Home | About Me | E-Mail |

ஆன்மீகத்தின் பெயராலும், ஆகம விதிகளின் பெயராலும், கோயில்களில் நடைபெறும் மனித நேய மறுப்புகள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்த பின்புதான் நிற்குமோ என்பது எவராலும் அனுமானிக்க முடியாத ஒரு விஷயம்தான். ஒரு சில குறிப்பிட்ட சமுதாயத்தினரை கோயிலினுள்ளேயே நுழைய விடக்கூடாது என்று சொன்னதும், தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பதும், சொத்தை காரணங்களுக்காக கோயிலைப் புனிதப் படுத்தக் கிளம்பி விடுவதும்.... இன்னும் எத்தனையோ விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எந்த விஷயத்தையும் மதத்தின் பெயராலேயே அணுகும் தலைவர்களும், மததின் பெயரால் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்கும் ஜனஙகளும் இருக்கும் வரை இந்த அவலம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

சில நாட்களிற்கு முன்பு கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் போன்று, தற்போது ராமேசுவரத்தில்.இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ஆகம விதிகளின் படி மாற்று மதத்தவர் இந்துக் கோயிலகளினுள் நுழைவது மிகப் பெரியத் தீட்டு. அது கடவுளுக்கே செய்யும் துரோகம். அப்படி மீறி நடந்து விட்டால், ஒரு சில ஆயிரம் (லட்சம்) ரூபாய்களை செலவு செய்து ஒரு தீட்டு கழிக்கும் வைபவத்தை நடத்தி விட்டால் மட்டுமே மீண்டும் அந்த கோயில் புனிதம் அடைவது சாத்தியம். பொதுவாக கோயில்களில் நடைபெறும் இது போன்ற எந்த வைபவங்களிற்கும் காரணமாகச் சொல்லப்படுவது ஆகம விதிகள்தான். ஆனால் இந்த ஆகம விதிகள் பற்றி பலரும் பல கருத்துக்களை சொல்லுகின்றனர். எல்லா கோயில்களிலும் ஒரே மாதிரியான ஆகம விதிகள்தான் கடை பிடிக்கப்படுகிறதா? அவை உலகத்திலுள்ள எல்லாக் கோயில்களிலும் கடை பிடிக்கப் படுகிறதா? இவ்வளவு ஏன் . வட இந்தியாவிலாவது தீவிரமாகக் கடைபிடிக்கப் படுகிறதா? இது போன்ற பல விஷயங்கள் இன்னும் புரியாத புதிராகவே உள்ளன.

இந்து மதத்தில் மலிந்து கிடக்கும் மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம். இந்த மூட நம்பிக்கைகளையும் தாண்டி இந்து மதத்தை நேசித்தவ்ர்கள் பலர் உண்டு. அந்த காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் இந்து மதத்தை நேசித்தவர்களே. நம் எல்லோருக்கும் மேலே ஒருவன் உண்டு, அவன்தான் எல்லாமே என்ற தன்னடக்கத்தின் பொருட்டோ, தப்பு செஞ்சா நிச்சயம் அவனிடம் தண்டனை உண்டு என்ற தனி மனித ஒழுக்கத்தின் பொருட்டோ, அல்லது இந்து மதமும், பகவத்கீதையும் நேரடியாகவோ மறை முகமாகவோ சொல்லும் தத்துவங்களின் பால் கவரப் பட்டோ அவர்களில் பலர் இந்து மத்தை நேசித்தவர்களாய் இருக்கின்றனர். ஏன் கடவுளின் பெயரால் கருத்துக்களைச் சொன்னால் கேட்டு நடக்கத் தயாராகயிருக்கும் மக்கள் இந்த காலத்தை விட அந்த கால்த்தில் அதிகமாய் இருந்ததும், வேறு எதையும் விட இதன் மூலம் மக்களை தம்மை பின்பற்ற வைக்கலாம் என்று நினைத்து கூட தலைவர்கள் தாம் சார்ந்த மத்தை நேசித்திருக்கலாம்.

அப்படி தான் சார்ந்த மதத்தை நேசித்தவர்தான் மகாத்மா. பிற்காலத்தில் தானும் ஓர் தீவிர இந்துத்துவாவாக முத்திரைக் குத்தப் பட்டு விடுவோம் என்று மட்டும் அன்றே அவருக்கு தெரிந்திருந்தால் சத்திய சோதனை எழுதுவதற்குப் பதில் "நான் கண்ட இந்து மதம்" என்பது போன்ற தலைப்பில் ஏதேனும் ஒரு புத்தகத்தைதான் முதலில் எழுதியிருப்பார். அப்படி அவர் தீவிர இந்துவாக முன்னிலைப் படுத்த விமர்சகர்கள் சொல்லும் சில காரணங்கள்:

1. இறக்கும் தருவாயிலும் "ஹே ராம்" என்று சொன்னவர்தான் இவர்.இவர் ஏன் "ஈசுவர அல்லா தேரா நாம்" என்று சொல்ல வில்லை.

2. தனது அருகில் எப்போதும், பகவத் கீதா புத்தகத்தை வைத்திருந்தவர்தான் இவர். பல கூட்டங்களிலும் பெரும்பாலும் அதிலிருந்து மட்டுமே மேற்கோள்களை காட்டியவர் இவர்.

3. இந்து மதத்தில் வேரோடிக்கிடந்த மூடப்பழக்க வழக்கங்களையும், மனித நேயத்திற்குப் புறம்பான கட்டுப்பாடுகளையும் ஆராய்ச்சி செய்து இந்து மதத்தைக் கடுமையாக விமசித்து மேயோ எனும் வெளிநாட்டுப் பெண்மணி 1927 ல் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தார். அதை விமர்சனம் செய்து காந்தியடிகள் "யங் இந்தியா" பத்திரிக்கையில் "இந்தியாவிலுள்ள சாக்கடைகளை எல்லாம் திறந்து பார்த்து விட்டு இந்தியாவே சாக்கடைதான் என்று சொல்வது போல் இருக்கிறது இப்புத்தகம்" என்று எழுதியிருந்தார்.

இது போன்ற ஒரு சில வரலாற்று நிகழ்வுகளை முன்வைத்து காந்தியை விமர்சனம் செய்வோர் இருக்கின்றனர். ஆனால் இவர்களால் சரியாக பதில் சொல்ல முடியாத ஒன்று இருக்கிறது.

அப்படி காந்தி தீவிர இந்துத்துவா வாதியாக இருந்திருந்தால், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முதல் தூண்டுகோலாய் அவர்தான் இருந்திருப்பார். முஸ்லீம்களை தனியே பிரித்து அனுப்பி விட்டு இந்துக்களை மட்டும் வைத்து அவர் கனவு கண்ட ராம ராஜ்ஜியத்தை எளிதில் நிலை நாட்டியிருக்கலாம். இந்தியா, பாகிஸ்தானிற்கு தருவதாய் வாக்களித்திருந்த பணத்தை கண்டிப்பாக கொடுத்துதான் தீரவேண்டும் என்று தமது சகாக்களையே எதிர்த்து போராடியிருக்க மாட்டார்.

இவ்வளவு ஏன் முஸ்லீம்களுக்கு ஆதரவாகவே செயல் படுவதாக சொல்லி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்திருக்க மாட்டார். எந்த இந்துமத வெறியின்பாற்பட்டு காந்தியைச் சுட்டுக் கொன்றானோ அந்த கோட்சேக்கு இன்றும் மராட்டிய மாநிலத்தில் சங் பரிவார் அமைப்புகள் பிறந்த நாள் விழா கொண்டாடி வருகிறார்கள். "நான் கோட்சே பேசுகிறேன்" எனும் நாடகத்தின் மூலம் இன்றும் கோட்சேவின் புகழ் பரப்பி, காந்தியை இழிவுபடுத்தி வருகிறார்கள். ஒருவரே தீவிர இந்துத்துவா வாதியாகவும், இசுலாமிய ஆதரவாளராகவும் முத்திரை குத்தப் படுவது என்று பார்த்தால் அது இவராகத்தான் இருக்கும்.

இதையும் தாண்டி காந்திக்கு தமிழ்நாட்டில் ஒரு அவமதிப்பு நடந்திருக்கிறது. 1920 களில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய தென்னகம் வந்த காந்தி கன்னியாகுமரி சென்ற போது அப்பகுதி காங்கிரசார் கேட்டுக்கொண்டதால், அங்கிருந்த அம்மன் கோயிலுக்குள் செல்ல முயலும் போது அந்த ஆலய அதிகாரிகளால் அனுமதிக்க மறுக்கப்பட்டார். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் "காந்தியடிகள் கடல் தாண்டி மேல்நாடு சென்று படித்து வந்தவர். ஆகம விதிகளின் படி இவர் இந்து மதத்திலிருந்து மதப்பிரஷ்டம் செய்யப்பட்டவ்ர். ஆகையால் மிலேச்சருக்கு ஆலயத்தில் இடமில்லை என்று ஆகம விதிகளை சொல்லி அனுமதி மறுக்கப்பட்டது.

அதே ஆலய மனிதர்கள்தான் சில காலம் கழித்து கன்னியாகுமரி வந்த நேருவை ஆலயத்திற்கு வந்து அம்மனை தரிசிக்கச்சொல்லி அழைப்பு விடுத்தனர். நேருவும் ஒரு மிலேச்சரே. அப்படியிருக்கையில் அவர்களது இந்த மன மாற்றத்திற்குக் காரணம் என்ன? அப்போது மட்டும் ஆகம விதிகள் தடுக்காதா? இது எப்படி சாத்தியமாயிற்று?

வேறு ஒன்றுமில்லை. அப்போது கன்னியாகுமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்ததாய் இருந்தது. அந்த சமஸ்தானத்து மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிற்கு அப்போது எற்பட்ட தீவிர நோயின் காரணமாக அவர்கள் இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை செய்தால்தான் குணமடையும் என்ற நிலை ஏற்பட்டது. அதனால் அவர்களும் கப்பலேறி கடல் கடந்து சென்று சிகிச்சை முடித்து திரும்பினர்.

அப்போது அந்த சமஸ்தானத்து திவானாக இருந்த சர்.சி.பி.இராமசாமி அய்யங்கார் மன்னர் குடும்பத்திற்காக ஆகம விதிகளை மாற்றியமைத்தார். அதனாலேயே அதற்குப் பின் அங்கு வந்த நேருவுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. ஆனால் காந்தியடிகளிற்கு அனுமதி மறுக்கப்பட்ட இந்த கோயிலில் நுழைய எனக்கும் அவசியமில்லை என்று கூறி மறுத்து விட்டார்.

இத்தனை கேள்விகளையும், குழப்பங்களையும் வைத்து காந்தியடிகள் தீவிர இந்து வெறியரா? அல்லவா? என்பதை அவரவர்களே முடிவு செய்து கொள்ளட்டும். ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. ஆகம விதிகள் என்பது ஒரு சிலர் தமது விருப்பு, வெறுப்பு வசதிகளுக்கேற்ப, சுயலாபத்திற்காக, ஒட்டு மொத்த மனிதாபிமானத்தையும் எதிர்த்து பயன்படுத்தி வருகின்றனரே தவிர வேதங்களும் மதங்களும் இவர்களிற்கு ஒரு பொருட்டே அல்ல. சாமானியரிடமிருந்து தன்னை பிரித்து உயர்த்திக் காண்பித்துக் கொள்ளவும், காசு தேடி பிழைப்பு நடத்தவும் ஆகம விதிகள் கால காலமாய் சொல்லப்பட்டு வருகிறது.

நேற்று குருவாயூர். இன்று ராமேசுவரம். நாளை???

13 Comments:

  1. said...
    உங்க‌ளை எட்டு ஆட்ட‌த்திற்கு அழைத்திருக்கிறேன். இதை சொடுக்கி பார்க்க‌வும்
    http://premkumarpec.blogspot.com/2007/06/8-1.html
    Anonymous said...
    போகிற போக்கில் சராமாரியாக பல தகவல்களைச் சொல்லிவிட்டு சென்றிருக்கிறீர்கள் நந்தா.

    //ஒருவரே தீவிர இந்துத்துவா வாதியாகவும், இசுலாமிய ஆதரவாளராகவும் முத்திரை குத்தப் படுவது என்று பார்த்தால் அது இவராகத்தான் இருக்கும்.//

    உங்களுடைய போன பதிவில் நீங்கள் கேட்ட முதல் கேள்விக்கு இதில் பதில் இருக்கிரதோ?யோசிக்க வெக்கறீங்களே?

    //ஒன்று மட்டும் புரிகிறது. ஆகம விதிகள் என்பது ஒரு சிலர் தமது விருப்பு, வெறுப்பு வசதிகளுக்கேற்ப, சுயலாபத்திற்காக, ஒட்டு மொத்த மனிதாபிமானத்தையும் எதிர்த்து பயன்படுத்தி வருகின்றனரே தவிர வேதங்களும் மதங்களும் இவர்களிற்கு ஒரு பொருட்டே அல்ல. சாமானியரிடமிருந்து தன்னை பிரித்து உயர்த்திக் காண்பித்துக் கொள்ளவும், காசு தேடி பிழைப்பு நடத்தவும் ஆகம விதிகள் கால காலமாய் சொல்லப்பட்டு வருகிறது. //

    சொல்ல வந்ததை அழகாய் சொல்லியுள்ளீர்கள். ஒரே சமயத்தில் (ஆகம விதிகள், மகாத்மா)என்று இரட்டைக் குதிரைகள் மீது பயணம் செய்து இரண்டையும் மிக அழகாய் முடிச்சு போட்டுக் காட்டியுள்ளீர்கள்.

    என்னமோ இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. தனி மடலில் பேசுகிறேன். தமிழ்ல அதிகம் டைப் செய்ய முடியலை. புதுசுதான.

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
    said...
    நன்றி பாலாஜி.

    //உங்களுடைய போன பதிவில் நீங்கள் கேட்ட முதல் கேள்விக்கு இதில் பதில் இருக்கிரதோ?யோசிக்க வெக்கறீங்களே?//

    பதில் எல்லாம் சொல்லலைங்க. நடந்த வரலாற்று நிகழ்வுகளையும், அது குறித்து எனக்குள் தோன்றிய கேள்விகள் மட்டுமே இது. எனக்குத் தெரியாத பக்கத்தை யாரேனும் சொன்னால் புரிந்து கொள்ளத் தயாராகவே இருக்கிறேன் இப்போதும். ஆனால் இந்த வினாடி வரை ந்த கேள்விக்கு இதுதான் என்னுடைய எண்ணம்.

    //சொல்ல வந்ததை அழகாய் சொல்லியுள்ளீர்கள். ஒரே சமயத்தில் (ஆகம விதிகள், மகாத்மா)என்று இரட்டைக் குதிரைகள் மீது பயணம் செய்து இரண்டையும் மிக அழகாய் முடிச்சு போட்டுக் காட்டியுள்ளீர்கள்.

    என்னமோ இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. தனி மடலில் பேசுகிறேன். தமிழ்ல அதிகம் டைப் செய்ய முடியலை. புதுசுதான.//

    நன்றி பாலாஜி. நிறைய்யப் பேசலாம்.
    said...
    //எந்த விஷயத்தையும் மதத்தின் பெயராலேயே அணுகும் தலைவர்களும், மததின் பெயரால் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்கும் ஜனஙகளும் இருக்கும் வரை இந்த அவலம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.// இதுதாங்க பிரச்சனையே. மதத்தின் பெயரால் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு நிராகரிக்கும் கூட்டத்தையும் இந்த லிஸ்ட்ல சேத்துக்குங்க. கண்மூடித்தனமான நம்பிக்கை எவ்வளவு தப்போ அதே அளவு ஆபத்தானதுதான் கண்மூடித் தனமான எதிர்ப்பும். நீங்க சொல்ற காந்தி எதிர்ப்பாளர்களோட நிலை அதுதான். இந்து மதத்தில் நிறைய தவறுகள் இருக்குங்கறதாலேயே அந்த பெயரையே ஏதோ தீண்டத்தகாத பொருளாக்கிவிட்டார்கள் இவர்கள்.
    //ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. ஆகம விதிகள் என்பது ஒரு சிலர் தமது விருப்பு, வெறுப்பு வசதிகளுக்கேற்ப, சுயலாபத்திற்காக, ஒட்டு மொத்த மனிதாபிமானத்தையும் எதிர்த்து பயன்படுத்தி வருகின்றனரே தவிர வேதங்களும் மதங்களும் இவர்களிற்கு ஒரு பொருட்டே அல்ல. // இதுதான் நிஜம். எப்பவுமே குப்பைகள் தண்ணீரின் மேலேதான் மிதக்கும். அது போலவே இவர்களும் அதிகமாய் வெளித்தெரிகிறார்கள். இந்த குப்பைகளை நீக்கி தண்ணீரை சுத்தப்படுத்துவதுதான் சரியான தீர்வாக இருக்க முடியுமே ஒழிய, தண்ணீரின் மேல் குப்பை மிதக்கிறது. எனவே இந்த குளத்தையே மூடிவிடலாம் என்று சொல்வது சரியாகாது. இந்த அற்பர்களை தூரெடுத்து மதத்தை உண்மையிலேயே புனிதப் படுத்தவேண்டியதுதான் இன்று செய்ய வேண்டியது.
    Anonymous said...
    //திவானாக இருந்த சர்.சி.பி.இராமசாமி அய்யங்கார்//

    சர் சி.பி.இராமசாமி அய்யர்
    said...
    நன்றி லட்சுமி.

    அனானி. எனக்குத் தெரிந்தவரை அது சர்.சி.பி.ராமசாமி அய்யங்கார்தான். அப்புறம் இதைச் சொல்ல அனானியாக ஏன் வரவேண்டும். அட்லீஸ்ட் பெயரையாவது சொல்லிட்டுப் போங்கள் நண்பரே.
    said...
    சர்.சிபி.ராமசாமி ஐயங்காரே இல்லை என உறுதியாகச் சொல்ல முடியும். ஐயர் தான். அந்த வாக்குவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆகம விதிகளின்படி வட இந்தியக் கோயில்கள் பெரும்பாலும் கட்டப் படுவது இல்லை. தென் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் தான் அது அதிகம் கடைப்பிடிக்கப் படுகிறது. தவிர, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலினுள் நுழைய அனுமதி மறுப்பதின் முக்கிய காரணம் "எதிர்மறை எண்ணங்கள்" அங்கு வரும் பக்தர்களைப் பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் தான். எண்ண அலைகளின் தாக்கம் உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன். திரு கலாம் அவர்கள் திருப்பதி கோவிலில் அனுமதிக்கப் பட்ட விவரமும் அறிந்து கொள்ளவும். கோவிலின் சட்டதிட்டங்களுக்கும், நம்பிக்கைக்கும் கட்டுப் படுவதாய்க் கையெழுத்து அவரே கேட்டு வாங்கி போட்டுக் கொடுத்து விட்டுப் பின் தரிசனமும் செய்தார். ஆகவே இது நம்பிக்கையைப் பொறுத்தது. மற்ற விவரங்கள் கூடிய விரைவில். நேரம் தான் இருப்பதில்லை! :)
    said...
    நன்றி கீதா. ஆமா நான் வேறு சிலரிடம் கேட்டு உறுதி செய்து கொண்டேன். அது அய்யர்தான்.

    ஆழ்வார்பேட்டையில் அவர் பெயரில் ஒரு சாலை கூட இருக்கிறது. (உபயம் : லக்ஷ்மி)

    // மற்ற விவரங்கள் கூடிய விரைவில். நேரம் தான் இருப்பதில்லை! ://

    காத்திருக்கிறேன். பேசலாம்
    said...
    காந்தி தன்னைத் தீண்டத் தகாதவராக அறிவித்துக் கொண்டு 'எல்லா இந்துக்களையும் அனுமதிக்காத கோயில்களுக்குள் போவதில்லை' என்று இருந்ததாகப் படித்திருக்கிறேன். கன்னியாகுமரி அம்மன் கோயிலுக்குப் போக விரும்பியிருப்பாரா என்ன?

    மற்றபடி, நீங்கள் சொல்லுவது போல காந்தி மதப் பற்று நிறைந்த (தன் மதத்தை நேசித்த), செகியூலர் வாழ்க்கை (பிற மதங்களை மதித்து) வாழ்ந்தார் என்றுதான் நினைக்கிறேன்.

    அன்புடன்,

    மா சிவகுமார்
    said...
    // ஒருவரே தீவிர இந்துத்துவா வாதியாகவும், இசுலாமிய //
    மகாத்மாவை ஏன் ஒரு மனித நேயராக உங்களால் பார்க்க
    முடியவில்லை? ஏனென்றால், 'இந்து- இஸ்லாம்-கிருஸ்தவ'
    என்ற இந்த மூன்றடுக்கு வார்த்தைகளே பழகிப்போன ஒரு
    சூழலில், ஒட்டு மொத்த மனித நலனுக்காக தன்னையே
    தீய்த்து வருத்திக்கொண்ட அந்த மேலான ஆத்மாவின்
    பரிசுத்தம் புரியாதலால் தான்...
    இன்னொன்று..
    ஆகம விதிகள் என்பது ஒரு கோயிலின் உள்ளே போவது--
    வெளியே வருவது சமாச்சாரம் மட்டுமில்லை..
    ஸ்தபதிகளைக் கேட்டால் சொல்வார்கள்: கடவுள் சிலை
    செய்ய எந்தக் கல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும்:
    சுதைக் கலவை எப்படி கலப்பது; எத்தனை நாள் எப்படி
    எதில் ஊற வைக்க வேண்டும்; இதையெல்லாம் பற்றி
    ஆகம விதிகள் என்ன சொல்கிறது? .. என்று அது
    வரிவான சப்ஜெக்ட்..
    நாளாவட்டத்தில், எல்லாமே சிதைந்து போனமாதிரி
    ஆளுவோர், அதிகார வர்க்கமென்று இதுவும் சிதைந்து
    போனதை வைத்துக் கொண்டு, மூலமே முற்றும் கோணல்
    என்பது தவறான அணுகுமுறை என்பதை நீங்களே
    ஒப்புக்கொள்வீர்களென்று நினைக்கிறேன்..
    said...
    //மற்றபடி, நீங்கள் சொல்லுவது போல காந்தி மதப் பற்று நிறைந்த (தன் மதத்தை நேசித்த), செகியூலர் வாழ்க்கை (பிற மதங்களை மதித்து) வாழ்ந்தார் என்றுதான் நினைக்கிறேன். //

    நன்றி சிவகுமார். நடந்த சம்பவங்களை வைத்து நான் கொண்டிருக்கும் எண்ணமும் அதேதான்.

    //'எல்லா இந்துக்களையும் அனுமதிக்காத கோயில்களுக்குள் போவதில்லை' என்று இருந்ததாகப் படித்திருக்கிறேன். கன்னியாகுமரி அம்மன் கோயிலுக்குப் போக விரும்பியிருப்பாரா என்ன?//

    இதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தனது பின்னே எப்போதும் வரும் எல்லாரையும் உள்ளே நுழைய அனுமதிக்காததால் கோயில்களிற்குப் பொதுவாகவே அவர் போக விரும்பியதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவும் நடந்திருக்கிறது.

    இதை "ராஜாஜி நூற்றுக்கு நூறு" எனும் விமர்சன நூலில் பரந்தாமன் எனும் எழுத்தாளாரும் உறுதி செய்துள்ளார். இவர் சோவின் அபிமானத்துக்குரிய எழுத்தாளர்.
    said...
    //// ஒருவரே தீவிர இந்துத்துவா வாதியாகவும், இசுலாமிய //
    மகாத்மாவை ஏன் ஒரு மனித நேயராக உங்களால் பார்க்க
    முடியவில்லை? ஏனென்றால், 'இந்து- இஸ்லாம்-கிருஸ்தவ'
    என்ற இந்த மூன்றடுக்கு வார்த்தைகளே பழகிப்போன ஒரு
    சூழலில், ஒட்டு மொத்த மனித நலனுக்காக தன்னையே
    தீய்த்து வருத்திக்கொண்ட அந்த மேலான ஆத்மாவின்
    பரிசுத்தம் புரியாதலால் தான்...//

    வணக்கம் ஜீ.வி. நீங்க இந்த கட்டுரையும், இதற்கு முந்தய கட்டுரையும் முழுதாய் படித்தீர்களா? நான் இதைத்தான் சொல்ல வந்தேன் என்று எப்படி நினைக்கிறீர்கள். நீங்கள் மேற்கோள் காட்டியதிலேயே முழு பத்தியையும் படித்தாலேயே தெரிந்து விடுமே நான் என்ன சொல்ல வருகிறேனென்று. தயவுசெய்து இன்னொரு முறை படித்துப் பார்க்கவும்.

    //நாளாவட்டத்தில், எல்லாமே சிதைந்து போனமாதிரி
    ஆளுவோர், அதிகார வர்க்கமென்று இதுவும் சிதைந்து
    போனதை வைத்துக் கொண்டு, //

    இதைத்தான் நானும் சொல்ல வருகிறேன். உண்மையிலேயே ஆகம விதிகள் தெளிவாய் எழுதப்பட்டிருந்தால், மத நம்பிக்கைகளின் காரணமாக அது கண்டிப்பாக கோயில்களில் கடைபிடிக்கப்ட வேண்டும் என்று வலியுறுத்துவீராயாயின், அதை நிலையான ஒன்றாக , Transparency யாக அனைவருக்கும் தெரியப்படுத்தி கடைபிடித்தால் கூட பரவாயில்லை.

    நான் சொல்ல வருவது ஒரு சிலர் ச்மயம் போல தங்கள் வசதிக்கேற்ப அந்த விதிகளை வளைத்துக் கொள்வது மிகத் தவறானது என்பதுதான்.

    அதைவிட ஒன்று ஆகம விதிகளோ, ஆன்மீகமோ எதன் பொருட்டும் மனித நேயம் சிதைக்கப் படுமானால், அதை மதிக்கத் தேவையில்லை என்பதே.

    வருகைக்கு நன்றி.
    said...
    நந்தா உங்களை எட்டு போடக் கூப்பிட்டு இருக்கோம் ஒரு எட்டு நம்ம கச்சேரி பக்கம் எட்டிப் பாருங்க...

    அன்புடன்,
    தேவ்

Post a Comment