Home | About Me | E-Mail |

எல்லா சமுதாய மக்களாலும், எல்லா அரசியல் அமைப்புகளாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்ட தலைவர் என்று எவரேனும் ஒருவரையாவது உங்களில் யாரேனும் எனக்கு சுட்டிக்காட்ட இயலுமானால், வரலாற்றின் புதியதொரு பக்கத்தை எனக்கும் உலகுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியதான பெருமையை நீங்கள் அடையலாம். ஆனால் அப்படியொரு பெருமித உணர்வை நீங்கள் மட்டுமில்லை, இனிவரும் காலங்களில் கூட எவரேனும் பெற முடியாதென்றே தோணுகிறது.

"இப்படியொரு தலைவர் வாழ்ந்தார் என்று பின்வரும் தலைமுறையினர் நம்புவதற்கே கஷ்டப்படும் அளவில் வாழ்ந்து மறைந்த மனிதர்"என்று ஐன்ஸ்டீனால் பாரட்டப் பட்ட மகாத்மா காந்தியும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் சமீப காலங்களில் தீவிர விமர்சனத்திற்குடபடுபவ்ர்களில் மகாத்மாவுக்கு முதலிடம் கூட கொடுக்கலாம். இதை இந்திய ஜனநாயக கருத்துச் சுதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றி என்று எண்ணி சந்தோஷப் பட்டுக் கொள்வதா? அல்லது மகாத்மாவிற்கே இந்த கதிதானா என்று ஆற்றாமை கொள்வதா? எனபதை அவரவர் விருப்பத்திற்கே விட்டுவிடலாம்.

வரலாற்று நாயகர்கள் வாழ்ந்த காலத்திற்கும், அவர்களை விமர்சனம் செய்பவர்கள் வாழும் காலத்திற்கும் இடைப்பட்டதான கால இடைவெளியும் அந்த இடைப்பட்ட காலங்களில் ஏற்படும் அரசியல், பொருளாதார, கலாச்சார மாற்றங்களும், விமர்சகர்கள் மீது ஏறப்டுத்தும் தாக்கங்களும் சேர்ந்தே ஒரு விமர்சனத்தை நிர்ணயம் செய்கின்றன. அதனாலேயே இந்த நாயகர்கள் இறந்து 50, 60 வருடங்கள் கழித்து "1925 ஆம் வருடத்தில் மார்ச் மாதம் இவர் ம்ட்டும் இப்படி நடந்திருக்காவிட்டால் இந்த நிலை நமக்கு வந்திருக்காது" என்பது போன்ற விமர்சனங்கள் எழுப்பப் படுகின்றன.

பொதுவாக சாதாரண மனிதர்களுக்கும், இது போன்ற தலைவர்களுக்கும் ஒரு பெரும் வித்தியாசம் உண்டு. சாதாரண மனிதர்கள் "Life is Trial and Error" என்று வாழ அனுமதிக்கப்பட்டவர்கள். அவர்களது தவறுகளும், முயற்சிகளும் தீவிர விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை. ஆனால் வரலாற்று நாயகர்களிற்கு இந்த சுதந்திரம் வெகு நிச்சயமாக மறுக்கப் படுகிறது. இது போன்ற சரித்திர புருஷர்கள் எவரை எடுத்துக் கொண்டாலும், அவர்களைச் சுற்றி அந்த காலத்தில் வாழ்ந்த மக்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு புனித பிம்பம் நமக்கு புலப்படும். தலைவர்களை, நம்மை உய்விக்க வ்ந்த ரட்சகர்களாகவே பார்த்துப் பழகியதால் இந்த "புனித பிம்ப கட்டுமானப் பணி" இதோ இந்த நூற்றாண்டிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அப்படி மிகப் புனிதமானவராக, கடவுளின் அவதாரமாக, தவறுகளே செய்ய வாய்ப்பில்லாத தன்னிகரற்ற தலைவராக புனையப்பட்டவ்ர்தான் மகாத்மா. சமீப காலங்களில் இவர் எடுத்த தவறான முடிவுகளும், தோற்றுப் போன முயற்சிகளும், பின்பற்றிய ஒரு சில தவறான கொள்கைகளும் என்று ஒரு சில விஷயங்கள் வெகு தீவிரமாக முன்னிலைப் படுத்தப் படுகின்றன. நண்பர் மா.சிவக்குமார் கூட இது குறித்தான ஒரு தெளிவான புரிதலை ஏற்படுத்தும் விதமாக, நேற்று ஒரு பதிவிட்டிருந்தார். நான் சந்தித்தவர்களில் ஒரு சிலரும் மகாத்மாவின் மீது ஒரு சில குற்றச் சாட்டுகளை முன்வைத்தனர்.

1. காந்தி தீவிர இந்துத்துவ ஆதரவாளர். அவர் வர்ணாசிரம தர்மத்தை ஏறக்குறைய ஆதரித்தார். காந்தி தமிழ் நாடு சுற்றுப் பயணம் வந்த போது அவரது பெயரில் தோழர் ஜீவா நடத்தி வந்த ஆசிரமத்தில் இதை கடை பிடிக்கச் சொன்னதாகவும், அதை ஜீவா மறுத்து விட்டு வருத்தப்பட்டதாகவும் ஒரு சில தோழர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்கள்.

2. பகத் சிங் விஷயத்தில் காந்தி ரொம்பவே துரோகம் இழைத்துவிட்டார் என்று மார்க்சிய தோழர்களால் தீவிரமாக சொல்லப்படுகிறது.

3. உண்மையில் சொல்லப்போனால் காந்தியின் வருகையே ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு கொண்டு வரப்பட்ட ஒரு நிகழ்வே. அந்த கால கட்டத்தில் பல தலைவர்களால் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக இருந்த போது அந்த தீவிரத்தை குறைப்பதற்காகவே அவர் கொண்டுவரப்பட்டார். அஹிம்சை எனும் மந்திரச் சொற்களை உபயோகப் படுத்தி போராட்டத்தின் தீவிரத்தை குறைத்தார்.

4. உப்புச் சத்தியா கிரகமே தேவையில்லாத ஒன்று. அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் வேறு பல போராட்டங்களில் ஈடுபட முக்கிய தலைவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். அதைத் தடுக்கவே இந்த போராட்டத்தை அவர் துவக்கினார்.

5. உலகப்போரின் போது காந்தி எடுத்த ஆங்கிலேயர்களுக்கு ஆதரவான முடிவு.

6. சௌரி சௌரா போராட்டத்தின் போது ஒரு சில ஆங்கிலேயர்கள் இறந்ததற்கே வருத்தப்பட்டு, போராட்டத்தை நிறுத்த சொன்ன காந்திக்கு இங்கே பல இந்திய உயிர்கள் போவது தெரிய வில்லையா?

என்று பல குற்றச்சாட்டுகள் அவர்மீது முன் வைக்கப் படுகின்றன. பெரும்பாலானவை எனக்குத் தெரிந்த ஒரு சில மார்க்சிய தோழர்களால் முன்வைக்கப்பட்டவையே.

காந்தியடிகள் மீது அதீதமாய்த் தோற்றுவிக்கப்ப்ட்ட இந்த புனித பிம்பம், தொடர்ந்து வரலாற்று ஆசிரியர்களாலும் கட்டிக் காப்பாற்றப்பட்டு வர, பாமரர்களுக்கும் இதுவே வரலாறாக பதிந்துவிடுகிறது. சில காலங்கள் கழித்து, வேறு சிலரால் இப்படிப்பட்ட கேள்விகள் முன்வைக்கப் படும் போது, பாமரர்களில் ஒரு சிலர், படீரென்று புனிதபிம்பத்தை தூக்கியெறிந்துவிட்டு, அவரை ஒரேயடியாய் வெறுத்து விடுகினர். வேறு சிலரோ தான் காத்து வந்த புனித பிம்பத்தை கலைக்க மனமின்றி உண்மையான வரலாற்றை தெரிந்துக் கொள்ள மறுத்து விட்டு பாமரர்களாகவே இருக்கப் பழகி விடுகின்றனர்.

இங்கே நாம் கற்றுக் கொள்ள வேண்டியது வரலாற்று நாயகர்களும் மனிதர்களே. தவறான முடிவுகளை எடுத்திருக்க அவர்களுக்கும் சாத்தியமே. தலைவனை தலைவனாக மட்டுமே பார்க்க வேண்டும். அவர்களை நம்மை காக்க வந்த ரட்சகர்களாக நாம் பார்த்தோமேயானால் எந்த காலத்திற்கும் நமக்கு ஒரு தலைவன் தேவைப் பட்டுக் கொண்டேதான் இருப்பான். நாம் பாமரர்களாக்வே இருந்து கொண்டிருப்போம். நம்மில் பலர் இங்கே பாமரராய் இருக்கப் பிரியப்பட்டாலும், இனியொரு தலைவன் இது போன்று கிடைப்பானா என்பது கேள்விக்குறியே?

பி.கு: நம்மில் எவருமே அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் இல்லை. எனவே புத்தகங்களும், அந்த காலத்தில் வாழ்ந்த நடுநிலையாளர்களும் சொல்லும் தகவ்ல்களே இது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை நமக்கு சொல்லமுடியும் எனவே. புனித பிம்பத்தை உடைத்தெறிந்து விட்டு, ஒரு நல்ல தலைவனின் நோக்கங்களை, சந்தித்த போராட்டங்களை, கண்ட வெற்றிகளை, அடைந்த தோல்விகளை, அவமானங்களை, செய்யத் தவறியவைகளை அறிந்து கொள்ள விரும்பும் ஒரே நோக்கத்துடன், இன்னும் இது போன்ற பல கேள்விகளுக்கு நாம் விடை தேடலாம். பகிர்ந்து கொள்ளலாம்.

18 Comments:

 1. பாலாஜி said...
  //வரலாற்று நாயகர்கள் வாழ்ந்த காலத்திற்கும், அவர்களை விமர்சனம் செய்பவர்கள் வாழும் காலத்திற்கும் இடைப்பட்டதான கால இடைவெளியும் அந்த இடைப்பட்ட காலங்களில் ஏற்படும் அரசியல், பொருளாதார, கலாச்சார மாற்றங்களும், விமர்சகர்கள் மீது ஏறப்டுத்தும் தாக்கங்களும் சேர்ந்தே ஒரு விமர்சனத்தை நிர்ணயம் செய்கின்றன. அதனாலேயே இந்த நாயகர்கள் இறந்து 50, 60 வருடங்கள் கழித்து "1925 ஆம் வருடத்தில் மார்ச் மாதம் இவர் ம்ட்டும் இப்படி நடந்திருக்காவிட்டால் இந்த நிலை நமக்கு வந்திருக்காது" என்பது போன்ற விமர்சனங்கள் எழுப்பப் படுகின்றன.//

  உண்மைதான் நந்தா. எல்லாம் முடிந்த பின்பு ஆற அமர உக்காந்து யோசித்துப் பார்த்து விட்டு இப்படி பண்ணியிருந்தா நல்லா இருக்கும். அப்படி பண்ணியிருக்கக் கூடாது என்று சொல்வதை நான் பல முறை கேட்டிருக்கிறேன். இங்கே நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு எப்போதாவது பதில் கிடைத்தால் எனக்கு தெரியப் படுத்துங்கள். அல்லது தனிப் பதிவிடுங்கள்.
  said...
  //...வரலாற்று நாயகர்களும் மனிதர்களே. தவறான முடிவுகளை எடுத்திருக்க அவர்களுக்கும் சாத்தியமே. தலைவனை தலைவனாக மட்டுமே பார்க்க வேண்டும். அவர்களை நம்மை காக்க வந்த ரட்சகர்களாக நாம் பார்த்தோமேயானால்...//
  ஆம் நந்தா. இவ்வாறிருந்து விட்டால் ஒருவரை அளவின்றிப் புகழ்வதும் அல்லது அநாவசியமாக இகழ்வதும் இல்லாமல் போய் அவரை அவராகவே பார்க்க வழியேற்படும். நல்ல சிந்தனை நண்பரே.
  said...
  எல்லாம் சரிதான், இந்திய வரலாற்றை எழுதப் போறேன்னு சொன்னவர் நீங்க தானே? அதுல இதுவும் சேர்த்து எழுதுங்க..
  said...
  ///நம்மில் பலர் இங்கே பாமரராய் இருக்கப் பிரியப்பட்டாலும், இனியொரு தலைவன் இது போன்று கிடைப்பானா என்பது கேள்விக்குறியே?

  பி.கு: நம்மில் எவருமே அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் இல்லை. எனவே புத்தகங்களும், அந்த காலத்தில் வாழ்ந்த நடுநிலையாளர்களும் சொல்லும் தகவ்ல்களே இது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை நமக்கு சொல்லமுடியும் எனவே. புனித பிம்பத்தை உடைத்தெறிந்து விட்டு, ஒரு நல்ல தலைவனின் நோக்கங்களை, சந்தித்த போராட்டங்களை, கண்ட வெற்றிகளை, அடைந்த தோல்விகளை, அவமானங்களை, செய்யத் தவறியவைகளை அறிந்து கொள்ள விரும்பும் ஒரே நோக்கத்துடன், இன்னும் இது போன்ற பல கேள்விகளுக்கு நாம் விடை தேடலாம். பகிர்ந்து கொள்ளலாம்.///

  நல்ல சிந்தனை...நந்தா,


  எந்தவொரு அரசியல், சமூக பிரச்சினையும் காலத்தோடும், சூழலோடும் சார்ந்த ஒன்றாக இருக்கும்... அதை அப்போதைய தலைவர்கள் எப்படி கையாண்டார்கள்... என்ன முடிவுகள் எடுத்தார்கள் என்பது நமக்கு சில அறிவுறுத்தல்களை மட்டுமே தர முடியும். அப்போதைய முடிவுகள் இன்றைய சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்காது... இருக்கவும் முடியாது.
  நமது இன்றைய சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய தலைமை நாம் தான் கொண்டு வர வேண்டுமே தவிர... காந்தி அதற்கு எதுவும் செய்ய இயலாது...
  நாம் நமக்கு நல்ல தலைமை வேண்டுமெனில் நல்ல சமூக, அரசியல் விழிப்புணர்வு கொண்ட சமூகத்தை வளர்த்தெடுப்பது மூலமே நிறைவேற்றிக் கொள்ள முடியும்...

  நாம் கேள்வி (சிந்திக்கும்) கேட்டும் நிலைக்கு மாறாமல்... மீண்டும்...மீண்டும் அடிமைகளாய் வாழ்வதற்க்கு காந்தி காரணமல்ல....
  said...
  காந்தி மட்டுமல்ல. இன்று நம்முடைய பாடபுத்தகங்களில் உள்ள எல்லா தலைவர்களும், இவ்வாறு build-up செய்யப்பட்டவர்களே. இன்று பெரியார், அண்ணா, கருனாநிதி, எம்.ஜி.ஆர் போன்ற நம் திராவிடத் தலைவர்களும் இத்தகையவர்களே. இவர்களுடைய பலம் சிந்தனையில்லா தொண்டர்படை. இப்படியெல்லாம் தாமும் தலைவர்களாமென்று தன்னையே நம்ப வைத்தது இந்த தொண்டர் படையே. தொண்டர்களுக்கும் இதில் ஆதாயம் தான். தமக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க இந்த தலைவர்களை சார்ந்துள்ளனர். ஆரம்ப காலங்களில் தலைவர்களை சார்ந்திருக்கும் தொண்டர்கள், தலைவன் செல்வாக்கு பெற்றதும், தலைவனை வைத்து கொள்ளையடிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.

  //வரலாற்று நாயகர்களும் மனிதர்களே. தவறான முடிவுகளை எடுத்திருக்க அவர்களுக்கும் சாத்தியமே// - இது காந்தியின் விஷயத்தில் முழுக்க முழுக்க உண்மை. காந்தியின் அனேகமான அணுகுமுறை சாமானியர்களின் மீது பரிசோதனை செய்து பார்க்கப்பட்டிருக்கும். அண்ணலுடைய சித்தாந்தங்கள் பல சாமானியர்களின் முதுகெலும்பை உடைத்து நிரூபிக்கப்பட்டிருக்கும். இவருடைய உண்ணாவிரதம், சத்தியாகிரகம் போன்றவை பெரும் ஒழுங்கீனங்கள்.

  யோசித்துப் பார்த்தால் எல்லோரும் இப்படி தன்னுடைய ஆதாயத்திற்காக, சிந்தனா சக்தியை அடகு வைத்துள்ளனர்.
  said...
  நந்தா அவர்களே,

  நன்றாக எழுதியிருக்கிறீர்கள். மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. நேற்றைய குற்றம் இன்றைய நியாயம் நாளைய சாத்திரம்.

  இதுதான் வரலாறு. ஆனால் வெகு சிலர் அதற்கு விதி விலக்காகத்தான் இருக்கிறார்கள்.

  கம்யூனிச தோழர்களின் அரும்பெரும் தலைவர் ஸ்டாலினைப் பற்றி பின்னர் வெளிவந்த வரலாற்று செய்திகள் அவரை கொடுங்கோலராகத்தான் (dictator) காட்டியது.

  ஆனால் ஒன்று. கம்யூனிசம் நிறுவனமாக்கப் பட்டதால் அதன் அடிப்படை கொள்கைகள் சில சமரசப்பட்டுவிட்டது.

  நல்லவேளை காந்தியம் நிறுவனமாக்கப் படவில்லை. காங்கிரஸே அதை கை கழுவி விட்டது.
  said...
  தெளிவான சிந்தனை நந்தா. காந்தியும் பலகீனங்கள் உள்ள மனிதர்தான். எவற்றுக்குமே மறுபக்கம் என்று ஒன்று உண்டு. இனி எதையும் மாற்ற முடியாது, நடந்தவை நடந்தவையே! யார் காரணமாக இருந்தாலும். ஆனால் இனியாவது "காந்தீயம்" என்ற ஒன்று இருப்பதாயும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இன்றைய நாட்களில் கொஞ்சமும் இல்லாத ஒன்றைக் கடைப்பிடிக்கும் முன் நன்கு யோசிக்கவேண்டும். வரும் நாட்கள் இனிய நாட்களாக மாற வாழ்த்துக்கள்.
  said...
  //எல்லாம் முடிந்த பின்பு ஆற அமர உக்காந்து யோசித்துப் பார்த்து விட்டு இப்படி பண்ணியிருந்தா நல்லா இருக்கும். அப்படி பண்ணியிருக்கக் கூடாது என்று//

  சரியா சொன்னீங்க பாலாஜி. கண்டிப்பாக எனக்கு பதில் கிடைத்தால் பதிவின் மூலமோ அல்லது மடலாகவோ தெரியப்படுத்துகிறேன்.

  //ஒருவரை அளவின்றிப் புகழ்வதும் அல்லது அநாவசியமாக இகழ்வதும் இல்லாமல் போய் அவரை அவராகவே பார்க்க வழியேற்படும். நல்ல சிந்தனை நண்பரே. //

  நன்றி சுல்தான்.
  said...
  //எல்லாம் சரிதான், இந்திய வரலாற்றை எழுதப் போறேன்னு சொன்னவர் நீங்க தானே? அதுல இதுவும் சேர்த்து எழுதுங்க.. //

  எனக்கென்னமோ என்னை ஏத்தி விட்டு வேடிக்கை பார்க்கற மாதிரியே இருக்கு.
  said...
  நன்றி பாரி. அரசு. மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

  நன்றி அறியாதவன். நீங்கள் சொன்னவற்றில் ஒரு சிலவற்றுடன் ஒத்துப் போகிறேன்.

  //இவருடைய உண்ணாவிரதம், சத்தியாகிரகம் போன்றவை பெரும் ஒழுங்கீனங்கள்.//

  மன்னிக்கவும் இதில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. இது அவரது கொள்கைகள். இந்த வழிமுறையே தவறு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிப் பார்த்தால் நேதாஜி அவர்களின் முயற்சியையும் குறை சொல்ல முடியும். இது எனது கருத்து. மற்ற படி நேதாஜியைக் குறை சொல்ல வில்லை.

  வருகைக்கு நன்றி.
  said...
  நன்றி Sridhar Venkat.

  காந்தியே சுதந்திரத்திற்கு பின்பு காங்கிரசே வேண்டாம் என்று சொன்னார். இவர்கள் காந்தியை நேரடியாக நிறுவனமாக்க வில்லை. நேருவை வரலாற்று நாயகராக மாற்றுவதற்கு முன்பு இவர்கள் காந்தியை உபயோகப் படுத்திக் கொண்டன்ர். இப்போது நேரு குடும்பத்தை தவிர இந்தியாவை ஆள ஒருவரும் கிடையாது என்று ஒரு மாயையை ஏற்படுத்துகின்றனர்.

  என்னுடைய வருத்தமே ஓரளவு நல்லத் தனமாய் சிந்திக்கும் சிதம்பரம் போன்றவர்களே இதை ஆதரிப்பதுதான்.

  //தலைவர்களை, நம்மை உய்விக்க வ்ந்த ரட்சகர்களாகவே பார்த்துப் பழகியதால் இந்த "புனித பிம்ப கட்டுமானப் பணி" இதோ இந்த நூற்றாண்டிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.//

  இதை இன்னொரு முறை சொல்லிக் கொள்ளுகிறேன்.
  said...
  நந்தா,
  அருமையான கட்டுரை.தெளிவான புரிதல்கள்.
  ஆனால் பின்னூட்டத்தில் //..ஓரளவு நல்லத் தனமாய் சிந்திக்கும் சிதம்பரம் போன்றவர்களே// என்று சொதப்பி விட்டீர்கள். :-)).
  சிதம்பரம் நல்லத்தனமாக சிந்திப்பார். ஆனால் அது யாருக்கு நல்லததனம் எனபது மில்லியன் டாலர் கேள்வி.

  உங்களின் பார்வையில் அல்லது கோணத்தில் சிதம்பரத்தின் செயல்கள் நல்லத்தனமாக இருக்கலாம். தவறே இல்லை.அது உங்களின் பார்வை.

  மா.சிவக்குமார் ஒரு இடத்தில் சொல்லியிருப்பார்... "தனது வீட்டின் ப்ட்ஜெட்டைப் போடும் தேவையே வந்தது இல்லை என்று சொல்லும் சிதம்பரம் எப்படி நல்ல பட்ஜெட்டை தாயரிப்பார்" என்று.
  said...
  தெளிவான சிந்தனைகள் நந்தா. கற்பனைக் காவியங்களில் இருக்கும் அவதாரப் புருஷர்களைக் கூட தவறே செய்யாதவராக வடிவமைக்க முடியாது. அப்படி இருக்கும் பொழுது காந்தியடிகளிடத்திலும் அதனை எதிர்பார்க்கக் கூடாது. காந்தி என்ற மனிதரிடத்தில் குறைகள் இருக்கலாம் அது பற்றி கவலையில்லை. அவர் பின்பற்றி அவரால் அறியப்படும் கொள்கைகளான அஹிம்சை போன்றவைதான் முக்கியம் காந்தி என்ற மனிதரை விட.
  said...
  நன்றி கல்வெட்டு.

  /ஓரளவு நல்லத் தனமாய் சிந்திக்கும் சிதம்பரம் போன்றவர்களே// என்று சொதப்பி விட்டீர்கள். :-)). //

  நினைச்சேன் இதைப் போடும் போதே.முதலில் ஓரளவு நல்லத் தனமாய் சிந்திக்கும் என்பதற்குப் பதில் மெத்தப் படித்த சிதம்பரம் போன்றவர்களே என்றுதான் போட நினைத்தேன். ஆனால் அப்படின்னா படிக்காதவன் எல்லாம் முட்டாளா? நீ எப்படி அப்படி கேட்கலாம் என்று ஒரு சிலர் கேட்பார்கள் என்பதால் அப்படி தேடிப் பார்த்து போட்டேன்.

  என் வரையில் இருக்கிற அரசியல் வாதிகளில் எவ்வ்வ்வளவோ தேவலை அவ்ர் என்று நினைப்பேன்.

  //உங்களின் பார்வையில் அல்லது கோணத்தில் சிதம்பரத்தின் செயல்கள் நல்லத்தனமாக இருக்கலாம். தவறே இல்லை.அது உங்களின் பார்வை.//

  அருமை. இந்த புரிதலை வணங்குகின்றேன்.

  மேற் குறிப்பிட்ட கேள்விகளில் எதற்கேனும் உங்களுக்கு பதில் தெரிந்தால் தெரியப் படுத்துங்கள். மீண்டும் ஒரு முறை நன்றி.
  said...
  செந்தில் குமரன் நான் என்ன சொல்ல வந்தேனோ அதை அப்படியே புரிந்துக் கொண்டுள்ளீர்கள். நன்றி.

  நன்றி கீதா. நாம் இதைப் பற்றி பேச வேண்டியது நிறைய்ய இருக்கிறது.
  said...
  நந்தா,

  உங்கள் தெளிவான பதிவுகளில் விருப்பு வெறுப்புக் கலக்காமல் இரண்டு பக்கங்களையும் விவரிக்கும் பாணி என்னைக் கவர்ந்த ஒன்று. பொன்ஸ் சொல்லும் வரலாறு எழுதச் சரியான பார்வை உங்களுக்கு இருக்கிறது என்று படுகிறது.

  தலைவர் என்பவர் கொம்பு முளைத்தவர் இல்லை. நம்மைப் போன்ற ஒரு மனிதர். தனது வாழ்க்கை முறையால் பலரின் கருத்தைக் கவர்ந்து விட்டிருக்கிறார், அவ்வளவுதான். பெரிய மனிதர்களாகக் கேள்விப் பட்டிருக்கும் ஒருவரை நேரில் சந்திக்கும் போது பல புரிதல்கள் புதிதாகக் கிடைத்து விடும்.

  பெரும்பாலானோர் சமவெளியில் நின்று விட "குணம் என்னும் குன்றேறி" நிற்பவரை எல்லோரும் பார்க்க முடிவதால் அவர் பெயர் பரவலாகி விடுகிறது அவ்வளவுதான். குன்றில் ஏறினாலும் அவரும் மனிதர்தானே!

  அன்புடன்,

  மா சிவகுமார்
  said...
  intha pakkathithil neenga gandhiji paththi mattumthaan yezhuthuvingala..

  illai yella thalaivarkalaiyum patriyum yezhuthap poreengala?

  nalla muyarchchi ithu:)
  said...
  intha pakkathithil neenga gandhiji paththi mattumthaan yezhuthuvingala..

  illai yella thalaivarkalaiyum patriyum yezhuthap poreengala?

  nalla muyarchchi ithu:)

Post a Comment