மாத்தி மாத்தி எல்லாம் பேசிட்டே இருக்காங்க. படத்துக்கு வந்தமா? பட்டி மன்றத்துக்கு வந்தமா? ன்னு எனக்கே சந்தேகமாய்டுச்சு. வணக்கம் போட்டவுடனே முத ஆளா வெளில ஓடி வந்தேன்" என்று எழுதி இருக்கார்.

    அழ்கிய தீயே படத்தில் ஹீரோ ஒரு முறை தன் காதலியை அதிகாலை அடர் வெண்பனியின் நடுவே வெள்ளை நிற உடையில் நடந்து வரும் தேவதையாக கற்பனை செய்வார். ஆனால் க்ளைமாக்ஸில் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் போது பனிக்குப் பதிலாக கொசு மருந்தின் புகைக்கு நடுவில் கதா நாயகி நடந்து வருவது போல இயக்குநர் காமிப்பார். செயற்கைத்தனமில்லாத இந்த காட்சி, ஒவ்வொரு ஃப்ரேமையும் தவம் போல பார்த்துப் பார்த்துச் செய்யும் ஒரு நல்ல படைப்பாளியாக இயக்குநரை பார்க்கச் செய்தது.

    வெயில் போன்ற படங்களில் நல்ல விஷயங்களே ஒன்று கூட இல்லையா? கால காலமாய் ஒற்றைப் பாடலில் முன்னேறிய ஹீரோக்களையும், தேவதையைப் போன்றோ (அ) கொலு பொம்மையைப் போன்ற ஹீரோயின்களையும் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன கண்களிற்கு திரும்பிய பக்கமெல்லாம் தோல்வியையே தழுவும் ஒரு கதா நாயகனும், பருவ வயதில் சலனப் படும் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போன்ற கதா நாயகியும் எனக்கு பெரிய ஆறுதலைத் தந்தார்கள். பசுபதியின் அரிவாள் சண்டையோ, பரத்தின் கோபமோ ஒருவேளை ஒரு சிலருக்கு செயற்கைத்தனமாய்ப் படலாம். ஆனால் மொத்தமாய் இது குப்பை என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது?

    //ஆனால், எல்லா விதத்திலும் முற்போக்கான கமல் இது போன்ற ஒரு படத்தில் நடிக்கும் போது நமக்கு இயல்பான வருத்தம் வருவது நியாயம் தான் அல்லவா? // கமல் படத்திற்கொரு எதிர்பார்ப்பு, அதனைச் சார்ந்து ஒரு விமர்சனம், விஜய் படத்திற்கொரு எதிர் பார்ப்பு, அதனைச் சார்ந்து ஒரு விமர்சனம் என்பது நல்ல விமர்சனத்திற்கான தகுதியே அல்ல. ஒரு ரசிகனாக கமல் படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் போய் பார்க்கலாம். ஆனால் விமர்சகன் அப்படி இருக்கக் கூடாது. விமர்சனம் குறித்தான ஆய்வுக்கட்டுரையை இங்கே பாருங்கள் புரியும்.

    //"கதாநாயகிக்கு அதே தந்தைப்பாசம் இருக்காதா?" என்ற செல்வாவின் கேள்வி நியாயமான, 'நல்லதொரு படத்தில் சேரன் இந்த முரணைத் தவிர்த்திருக்கலாமே!' //
    செல்வா அவர்களின் ஆதங்கம் நியாயமானதே? இதற்கு நான் ஒத்துப் போகிறேன். ஆனால் த. த படத்தில் இது கதை இல்லீங்க. அது ஒரு தந்தை மற்றும் மகனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு படம். அதை பெண்ணியத்தின் கண்ணோட்டத்தில் அணுகுவதே தவறு. செல்வா அவர்களின் இப்பதிவை கால காலமாக மருமகள்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இந்த சமுதாயம் சுமத்தும் முரட்டுத் திணிப்பிற்கு எதிரான ஒரு ஆதங்கமாக (ஆனால் நியாயமான) த்தான் பார்க்க முடிகிறதே தவிர, அப்படத்திற்கான விமர்சனமாக என்னால் பார்க்க முடிய வில்லை. மருமகள்கள் எப்படி இருக்க வேண்டும்? என்றோ, பென்ணியத்திற்கு எதிராக படம் எடுக்க வேண்டும் என்பதோ சேரனின் நோக்கமல்ல.

    தனது பெற்றோர்க்கு மருத்துவமனையில் ஜெனரல் செக்-அப் செய்து விட்டு, காரில் வீட்டிற்கு திரும்பும் போது, தன் மகனை எண்ணி பெருமிதம் கொள்ளும் ஒரு தகப்பனின் உணர்வுகளை, வசனங்கள் இல்லாமல், அழுகை இல்லாமல், ஏன் ஒரு பெரிய புன்னகை கூட இல்லாமல் வெளிப்படுத்திய ஒரு கவிதை போன்ற காட்சிக்கு, விமர்சனம் செய்த ஒருவர், "கார் போகுது போகுது இமய மலைக்கே போகுது. அதுக்குள்ள தூங்கியே எழுந்துட்டேன்" என்று சொல்லி இருந்தார்.

    இன்னும் இது போன்ற பல படங்களை பட்டியலிட ஆசைதான். அப்புறம் என்னை அடிச்சேக் கொன்னுடுவீங்க என்பதால் இது போதும்.

    //விமர்சனங்கள், சும்மா கைக்கு வலிக்குமோ, முதுக்குக்கு வலிக்குமோ என்று தடவிக் கொடுக்கும் விதமாக இருப்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை. // விமர்சனங்கள் தடவிக் கொடுக்க வேண்டும் என்று சொல்ல வில்லை. ஆனால் குத்திக் கிழிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
    said...
    விமர்சனம் குறித்தான ஆய்வுக் கட்டுரையை இங்கே பாருங்கள் புரியும். லிங்க் விட்டுப் போய் விட்டது

    http://www.tamil.cinesouth.com/specials/specials/tamilreview.shtml
    said...
    மிக அருமையான விமர்சனம் பருதிவிரன் படத்தில் வரும் இறுதி காட்சி பற்றி பல வாரான விமர்சனம் வருகிறது ஆனால் தமிழ் படங்கலை பொருத்தவரை இது வரை கற்பலிப்பு காட்சிகில் படுமட்டமான காட்சிகலாக தான் வந்து இருக்கின்றன ஆனால் முதல் முறையாக ஒரு பெண்ணின் கோனதில் இருந்து அவளின் வலியயை பதிவு செய்திருக்கும் படம்
    said...
    நந்தா!
    அருமையான காயப் போடல்; உங்களைப் போல் பலதடவை பல படங்களுக்கு இவங்களும் ;இவங்க விமர்சனமும் எனச் சலித்ததுண்டு.
    தவமாய் தவமிருந்துக்கு ஆனந்தவிகடன் 47 அல்லது 51 கொடுத்ததாக ஞாபகம் அது கில்லிக்கு இதிலும் 2 அல்லது 3 குறைத்துக் கொடுத்ததாக ஞாபகம்; அப்போ உடனே ; ஏன்97 கொடுக்க வில்லை என எழுதினேன்.
    இந்தியா ருடே யும் இந்த ஓரங்கட்டும் வேலை நன்கு செய்யும். சில படத்தை பார்க்கலாம் என எழுதுவாங்க!!! ஏன்? பார்க்காதே என்று எழுதக்கூடாது.
    மிக நல்ல அலசல்..;தொடரவும்.
    said...
    //இந்த அருமையான பதிவை இப்போது தான் பார்க்கிறேன் .என் எண்ணங்களை உங்கள் எழுத்தில் பார்க்கிறேன் .ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க .மகிழ்ச்சி! //

    எனக்கும் மகிழ்ச்சிதாங்க ஜோ.

    //ஏன்97 கொடுக்க வில்லை என எழுதினேன்.//

    சரியான கேள்வி யோகன். எல்லாப் படத்துக்கும் 40 to 45 போட்டா எந்த படத்துக்குதாண் 90 போடுவீங்கன்னு நானும் யோசிச்சிருக்கேன்.
    பாராட்டுக்களுக்க நன்றி வெங்கடேஷ்.
    said...
    நந்தா,

    நீங்கள் சொல்வது போல் சிலர் அப்படித்தான் விமர்சனம் என்ற பெயரில் கல்லெறிகிறார்கள். ஆனாலும் கூட, சில (பல) நல்ல விமர்சனங்களும் அந்த படங்களைப் பற்றி வந்திருக்கின்றன. பிரச்சனை என்னவென்றால், அந்த நல்ல பல விமர்சனங்கள், சென்றடைவது வெகு சிலரைத்தான். தேடிப் பிடித்து இந்த விமர்சனக்களை படிப்பவர்களுக்கு, படங்களின் உண்மைத் தரம் புரிகிறது. மற்றவர்களின் கதி, மாயக்கண்ணாடி கொண்டு காட்டப்படும் அந்த கல்லெறி விமர்சங்கள்தான். அதனால் பாதிக்கப்படுவதும், படைப்பாளிகளை விட, இந்த விமர்சங்களை நாடிப் படிப்பவர்கள்தான் என்பது என் கருத்து. ஏனென்றால் நல்ல பல விஷயங்களை இழந்து விடுகிறார்களே!!!
    said...
    நந்தா,

    ரொம்ப அருமையா உங்க கருத்த வெளிப்படுத்தியிருக்கீங்க!
    உங்க போஸ்டும் சரி..இந்த கமண்ட்ஸும் சரி. ரொம்ப ஆழமா யோசிச்சி சொல்லியிருக்கீங்க!

    முதல் முறையாக,
    முகிலன்.
    said...
    hi nanda,
    nice thought, hats of u
    said...
    நந்தா,

    நீங்க வேற, விமர்சனம் பண்றேண்ட்டு முழூ கதை இல்லே சொல்ரானுங்க. tamil எழுத படிக்க தெரிஞ்ச நாயெல்லம் விமர்சனம் பண்ணுது, அதான் problem.

    TV ல வர ratings பாருங்க, இத்துப்போன T Rajender movie (veeraasaami) top 01 position ல இருக்கும், ஆனா நல்ல படைப்பான chennai-600028, மொழி top4 or 5 ல இருக்கும். இவுனுங்க எல்லாம் திருந்தவே மாட்டானுங்க

Post a Comment